ஓய்வுபெறலாமாம் “ஆசிரியர் பணியில் தொடர ‘டெட்’ தேர்ச்சி கட்டாயம்!”
புதுதில்லி, செப். 1 - ஆசிரியர் பணியில் நியமிக்கப்படுபவர்கள், டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது 2009- இல் ஒன்றிய அரசு கொண்டுவந்த சட்டமாகும். அதன்படி தமிழகத்தில் 2011 முதல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்படுகிறார்கள். எனினும், குறிப்பிட்ட நிலையிலான ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. திங்களன்று இந்த வழக்கை விசாரித்த தீபங்கர் தத்தா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, ஆசிரியர் பணியில் தொடருவதற்கோ அல்லது பதவி உயர்வு பெறுவதற்கோ ‘டெட்’ (TET) தேர்வு எழுதி வெற்றிபெற வேண்டியது கட்டாயம் என்று கூறியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற டெட் தேர்வில் தகுதி பெற வேண்டும். தேர்ச்சி பெறாவிடில் வேலையை விட்டு வெளி யேறலாம் அல்லது இறுதிச் சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனினும், சிறுபான்மை நிறுவனங்களில் ‘டெட்’ தேர்வை அரசு கட்டாயப்படுத்த முடியுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், இவ்வழக்கை உயர் அமர்விற்கு பரிந்துரைத்துள்ளது.