tamilnadu

வீழ்ச்சியைப் போக்கி  வெல்வோம்!

       கோவி.பால.முருகு

பொங்கலோ பொங்க லென்று
     பொங்குக மக்கள் வாழ்வு!
எங்கணும் மனித நேய 
     எழுச்சியே  ஓங்கி வாழ்க!
தங்குக கல்வி கேள்வி
        தாரணி செல்வம் வாழ்க!
சங்கத்துத் தமிழே உயிராய்
        சாற்றிட வாழ்க!வாழ்க!

உழவினைப் போற்றி நாட்டோர்
     உறுபசி போக்கி   வாழ்க!
உழைத்திடும் ஆலை  ஓங்கி
    உழைப்போர் உயர்ந்து வாழ்க!
பிழைத்திட வேலை பெருகி
       பீடுடை இளைஞர் வாழ்க!
தழைத்திடும்  இயற்கை வளங்கள்
      தடைபல தகர்த்து வாழ்க!
        
பெண்களின் வாழ்வில் ஒளியே
     பெற்றிட  போற்றி வாழ்க!
கண்களாய்க் குழந்தை நலத்தைக்
     காத்திடச் செய்து வாழ்க!
மண்ணிலே இயற்கை காத்து
      மானுடம் சிறக்க வாழ்க!
எண்ணிடும் எண்ணம் எல்லாம்
      ஏற்றமே கொண்டு வாழ்க!

பொருள்முதல் வாதம் கண்ட
   புரட்சியின் தந்தை மார்க்சும்
இருள்மத சாதி மூடம்
    எதிர்த்தநம்  பெரியார் சொல்லும்
அருளொடு சோதி கண்ட
    அன்புறு வள்ள லாரும்
விரும்பிய பாதை ஏற்போம்
     வீழ்ச்சியைப் போக்கி வெல்வோம்!