tamilnadu

img

18ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா நிறைவு

திருப்பூர், ஏப்.24- திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்திய 18ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா ஞாயிறன்று நிறைவடைந்தது. ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கி 11 நாட்கள் இக்கண்காட்சி நடைபெற்றது. இந்த திருவிழாவின் நிறைவு நாளன்று ஏராளமானோர் புத்தகங்களைப் பார்வையிட குவிந்தனர். குறிப்பாக இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிச் சென்றனர். கடை விற்பனையாளர்களிடம் இந்த ஆண்டு புத்தக விற்பனை குறித்து கேட்டபோது, திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ஆண்டுதோறும் புத்தக விற்பனை சிறப்பாகவே இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த புத்தகத் திருவிழாவிலும் வாசகர்கள், புத்தக ஆர்வலர்கள் ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிச் சென்றனர். போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள், கதை, கவிதை, நாவல்கள், பொது அறிவு மற்றும் அறிவியல் நூல்கள், வரலாறு, அரசியல் நூல்கள் என பல்வேறு வகை நூல்களும் விற்பனை ஆனது. கல்வி சார்ந்த உபகரணங்கள் விற்பனையும் அரங்கும் இங்கு அமைக்கப்பட்டிருந்தது. அந்த அரங்கிலும் மாணவர்கள், குழந்தைகள் ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து குவிந்தனர். கல்வி சார்ந்த உபகரணங்கள் அதிகளவு விற்பனை ஆனது.

ஆங்கில புத்தகங்களையும் ஒரு பிரிவு வாசகர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். பலவித ரசனை உரிய வாசகர்களும் அவரவர்களுக்குப் பிடித்த நூல்களை வாங்கிச் சென்றனர். இயற்கை பாதுகாப்பு, மூலிகைகள், சூழல் இயல் சார்ந்த நூல்களும் இம்முறை கணிசமாக விற்பனையானதாகவும் தெரிவித்தனர். வழக்கமாக ஜனவரி பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படும் திருப்பூர் புத்தகத் திருவிழா, கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக இரண்டு ஆண்டுகள் நடத்தப்படாத நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கு நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் இப்போது ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கோடை கால வெப்பம் கடுமையாக இருந்ததுடன், பள்ளிகளிலும் ஆண்டு இறுதித் தேர்வுக்கு தயாராகும் சூழல் இருக்கும் நிலையில், மாணவர்கள் வழக்கமான அளவில் வர இயலவில்லை. அத்துடன் திருப்பூரின் தொழில், பொருளாதார நிலையும் மோசமாக உள்ளது. எனினும் எல்லாவித எதிர்மறையான அம்சங்களுக்கு இடையிலும் திருப்பூர் புத்தகத் திருவிழா இந்த ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்றிருக்கிறது. திருப்பூர் மக்களின் பண்பாட்டுத் தேவையை நிறைவேற்றக்கூடிய இடமாக இந்த புத்தகத் திருவிழா இருப்பதால் பல்வேறு சிரமங்களுக்கு இடையிலும் புத்தக ஆர்வலர்கள், வாசகர்கள், பொது மக்கள் ஆர்வத்துடன் இங்கு வந்து சென்றனர் என்பதை காண முடிந்தது. இந்த புத்தகத் திருவிழாவில் புத்தக விற்பனை நடைபெற்ற விபரம் தொகுக்கப்பட்டு ஓரிரு நாளில் தெரியவரும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.