tamilnadu

img

கி.பி. 16 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு சிவகங்கை அருகே கண்டெடுப்பு....

மதுரை:
சிவகங்கை அருகே சோழபுரத்தில் கி.பி.16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால கல்வெட்டை தொல்லியலாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், சோழபுரத்தில் உள்ள குண்டாங்கண்மாயில் பழமையான எழுத்துக்கள் பொறித்த கல்வெட்டு இருப்பதாககவியோகி சுத்தானந்த பாரதி பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் ஆறுமுகம் அளித்த தகவலின் பேரில், சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா, தலைவர் சுந்தரராஜன், செயலர் நரசிம்மன்ஆசிரியர் ஆரோக்கியசாமி ஆகியோர் கல்வெட்டை ஆய்வு செய்து படியெடுத்தனர்.இந்தக் கல்வெட்டு குறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா செய்தியாளர்களிடம் கூறியதாவது: சோழபுரம் குண்டங்கண்மாயில் நான்கரை அடி உயரமுள்ள நான்கு பக்கங்களைக் கொண்ட கல் உள்ளது. அந்த கல்லின் ஒரு பகுதியில் 30 வரியில் சிதைந்த நிலையில் எழுத்துக்களும், மற்றொரு பகுதியில் வாமன உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது.மன்னர் ஆட்சியின் போது பெரும்பாலும் நிலம் தொடர்பான ஆவணங்களிலோ அல்லதுஎல்கை கல்லிலோ வாமன உருவம் பொறிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், மேற்கண்ட கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள வாமன உருவம் ஒரு கையில் விரித்த குடை, தலையில் குடுமி, மார்பில் முப்புரி நூல், இடுப்பில் பஞ்சகச்சம் ஆகியவற்றோடு மற்றொரு கையில்கெண்டியில்லாமல் (கமண்டலம்) ஊன்று கோலுடன் காணப்படுகிறது.

கல்வெட்டில் ஸ்வஸ்தி ஸ்ரீ எனும் சொல்லோடு தொடங்குகிறது. அதன்பின் சகாப்த ஆண்டு குறிக்கப்பெற்றுள்ளது. அது மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது. காத்தம நாயக்கர் என்ற பெயர் தெரிகிறது. மதுனா, ஆலங்குளம், குண்டேந்தல், குத்திக்குளம், பெருமாளக்குளம், கோரத்திக் கண்மாய் உள்ளிட்ட நீர் நிலைகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.இடையில் பத்து வரிகளுக்கு மேல் சிதைந்துள்ளன. இறுதியாக இதற்கு கேடு விளைவிப்பவர் யாராகினும் கங்கைக் கரையிலே காரம் பசுவைக் கொன்ற தோசத்தில்போகக் கடவதாவது என குறிப்பிடப்பட்டுள் ளது. இதன் எழுத்து வரி வடிவங்களை வைத்து பார்க்கும்போது, கி.பி. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால கல்வெட்டு எனக் கருதலாம்.நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் ஏதும்ஏற்படாதவாறு குளம், கண்மாய்கள் அள விடப்பட்டு வெளிப்படுத்தும் விதமாக வாமனஉருவத்தோடு இக்கல்வெட்டு அமைக்கப் பெற்றிருக்கலாம். இக்கல்வெட்டு குறித்து 1882 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள் ளது. ஆனால் எழுத்துக்கள் படியெடுக்கப்பட வில்லை. இக்கல்வெட்டும் நாயக்கர் காலத்தில்நிலம் வழங்கியதற்கான ஆதாரமாக வைத்திருக்கலாம்.

சோழபுரம் என்ற பெயரில் பல இடங்களில் ஊர்கள் அமைந்துள்ளன. இவ்வூர் சோழர் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டதாகவும், இங்குள்ள சிவன் கோயில் சோழர்களால் கட்டப்பட்டதாகவும் பேச்சுவழக்கில் இன்றும் கூறப்படுகிறது.கி.பி. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோவில் மண்டபம் மிகவும் இடிந்த நிலையில் உள்ளது. அங்குள்ளகல்வெட்டுகள் தொல்லியல் துறையினரால் படியெடுக்கப் பெற்றுள்ளன. மேலும், சோழபுரம் அருகே செங்கல் கட்டுமானத்துடன் கூடிய மண்கோட்டை ஒன்று இருந்து அழிந்துள்ளது.அங்கு காவல் தெய்வமான முனீஸ்வரரை கோட்டை முனீஸ்வரராக மக்கள் வணங்கி வருகின்றனர். கோட்டைப் பகுதியில் திருவாழிச் சின்னத்துடன் திரிசூலம் பொறிக்கப் பெற்ற கல் ஒன்று உள்ளது. அக்கோட்டை நடுவே சிதைவுறாத நிலையில் சின்ன அறை உள்ளது. அது ஆயுதக் கிடங்கு அமைப்பில் அமையப் பெற்றுள்ளது.இதுதவிர, மதுரையில் விஜயநகரப் பேரரசுக்குப் பின் ஆட்சிக்கு வந்த நாயக்கர் மதுரையைச் சுற்றியுள்ள பகுதியை 72 பாளையங்களாக பிரித்து ஆட்சி செய்தார். அவற்றுள் சக்கந்திப் பாளையமும் ஒன்று. அந்த பாளையத்தில் அடங்கிய பகுதியாக சோழபுரம் இருந்திருக்கலாம் என்றார்.

;