tamilnadu

img

அன்றாட வாழ்க்கையில் அறிவியல் பார்வையுடன் காணத் தூண்டும் நூல் - எம்.ஜே.பிரபாகர்

“தான் கண்டறிந்த விஷயங்களை தரவுகளுடன் விளக்கி சொல்ல வேண்டியது அறிவியலாளரின் கடமை” நவீன தமிழ் இலக்கிய உலகில் அறிவியல் எழுத்து இப்போதுதான் சற்று முக்கியத்துவம் பெற்று வருகிறது. அறிவியல் என்றாலே புதிதாய் ஒன்றை அறியும் இயல் என்றுதான் பொருள். தான் கண்டறிந்த ஒரு விஷயத்தை உரிய தரவுகளுடன் விளக்கிச் சொல்ல வேண்டியது ஒவ்வொரு அறிவியலாளரின் கடமையும் கூட. உயர் அறிவியல் கண்டுபிடிப்புகள் சிக்கலான விஷயங்களைப் பற்றி பேசுவதால் பெரும்பான்மை மக்களுக்கு எளிதில் புரிவதில்லை. எந்த ஒரு கண்டுபிடிப்பும் வெகுஜன படுத்தப்படாமல் போகும்போது அதன் பலன் சமூகத்திற்கு முழுமையாக கிடைப்பதில்லை. இன்னொரு புறம் அந்த அறிவியல் கண்டுபிடிப்பு சார்ந்த வதந்திகள் எளிதாக இருப்பதால் எதிர்மறையான தகவல்களை கொண்டிருப்பதாலும் விரைந்து மக்களை சென்றடைந்து விடுகின்றன. இதனால் சமூகத்தில் ஏற்படும் எதிர் விளைவுகள் மோசமானவை. ஆகவே எவ்வளவு சிக்கலான உயர் அறிவியல் கண்டுபிடிப்பையும் எளிதாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய தேவை எழுகிறது.

“அறிவியலின் பின் அணி வகுப்போம்” நூலானது சிக்கலான அறிவியல் கருத்துக்களை பற்றி பேசும் அதேசமயம் அதன் விளைவுகள் எப்படி நமது தினசரி வாழ்வை பாதிக்கின்றன என்று எளிய மொழியில் விளக்குகிறது. அறிவியல் என்றாலே நவீனம் வேதிப்பொருட்கள் என்று கருதிக் கொண்டிருக்கும் நம்முடைய தவறான நம்பிக்கைகளை தகர்க்கும் விதமாக இயற்கை விவசாயம் எப்படி அறிவியலாகிறது என்று நகரத்தில் இருப்பவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதியுள்ளார் நூலாசிரியர்.  மேலும் அறிவியல் சுற்றுச்சூழல் மற்றும் சமூகம் ஆகிய வற்றுக்கு இடையில் நிகழும் உரையாடல்களை மார்க்சிய இயங்கியல் பார்வையில் முன்வைக்கும் கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மேலும் அறிவியலாளர்கள் வினோத பழக்க வழக்கங்கள், அவர்கள் நம்பிக்கைகள் குறித்த சுவையான தகவலும் இந்நூலில் நிறைந்துள்ளன. அறிவியல் செயற்பாட்டாளர்கள் பற்றியும் அவர்கள் சந்தித்த சோதனைகள், சவால்கள், வெற்றிகள் குறித்தும் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள தகவல்கள் வாசகர்களை அறிவியல் சார்ந்த இயக்க நடவடிக்கைகளின் பக்கம் ஈர்க்கும். இந்நூல் வாசிப்போர் மனதை கவர்வதோடு நின்றுவிடாமல் தினசரி வாழ்வில் அவர்கள் காணும் ஒவ்வொரு விஷயத்தையும் அறிவியல் பார்வையுடன் அணுக வகை செய்யும் என்பதே உண்மை. தீக்கதிர் நாளிதழ் அறிவியல் கதிர் பகுதியில் பேராசிரியர் ராஜு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். அனைவரும் வாசித்தறிய வேண்டிய முக்கியமான நூல் இது.

“அறிவியலின் பின் அணிவகுப்போம்”
நூலாசிரியர் : 
பேராசிரியர் கே. ராஜு
விலை : ரூபாய் 150/-
வெளியீடு: மதுரை திருமாறன் வெளியீட்டகம் 
சென்னை - 600017
தொடர்பு எண்: 
7010984247

;