tamilnadu

img

46 வெளிநாட்டுப் பயணம் ; மணிப்பூரில் வெறும் 3 மணிநேரம்

46 வெளிநாட்டுப் பயணம் ; மணிப்பூரில் வெறும் 3 மணிநேரம்

பிரதமர் மோடியின் செயலுக்கு மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம்

புதுதில்லி வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு 2 ஆண்டுகள் கழித்து பிரதமர் மோடி சனிக்கிழமையன்று சென்றார். மணிப்பூரின் சுரசந்த்பூரில் ரூ.7,300 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்,”மணிப்பூர் தைரியம் மற்றும் துணிச்சலின் பூமி. மணிப்பூர் மக்களின் ஆர்வத்திற்கு வணக்கம் செலுத்துகிறேன். மணிப்பூர் என்ற பெயரிலேயே ரத்தினம் உள்ளது. இது வரும் காலங்களில் வட கிழக்கு மாநிலங்களில் பொலிவை ஏற்படுத்தும். புதிய திட்டங்கள் மணிப்பூரின் மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் வாழ்வை மேம்படுத்தும். மணிப்பூரின் மலைகள் விலைமதிப்பற்ற பரிசு. இது மக்களின் கடின உழைப்பின் அடையாளமாகவும் உள்ளன. அமைதிக்கான ஒன்றிய அரசின் தொடர்ச்சியான முயற்சிகள் மலை கள் மற்றும் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்களிடையே மோதலுக்கு தீர்வு காணும் வகையில் பேச்சு வார்த்தைக்கு வழிவகுத்தன.  மணிப்பூரை அமைதி மற்றும் செழிப்பின் அடையாளமாக மாற்ற விரும்புகிறோம். நான் இந்த மாநில மக்களுக்கு ஆதரவாக இருப்பேன். மணிப்பூரில் ரயில்வே, சாலை இணைப்பு திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு அதிகரித்துள்ளது” என அவர் கூறினார். கார்கே கண்டனம் இதனிடையே கடந்த 2 வருடங்களாக 46 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி  மணிப்பூரில் வெறும் 3 மணிநேரம் மட்டுமே செலவிட்டுள்ளார் என குற்றம் சாட்டினார்.  இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”பிரதமர் மோடி அவர்களே! மணிப்பூரில் உங்கள் 3 மணி நேர வருகை இரக்கம் அல்ல. இது கேலிக்கூத்து, அடையாள வாதம் மற்றும் காயமடைந்த மக்களுக்கு ஒரு பெரிய அவமானம். இன்று இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் உங்கள் ரோடு ஷோ என்று அழைக்கப்படுவது, நிவாரண முகாம்களில் உள்ள மக்களின் அழுகையைக் கேட்பதிலிருந்து கோழைத்தனமாக தப்பிப்பதைத் தவிர வேறில்லை. 864 நாட்கள் தொடரும் வன்முறையில் 300 உயிர்களை இழந்தோம். 1,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 67,000 பேர் இடம்பெயர்ந்தனர். நீங்களோ 46 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டீர்கள், ஆனால் உங்கள் சொந்த குடிமக்களுடன் அனுதாபத்துடன் இரண்டு வார்த்தைகள் பேச ஒரு முறை கூட செல்லவில்லை. மணிப்பூருக்கு உங்கள் கடைசி வருகை ஜனவரி 2022. அதுவும் தேர்தலுக்காக. உங்கள் “இரட்டை இயந்திரம்” மணிப்பூரின் அப்பாவி மக்களின் வாழ்க்கையை புல்டோசர் மூலம் தரைமட்டமாக்கியுள்ளது. வன்முறை இன்னும் தொடர்கிறது.மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பு பாஜகவுக்கு இருந்தது. இப்போது ஒன்றிய அரசு மீண்டும் தடுமாறி வருகிறது. மறக்க வேண்டாம், தேசிய பாதுகாப்பு மற்றும் எல்லை கண்காணிப்புக்கு உங்கள் அரசுதான் பொறுப்பு.  தற்போது செல்லும் வழியில் பெட்ரோல் நிரப்புவதற்கான நிறுத்தத்திற்கு நிற்பது போல் மணிப்பூர் வந்திருப்பது உங்கள் வருத்தத்தை காட்டவில்லை. குறைந்தபட்சம் இது குற்றவுணர்ச்சி யின் வெளிப்பாடு கூட இல்லை. நீங்கள் உங்களுக்காக ஒரு மகத்தான வரவேற்பு விழாவை ஏற்பாடு செய்கிறீர்கள்.  அடிப்படை அரசியலமைப்பு பொறுப்புகளை நீங்கள் கைவிட்டதால் இன்னும் துன்பப்படு பவர்களின் காயங்களுக்கு இது ஒரு கொடூரமான அடியாகும்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.