சென்னை,மார்ச் 18 - தமிழகத்தின் மேம்பாட்டுக்கு முன்னோட்டமான கொள்கைதான நிதி நிலை அறிக்கை என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராசன் சட்டப் பேரவையில் தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கை நிதிநிலை அறிக்கை என்ற எல்லையையும் தாண்டி, தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்கு முன்னோட்டமான கொள்கை அறிக்கையாக அமைந்துள்ளது. திமுக அரசு கடந்தாண்டு மே மாதம் 7ஆம் தேதி பொறுப்பேற்றது. பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் அனைத்துத் துறைகளும் அதலபாதாளத்துக்குப் போனது. அதிலும் குறிப்பாக நிதித்துறை அடைந்த மிகமோசமான நிலைமை என்பது கவலைக்கிடமானது ஆகும். 5.5 லட்சம் கோடி ரூபாயைக் கடனாக வைத்துவிட்டு நிதியைச் சூறையாடிய அரசாக, அ.தி.மு.க. அரசு மக்களால் தோற்கடிக்கப்பட்டது. இத்தகைய நிதிநெருக்கடியான நிலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றாலும், கடந்த காலக் கசப்புகளை சமாதானமாகச் சொல்லிக் கொள்ளாமல், பல்வேறு ஆக்கபூர்வமான உதவிகளை மக்களுக்கு திமுக அரசு செய்தது. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலான வாக்குறுதிகளை கடந்த பத்து மாத காலத்தில் நிறைவேற்றிக் காட்டி இருக்கிறோம். கொரோனா என்ற பெருந்தொற்று ஒருபக்கம் - மழை வெள்ளப் பாதிப்புகள் மறுபக்கம் என தமிழ்நாடு அரசுக்கு இரண்டு பக்கம் இருந்து நிதிநெருக்கடியை உருவாக்கினாலும் - அரசின் துல்லியமான திட்டமிடுதல்களின் காரணமாக நிதி நெருக்கடியைச் சமாளித்தோம்.
குறைந்த வருவாய் பற்றாக்குறை
இருக்கும் நிதியை முறைப்படி கையாளுதல், தேவையான செலவினங்களை மட்டும் செய்தல், வருவாயை அதிகப்படுத்துதல், தேவையற்ற செலவுகளைக் குறைத்தல் ஆகிய திட்டமிடுதல்களின் மூலமாக அரசுக்கு வருவாய் அதிகமாகி உள்ளது. செலவு குறைந்துள்ளது. அதை விட முக்கியமாக வருவாய்ப் பற்றாக்குறை என்பதும் குறைந்துள்ளது. இது மிகமுக்கியமான சாதனையாகும். அரசுப் பள்ளிகளில் படித்து பட்டப்படிப்பில் சேரும் மாணவியர்க்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தின் மூலமாக மாணவிகள் அனைவரும் இனி கல்லூரிகளை நோக்கி வருவார்கள். சமூகத்தில் அவர்களது பங்களிப்பு என்பது இனி எக்காரணம் கொண்டும் பள்ளிக்கல்வியோடு தடைபடாது.
நிதியமைச்சர் வாக்குறுதி
ஆண்டுக்கு ஐந்து லட்சம் இளைஞர்களை மேம்படுத்தும் எனது கனவுத்திட்டமான, ‘நான் முதல்வன்’ திட்டமும், இல்லம் தேடிக் கல்வி, ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேருவோருக்கான பயிற்சி என தமிழ்நாட்டின் இளைய சமுதாயத்தை முழுமையாக முன்னேற்றும் குறிக்கோளை நோக்கமாகக் கொண்டு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கின்றன. மகளிர் உரிமைத் தொகை தருவதற்கான நடவடிக்கைகளை தொடங்கிவிட்டதாக நிதி அமைச்சர் வாக்குறுதியை உறுதி செய்துள்ளார். நீர்நிலைகள் பராமரித்தல், உள்கட்டமைப்பு வசதிகள், மருத்துவம், மகளிர் நலம், சுற்றுலா, இந்துசமய அறநிலையத் துறை, சூழலியல், சாலைகள், பாலங்கள், அணைகள், சமத்துவபுரங்கள் சீரமைப்பு, புதிய மாநகராட்சிகளுக்கு நிதி, புதிய நகராட்சிகளுக்கு நிதி, சிங்காரச் சென்னைத் திட்டம், திறன்மிகு நகரங்கள் மேம்பாடு, குடிநீர்த் திட்டங்கள், மதுரவாயல் - சென்னை துறைமுகம் இரட்டை அடுக்கு உயர்மட்டப் பாலம், புதிய டீசல் பேருந்துகள், புதிய மின் பேருந்துகள், புத்தொழில் மையங்கள்- என அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் நோக்கிய பயணத்துக்கான கலங்கரை விளக்கமாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. “இந்த நிதிநிலை அறிக்கை என்பது ஒரு மாபெரும் மாற்றத்துக்கான தொடக்கம்” என்று நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார். மாற்றத்துக்கான தொடக்கம் மட்டுமல்ல, மேன்மையடையும் தமிழ்நாடு என்பதற்கான தொடக்கமாகவே நான் கருதுகிறேன். பத்தாண்டு காலச் சரிவைச் சரிசெய்வது மட்டுமல்ல, அடுத்த 25 ஆண்டு கால உயர்வை உணர்த்துவதாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.