tamilnadu

மாணவர்களின் சிந்தனைத்திறனை மேம்படுத்தும் வகையில் கல்வித் திட்டத்தில் மாறுதல்கள்

மதுரை, ஏப்.13-கல்வி கற்கும் மாணவர்களை, ஆரோக்கியமான, சுதந்திரமான சிந்தனையாளர்களாக உருவாக்காமல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான பணியாளர்களாகவும், தொழில் வளாகங்களில் கொத்தடிமைகளாகவும் ஏற்படுத்துகிற நிலைமை மாற்றப்பட வேண்டும் என்றும், இதற்கேற்றபடி கல்வித் திட்டங்களில் மாறுதல்கள் கொண்டு வர வெற்றி பெற்றபின் உரிய தலையீடுகள் செய்ய வேண்டும் என்றும் அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்களுக்கு தமிழக உயர்கல்வி பாதுகாப்பு இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. உயர்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.முரளி இது குறித்து வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில், அறம் சார்ந்த உயர்கல்வியின் தரத்தை உறுதி செய்தால்தான், நாட்டில் லஞ்சம், ஊழல், பாலியல், வன்கொடுமை போன்ற தீமைகளை அகற்ற இயலும் என்றும், தேர்தல் களத்தில் வாக்காளர்களும், வேட்பாளர்களும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பிரச்சனை குறித்து அக்கறை செலுத்தி விவாதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும், மாணவர்களுக்கு சரியான அரசியல் குறித்த புரிதல்களை உருவாக்கும் வகையில் கல்லூரி மற்றும் பல் கலைக்கழகங்களில், ஜனநாயகச் சூழல் வளர்த்தெடுக்கப்படுதல், முடிவெடுக்கும் அமைப்புகளில் மாணவர் பிரதிநிதிகள் இடம் பெறச் செய்தல், 65 ஆண்டுகளாக இயங்கிவரும் பல்கலைக் கழக மானியக்குழுவைக் கலைத்திட நடக்கும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தியுள்ளது. குறைந்த கட்டணத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்குத் தரமான உயர்கல்வி, அரசியல் அறிவியல் குறித்த பாடத்திட்டங்களைக் கட்டாயமாக இடம்பெறச் செய்தல், ஆராய்ச்சி நிறுவனங்களில் அரசின் வீண் தலையீடுகளைத் தவிர்ப்பது, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகங்களில் வெளிப்படைத்தன்மை, ஊழல் மற்றும் விதிமீறல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளது.சுயநிதி மற்றம் தற்காலிக பேராசிரியர்களுக்கும் பணிப் பாதுகாப்பு, பணி நிரந்தரம் மற்றும் யுஜிசி நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத் தொகையை உறுதிப்படுத்துதல், கல்வி நிலையங்களில் சமூக நீதி கொள்கை முறையான அமலாக்கம் ஆகிய அம்சங்களை வலியுறுத்தியுள்ள உயர்கல்வி பாதுகாப்பு இயக்கம், இத்தகைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்யும் வகையில் தொகுதி தோறும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

;