இலக்கியத்தின் வளர்ச்சிப் போக்குகளை அடையாளப்படுத்தும் விருதுகள்
நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பேச்சு
புதுக்கோட்டை, மே 2- அந்தந்த காலகட்ட இலக்கியத்தின் வளர்ச்சிப் போக்குகளை அடையாளப் படுத்துவது இலக்கிய விருதுகளே என்றார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார். புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் 2 ஆம் ஆண்டு சீனு சின்னப்பா விருதுகள் வழங்கும் விழாவில், 10 பேருக்கு இலக்கிய விருதுகளை வழங்கி அவர் மேலும் பேசியதாவது: எந்த வகையான மொழிக் கலப்பும் இல்லாத காலத்திலேயே இலக்கியங்களை உரசி, எடை போட்டுப் பார்க்க தமிழ்ச் சங்கங்கள் உருவாக்கப்பட்டன. முதல் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என மூன்றையும் பாண்டிய மன்னர்கள் தான் நடத்தியிருக்கிறார்கள். அவற்றுக்குப் பிறகு, பாண்டித்துரைத் தேவர் என்ற குறுநில மன்னர் நான்காம் தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கினார். திருக்குறள் நூலைக் கேட்டு அது கிடைக்காமல் போனதால் அவர் அச்சங்கத்தைத் தொடங்கியதாக வரலாறு கூறுகிறது. தொடர்ந்து தனித்தமிழ் இயக்கங்களெல்லாம் தொடங்கப்பட்டன. இந்த வளர்ச்சியில் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் இலக்கியங்களின் படைப்புக் கருவிகள் மாறிக் கொண்டே வருகின்றன. அவற்றையெல்லாம் மதிப்பிட்டு தமிழ்ச் சமூகத்தை உயர்த்தி அடையாளம் காட்டுவதுதான் இதுபோன்ற விழாக்களும் விருதுகளும் என்றார். விழாவுக்கு, தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார். அரு.வே.மாணிக்கவேலு, சு.ஆதித்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் மகா சுந்தர் தொகுத்து வழங்கினார். முன்னதாக துணைச் செயலர் சு.பீர்முகமது வரவேற்றார். பொருளாளர் மு.கருப்பையா நன்றி கூறினார். தொடக்கத்தில் விருது பெற்றோரை டிஇஎல்சி மாணவர்கள் 50 பேர் திருவள்ளுவர் வேடமணிந்து, விருதுபெறும் படைப்பாளர்களை வரவேற்று அழைத்து வந்தனர்