tamilnadu

img

ஆளுநரின் அதிகாரம் - சிகரம். ச.செந்தில்நாதன்

இந்நூல் கிடைக்கும் இடம்: சேது வெளியீட்டகம் S. 79, அண்ணா நகர்,சென்னை. - 600 040. விலை: ரூபாய்: 300/-

ஓய்வுபெற்ற நீதிபதிகளில் மிகச்சிலரே மக்கள் மன்றத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் முனைவர் பட்டம் பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன். அனைத்துச் சாதியி னரும் அர்ச்சகர் ஆகுதல், நீட் தேர்வு போன்ற பிரச்சினைகளைப் பேசும் போது மறக்க முடியாத நீதியரசராக ஏ.கே.ராஜன் மக்கள் மன்றத்தில் வீற்றிருக்கிறார். அவர் அண்மை யில் அரசமைப்பு சட்டம் பற்றி ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதி இருக்கிறார். அந்த நூலின் பெயர் “THE CONSTITUTION OF INDIA - IS NOT WHAT IT IS” தமிழில் ‘இந்திய அரச மைப்பு: சட்டம் மட்டும் அல்ல’ என்று சொல்ல லாம். அப்படிச் சொன்னாலும் புரிந்து கொள்ள விளக்கம் தேவைப்படும். அரச மைப்புச்சட்டம் தொடர்பான சில உச்சநீதி மன்ற தீர்ப்புகளைப் படிக்கும் போது அந்தத் தீர்ப்புகள் அரசமைப்புச்சட்டத்தின் ஆன்மா வை அல்லது உணர்வுகளைச் சரியான பிரதி பலிக்கவில்லையே! என்று தோன்றும். அதனால் தான் அந்தத் தலைப்பை நூலுக்கு வைத்து இருக்கிறார். அதாவது நீதிபதிகளின் சட்டத்திற்குக்கான விளக்கங்களே சட்டம் ஆகிவிடுகின்றன என்பதை இந்த நூலில் எடுத்துக் காட்டுகிறார். இந்த நூலில் 23 கட்டுரைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் முக்கியமானவை. என்றாலும் சில மாநிலங்களில் ஆளுநர்க ளின்  சொல்லும் செயலும் கடும் விமர்ச னத்திற்கு உள்ளாகி விடுகின்றன. எனவே, ஆளுநரின் அதிகாரம் பற்றி அவர் கூறுவதை நாம் காதுகொடுத்து கேட்கக் வேண்டும்.

இப்போது தமிழ்நாட்டில் இருக்கும் ஆளுநர் சட்டமன்றத்தில் இயற்றப்படும் சட்டமுன்வடிவங்களை அப்படியே கிணற்றில் போடுவதால், பல சர்ச்சைகள் எழுகின்றன. ஓப்புதல் தர வேண்டிய  சட்ட முன்வடிவங்க ளுக்கு ஆளுநர் ஒப்புதல் தருவது இல்லை. காலம் கடத்துகிறார். குடியரசுத் தலைவருக்கு  அனுப்ப வேண்டிய சட்டமுன்வடிவங்களை அனுப்பாமல் தானே வைத்துக் கொள்கிறார். இது குறித்து நீதியரசர் ஏ.கே.ராஜன் கூறுபவைகள் முக்கியமானவை. அரச மைப்புச்சட்ட  கூறு 200 இவ்வாறு அமைந்து இருக்கிறது. அதாவது ஆளுநர் சட்டமுன் வடிவத்திற்கு ஒப்புதல் அளிப்பதாக இருந்தால், அவ்வாறே ஒப்புதல் அளித்து விட்டதாக அறிவிக்க வேண்டும்; அல்லது ஒப்புதலை நிறுத்தி வைத்து இருந்தால் அதையும் தெரி விக்க வேண்டும்; அல்லது குடியரசு தலைவ ருக்கு அவர் பரிசீலனை செய்வதற்கு அனுப்பி வைத்து இருந்தால் அதையும் சொல்ல வேண்டும்.

