சென்னை, மே 18- பேரறிவாளன் விடுதலையை வரவேற்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இது மாநில சுயாட்சிக்கும் கூட்டாட்சி தத்துவத்துக் கும் கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் கூறியுள்ளார். பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- 32 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இது நீதி - சட்டம் - அரசியல் - நிர்வாகவியல் வரலாற்றில் இடம் பெறத்தக்க தீர்ப்பு. தமிழக அரசின் வாதங்களை முழுமையாக ஏற்று இந்த இறுதித் தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது.
மாநில அரசின் அழுத்தம்!
தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து தன்னை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் மனுத் தாக்கல் செய்திருந்தார். தமிழக அரசு இந்த மனு மீதான விவாதத்தில் தனது அழுத்தமான கருத்தை முன் வைத்து வாதிட்டது. தமிழக அரசின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், “பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. அரசின் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினால் போதுமானது”என்று அழுத்தமாக வாதிட்டார். மனிதாபிமான - மனித உரிமை அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை என்பது வரவேற்கத்தக்க தாக அமைந்திருக்கும் அதே நிலை யில் மாநிலத்தின் உரிமையானது இந்தத் தீர்ப்பின் மூலமாக மிகக் கம்பீரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது. இது இந்த வழக்கின் மற்றொரு மாபெரும் பரிமாணம் ஆகும்.
ஆளுநருக்கு குட்டு!
‘மாநில அரசின் கொள்கை முடி வில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை’ என்று நீதிபதிகள் சொல்லி இருப்பது மிகமிக முக்கியமானது ஆகும். ‘ஆளுநர் செயல்படாத நேரத்தில் நீதிமன்றம் தலையிடும்’ என்று சொல்லி இருக்கிறார்கள் நீதிபதிகள். ‘இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசிடம் கேட்கத் தேவை யில்லை’ என்பதையும் தெளிவு படுத்தியிருக்கிறார்கள் நீதிபதிகள். இதன் மூலமாக மாநில அரசின் அரசியல், கொள்கை முடிவுகளில் தனது அதிகார எல்லைகளைத் தாண்டி ஆளுநர்கள் தலையிட அதிகாரம் இல்லை என்பது மேலும் மேலும் உறுதி ஆகியிருக்கிறது. இது தமிழக அரசால், இந்தியா முழுமைக்குமான மாநில சுயாட்சி - கூட்டாட்சித் தத்துவத் துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
விடுதலை காற்று...
32 ஆண்டு கால வாழ்வை சிறைக் கம்பிகளுக்கு இடையே தொலைத்த அந்த இளைஞர் விடுதலைக் காற்றை சுவாசிக்க இருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள். தன் மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் களைந்திட எந்த எல்லை வரை சென்றும் போராடத் தயங்காத அற்புதம்மாள், தாய்மையின் இலக்கணம். பெண்மையின் திண் மையை அவர் நிரூபித்துக் காட்டியிருக் கிறார். பேரறிவாளன் என்ற தனிமனி தனின் விடுதலையாக மட்டுமல்ல, கூட்டாட்சித் தத்துவத்துக்கும், மாநில சுயாட்சி மாண்புக்கும் இலக்க ணமாகவும் அமைந்துவிட்ட இத்தீர்ப்பு மீண்டும் மீண்டும் வரலாற் றில் நினைவுகூரத்தக்கது. இவ்வாறுமுதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய முயற்சி!
பேரறிவாளன் விடுதலை தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகை யில், “இதே வழக்கில் சிறையில் உள்ள மற்ற 6 பேர் விடுதலை குறித்து தமிழக அரசின் நிலைபாடு என்ன? என்பது குறித்த கேள்விக்கு, நீதிமன்றத் தீர்ப்பின் முழு விவரம் இதுவரையில் வரவில்லை. அது வந்ததற்குப் பிறகு, சட்ட வல்லு நர்களோடு நாங்கள் கலந்துபேசி, வழக்கறிஞர்களோடு கலந்துபேசி அதற்குப் பிறகு அவர்களையும் விடு தலை செய்வதற்கான முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபடும்” என்றார்.