மும்பையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா தொற்றுபரவல் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது மே3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை 2337 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சைபலனின்றி 160 பேர் உயிரிழந்துள்ளனர். 229பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றில் மகாராஷ்டிரா மாநிலமே முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அம்மாநில அரசு உரிய நிவாரண உதவிகளை செய்ய வில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு மே.3 வரை நீட்டிக்கப்படுவதாக மோடி அறிவித்துள்ளார். ஆனால் உரிய நிவாரண உதவிகள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இதைத்தொடர்ந்து மும்பையில் ஆத்திரம் அடைந்த வெளிமாநில தொழிலாளர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை கூட அரசு செய்யவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளனர். இந்நிலையில் தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மும்பையில் மேலும் நோய் தீவிரமடைய வாய்ப்புள்ளது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.