ஆளுநர் எப்போது சட்டமன்றம் இயற்றிய சட்டம் முன்வடிவை, ஒப்புதல் தராமல், குடிய ரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்பதை இதே கூறு 200 இல் சொல்லப் பட்டுள்ளது. அதாவது ஒரு சட்ட முன் வடிவம், முறையான சட்டம் ஆனால்; அது உயர் நீதிமன்றத்தின் அதிகாரங்களில் குறுக்கிடும் என்று ஆளுநர் கருதினால், அந்தச் சட்ட முன்வடிவத்திற்கு ஒப்புதல் தராமல்,  குடியர சுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பலாம். அதாவது ஆளுநருக்கு எல்லாச் சட்டமுன் வடிவங்களையும் ஒப்புதல் அளிக்காமல் வைத்துக் கொள்ள முடியாது. உயர்நீதி மன்றத்தின் அதிகாரங்களில் குறுக்கிடும் வகையில் உள்ள சட்டமுன் வடிவங்களை மட்டுமே, குடியரசுத் தலைவருக்கு அவரின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும். மற்றச் சூழ்நிலைகளில் சட்ட முன் வடிவத்திற்கு ஒப்புதல் தராமல் தன்னிடம் வைத்துக் கொள்ள அரசமைப்புச் சட்டப்படி அதிகாரம் இல்லை. ஒரு சட்ட  முன் வடிவத்தை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தால், குடியரசுத் தலைவர் என்ன செய்ய வேண்டும் என்பதை 201 வது கூறு விளக்குகிறது சட்ட முன்வடிவத்தை சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்பச்சொல்லி குடியரசுத் தலைவர் ஆளுநரைக் கேட்கலாம். சட்டமுன்வடிவம் மீண்டும் சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்பப் பட்டால்,  சட்டமன்றம் 6 மாதங்களுக்குள் மறுபரிசீலனை செய்து, திருத்தங்களுடனோ அல்லது திருத்தங்கள் இல்லாமலோ சட்ட முன் வடிவத்தை நிறைவேற்றி குடியரசு தலைவருக்குச் சமர்ப்பிக்கலாம். அப்போது குடியரசு தலைவர் நிராகரிக்க முடியாது.  எனவே குடியரசுத் தலைவரின் அதிகாரமும் வரை யறுக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அது மட்டுமல்ல, கூறு 79 இன்படி குடியர சுத்தலைவரும் நாடாளுமன்றத்தின் ஓர் அங்கம் தான். கூறு 168 இன் படி  மாநில ஆளுநரும் சட்ட மன்றத்தின் ஒரு அங்கம் தான். அப்படி இருக்கும்போது, அதாவது ஆளுநரே சட்டமன்றத்தின் ஓர் அங்கமாக இருக்கும்போது, அவர் எப்படி சட்டம் முன்வடி வத்தை நிராகரிக்க முடியும் என்ற கேள்வியை நீதியரசர் ஏ.கே. ராஜன் எழுப்புகிறார்?   அது மட்டும் அல்ல; இங்கிலாந்தில் மன்னராட்சி இன்னும் இருக்கிறது.இங்கி லாந்து நாடாளுமன்றம் இயற்றும் சட்டத்தை ஒப்புதல் தராமல் மறுக்கும் அதிகாரம் மன்ன ருக்கு உண்டு. என்றாலும் இதுவரை மன்னர்கள் யாரும் ஒப்புதலை மறுத்ததில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.  அது மட்டும் அல்ல,  எந்தச் சட்டமுன்வடிவத்தையும் பரிசீலனை செய்யும் அதிகாரம் அரச மைப்புச்சட்டத்தில் ஆளுநருக்கு வழங்கப்பட வில்லை என்பதையும் உறுதிபட தெரி விக்கிறார் அவர். ஆளுநர் என்பவர் அமைச்ச ரவையின் ஆலோசனைப்படி நடக்க வேண்டும் என்று அரசமைப்புச்சட்டம் கூறு 163 வலியுறுத்துகிறது. எனவே ஆளுநரின் விருப்பம் என்ற கேள்விக்கே இடம் கிடையாது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். அரசமைப்பு சட்டப்படியும், அங்கீகரிக்கப் பட்ட   மரபுகள் படியும் ஓர் ஆளுநர்,   மாநிலச் சட்டமன்றம் இயற்றிய சட்டமுன்வடிவத்தை நிராகரிக்க முடியாது‌. ஆனால் அண்மைக் காலமாக மத்தியில் ஒரு கட்சியின் ஆட்சியும்,   மாநிலத்தில் இன்னொரு கட்சியின் ஆட்சியும் ஏற்படும்போது ஆளுநர்கள் முரண்பட்ட நிலையை எடுக்கிறார்கள். ஆளுநர்கள் நிர்வாகத் தலைவர்கள் என்பது அதிகாரமிக்க பதவி அல்ல; வெறும் அலங்காரப் பதவியே என்பதைப் பலரும் மறந்துவிட்டார்கள். அவர்கள் சட்டப்படியும் நடக்கவில்லை. மரபுப் படியும் ஒழுகுவது இல்லை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக் கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தால் விடு விக்கப்பட்டார்கள். அவர்களை விடுவிக்கக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், ஆளுநர் அதை அப்படியே கிடப்பில் போட்டிருந்ததை உச்சநீதிமன்றம் கண்டித்ததையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கொள்கை முடிவுகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் எடுக்க முடியுமே தவிர நிய மிக்கப்பட்ட ஆளுநரால் எடுக்க முடியாது. இது தெரிந்தும் ஆளுநர்கள் தங்களை மேலான வர்களாக  நினைத்துக் கொண்டு சட்டத்தை  மீறுகிறார்கள்.  சட்டமுன் வடிவத்திற்கு ஒப்புதல் கொடுக்க “காலக்கெடு” எதுவும் விதிவிக்கப்பட வில்லை என்பது உண்மைதான். அது எதனால் என்றால் சட்ட முன் வடிவத்திற்கு உடனே ஒப்புதல் தந்துவிட வேண்டும் என்பதால்தான் என்கின்றார் நீதியரசர் ஏ.கே.ராஜன். அதே சமயம் அரசமைப்புச்சட்டம் கூறு 111 மற்றும் 200 இல் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும்   “எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம்” (“AS SOON AS POSSI¡õLE”)  என்று ஒரு கூட்டுவாசகமாகச் (PROVISO) சொல்லப் பட்டிருப்பது உடனே ஒப்புதல் தர வேண்டும் என்பதற்கு ஒருவிதிவிலக்கு தான் என்கி றார் நீதியரசர். அமைச்சரவையின் முடிவுப் படி செயல்பட வேண்டிய ஆளுநர், அமைச்ச ரவையின் முடிவின் மேல் ஆராய்ச்சி செய் யக்கூடாது. எனவே சட்டமுன்வடிவத்திற்கு ஒப்புதல் தரமறுக்கும் ஆளுநரின் நடவ டிக்கை அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. பதவி ஏற்கும் போது அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பேன் என்று கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டு விட்டு, அதை ஆளுநர் மீற முடியுமா? உயர்நீதிமன்றமும் உச்சநீதி மன்றமும் அரசமைப்புச் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டிய அரசமைப்புச் சட்ட அங்கங்கள்! இவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?

