tamilnadu

img

வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரிகள் நுழைந்த சம்பவம் மதுரையில் கூடுதல் தேர்தல் அதிகாரி விசாரணை

மதுரை, ஏப்.23- மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரிகள் நுழைந்தது தொடர்பான சம்பவம் குறித்து திங்கள் அன்று தமிழக தேர்தல் கூடுதல் அதிகாரி முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி, அலுவலர்களிடம் விசாரணை நடந்தது. மதுரை சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சியினர் ஞாயிறன்று மனுக்கள் கொடுத்து கோரிக்கை வைத்தனர். இதன் அடிப்படையில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளிடமும் தமிழக தேர்தல் கூடுதல் அதிகாரி பாலாஜி திங்கள் அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் பிற்பகல் 2.30 மணிக்கு மதுரை அரசினர் மாளிகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன், மாவட்டச் செயலாளர்கள் சி.ராமகிருஷ்ணன், இரா.விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மா.கணேசன், வழக்கறிஞர் முத்து அமுதநாதன், திமுக தலைமைக்குழு பொறுப்பாளர் வி.வேலுச்சாமி, அக்ரி கணேசன், மதிமுக மாவட்டச் செயலாளர் மு.பூமிநாதன் மற்றும் அதிமுக வேட்பாளர் ராஜ் சத்தியன், அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாண்டியம்மாள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களை சந்தித்து தமிழக தேர்தல் கூடுதல் அதிகாரி பாலாஜி தகவல்களை நேரில் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘‘காலையில் இருந்து வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆய்வு செய்தேன். வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. சம்பவத்திற்கு காரணமான அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்களிடம் விசாரணை மேற்கோண்டேன். இந்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்பேன். அதனையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் ஆணையம் வகுத்த விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டேன். வேட்பாளர்களிடமும் சம்பவம் குறித்து விசாரித்தேன். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள், அரசு அலுவலர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு வாக்கு எண்ணிக்கை மையத்தினை பாதுகாக்கும் விதிமுறைகள் குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளன என்றார்.


சு.வெங்கடேசன் பேட்டி

இந்நிலையில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் கூறியதாவது:- ‘‘ யாருடைய உத்தரவில் அதிகாரிகள் சென்றனர் என்பது குறித்து தெரிய வேண்டும். விதிகளை மீறி அதிகாரிகளை பிடித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டபோது பெண் அதிகாரியை மாவட்ட தேர்தல் அதிகாரி பெயரைச் சொல்லி அழைத்து சென்றுள்ளனர். தேர்தல் அலுவலரை மாற்றக் கோரி முறையிட்டுள்ளோம். 8.30 மணிக்கு பிரச்சனை எழுந்த நிலையில், 12.30 மணி வரை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் அதிகாரிகள் வரவில்லை. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரின் நடவடிக்கை ஒரு பட்சமாக உள்ளது’’. இவ்வாறு அவர் கூறினார்.

;