tamilnadu

img

நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவின் வருகை, அலுவல் மொழி விதிகளுக்கு முரணானது - சு.வெங்கடேசன் எம்.பி., எதிர்ப்பு

மதுரை,மே 18- நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் மதுரை வருகை,  அலுவல் மொழி விதிகளுக்கு முரணானது என்று  எதிர்ப்பு தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், அக்குழு மதுரை பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவின் துணைக் குழு துணைத் தலைவர்  பார்ட்ரு ஹரி மக்தாப், அமைப்பாளர் பேரா ரீட்டா  பகுகுணா ஜோஷி ஆகியோருக்கு சு.வெங்கடேசன் எம்.பி எழுதியுள்ள கடிதம் வருமாறு: நாடாளுமன்ற அலு வல் மொழிக் குழுவின் துணைக்குழு மதுரைக் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதி களில் மே 19, மே 20 ஆகிய தேதிகளில் சுற்றுப் பயணம் செய்து அலுவல் மொழி அமலாக்கம் பற்றிய ஆய்வை செய்யப் போகிறது என்ற தகவல் எனது கவனத்திற்கு வந்தது.

நாடாளுமன்றத்தின் இரு அவை களைச் சேர்ந்த சக உறுப்பினர்கள் மதுரைக்கு வருவதில் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சிதான். ஆனால் அவர்கள் வருகிற அலுவல் ரீதியான நோக்கம் பற்றிய கருத்துக்களையே பதிவு செய்துள்ளேன்.  அலுவல் மொழி விதிகள் 1976 (1987, 2007, 2011 இல் திருத்தப் பட்டது)  தொடர்ந்து பல ஆண்டு களாக மீறப்பட்டு வருகிறது. அதன்  நோக்கம் இந்தி பேசாத மாநிலங்களின் மீது இந்தியைத் திணிப்பதாகவே சுருங்கிவிட்டது. 

அலுவல் மொழி விதிகள் 1976 பல  ஆண்டு விவாதங்கள், போராட்டங் களின் பின்புலத்தில் உருவானது. அவை எல்லாம் இம்மாபெரும் நாட்டின் மொழிப் பன்மைத்துவம் பாது காக்கப்பட நடந்தேறிய நிகழ்வுகளே ஆகும். எங்கள் தமிழ்நாடு இதற்கான போராட்டங்களில் 1938 இல் இருந்து 1965 வரை முன் வரிசையில் நின்ற மாநிலம். முன்னாள் பிரதமர் ஜவகர் லால் நேரு 1963 இல் இந்தி எப்போதுமே திணிக்கப்படாது என்ற உறுதிமொழியை தந்தார். 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பின்னர் அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, நேரு அவர்களின் உறுதி மொழியை மீண்டும் புதுப்பித்தார்.  நாடாளுமன்றத்தின் ஆவணங்கள் இது பற்றிய முக்கிய விவாதங்களை காண்பிக்கக் கூடியவை. அவை எவ்வாறு தேசந்தழுவிய கருத்தொற்று மை உருவானது என்பதற்கான சாட்சியமும் ஆகும். 

இப்பின்புலத்தில்தான் அலுவல்  மொழி விதிகள் 1976 உருவாக்கப் பட்டது. அது இந்திய மாநிலங்களை “ஏ” “பி” “சி” என மூன்று வகைகளாக பிரித்து, மொழிப் பன்மைத்துவத்தை மதிக்கக் கூடிய வகையில் வெவ்வேறு உள்ளடக்கம் கொண்ட விதிகளையும் வகுத்தது. அதன் சாரம் இந்தி பேசாத  மாநிலங்கள் மீது இந்தி திணிக்கப் படக் கூடாது என்பதுதான். எங்கள்  தமிழ்நாடு அவ்விதிகளில் தனித்துவ மான இடத்தைப் பெற்று இருக்கிறது. அதாவது அந்த விதிகளே தமிழ்நாட்டி ற்கு பொருந்தாது, விதிவிலக்கு உடையது என்பதே.  மேற்கூறிய கருத்துக்களின் அடிப்படையில் அலுவல் மொழி விதிகள் தொடர்ந்து மீறப்படும் இரண்டு  அம்சங்களை சுட்டிக் காட்ட விழை கிறேன். 

ஒன்று,  நாடாளுமன்ற அலுவல் மொழி துணைக் குழுவின் வருகையே தேவையற்றது. அலுவல் மொழி விதி களுக்கே முரணானது. காரணம், தமிழ்நாடு குறிப்பான விதிவிலக்கை அவ்விதிகளில் பெற்று இருப்பதுதான். 1976 அலுவல் மொழி விதிகள் (G.S.R 1052) - அலுவல் மொழிச் சட்டம்  1963 (19) பிரிவு 3 துணைப் பிரிவு (4)  உடன் இணைந்த பிரிவு 8 இன் படியாக  ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்ட விதி களின் 1 (ii) கூறுவது இது.  “இந்த விதிகள் இந்தியா முழுமைக்கும் - தமிழ்நாடு மாநிலம் நீங்கலாக - பொருந்தும்” - விதிகள் இவ்வளவு தெளிவாக உள்ளன. தமிழ்நாட்டை அவ்விதிகளின் வரம்பி ற்குள்ளேயே கொண்டு வரவில்லை. அவ்விதிகள் பிரித்துள்ள  “ஏ” “பி” “சி”  என்று மூன்று வகை மாநிலங்களின் பட்டியலில் எதிலுமே தமிழ்நாடு இடம் பெறவில்லை. இப்படி இருக்கையில் அலுவல் மொழி துணைக் குழுவின் மதுரை வருகை எதற்கு, என்ன தர்க்க  ரீதியிலான தேவை என்று புரிந்து கொள்ள முடியவில்லை. 

தமிழகத்தில் ஒன்றிய அரசு அலுவலகங்களில் இந்தி பிரிவு எதற்கு?

இரண்டாவதாக, தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு நிறுவனங்கள்/ துறை அலுவலகங்களில் “அலுவல்  மொழி பிரிவு/ இந்தி பிரிவு” அமைக்கப் பட்டு இருப்பது ஏன்? விதிகளின்படி தேவையே இல்லையே? 

எனவே இரண்டு வேண்டுகோள் களை முன்வைக்க விழைகிறேன். 

1) மதுரைக்கு திட்டமிடப்பட்டுள்ள அலு வல்மொழி துணைக்குழு வருகை யை ரத்து செய்யுங்கள். எதிர்காலத்தி லும் தமிழ்நாட்டிற்கு துணைக்குழு வருகையை திட்டமிடாதீர்கள். 

2)ஏற்கெனவே ஒன்றிய அரசு  நிறுவனங்கள்/ துறை அலுவலகங் களில் அமைக்கப்பட்டுள்ள  “அலுவல்  மொழி பிரிவு/ இந்தி பிரிவு” களை கலைத்து விட வேண்டும். 

இவ்வேண்டுகோள்கள் இரண்டை யும் அலுவல் மொழி விதிகள் 1976  (1987, 2007, 2011 இல் திருத்தப்பட்டது) க்கு உட்பட்டே முன் வைக்கிறேன்.  மற்றபடி மதுரை மக்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். ஆகவே நீங்கள் அனைவரும் தனிப்பட்ட முறையிலான பயணமாக மதுரை வருகை தர வேண்டுமென்று உளமார விரும்புகிறேன்.  எனது வேண்டுகோள்களை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.

;