வேலியே பயிரை மேய்ந்தால் என்ன செய்வது? ஆளுநரே அரசமைப்புச் சட்டத்தை சிதைத்தால் என்ன செய்வது? இந்தக்கேள்வி க்கு  அரசமைப்புச்சட்டத்தில் பதில் இல்லை. அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் இப்படிப்பட்ட நிலைகள் வரும் என்று எதிர் பார்த்து இருக்க மாட்டார்கள். இப்போது அது போன்ற  நிலைமைதான் தோன்றிவிட்டது. இதற்கு  விடைகாண வேண்டிய பொறுப்பு மக்களிடம் தான் இருக்கிறது.  மக்களின் எழுச்சிதான் பிரச்சனையைத் தீர்க்கும் என்று சொல்லும் நீதியரசர் ஏ.கே.ராஜன், வேறொரு வழியும் சுட்டிக்காட்டுகிறார். அதாவது சட்டப் பேரவைத் தலைவர்,  அரசமைப்புச் சட்டத்தின் இன்னொரு கருவி என்ற முறையில் அரச மைப்புச் சட்டத்தை முடக்கும் ஆளுநரின்  செயல்பாடுபற்றிக்  குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்பலாம்; அதன் அடிப்படையி லும் ஆளுநரைப் பொறுப்பிலிருந்து விலக்கி வைக்க முடியும் என்றும் சொல்கிறார். நூலா சிரியர் நீதியரசர். இத்தோடு நிறுத்திக் கொள்கி றார். சரி, குடியரசுத்தலைவரும் கூட்டாளியா னால் என்ன செய்வது? ஜனநாயகப் புரட்சி தான் ஒரே வழி என்று தோன்றுகிறது! 

;