tamilnadu

img

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: டிமிக்கி கொடுத்து வந்த  பிரக்யா சிங், திடீர் ஆஜர்

மும்பை:
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாமல் சாக்குப்போக்கு காட்டிவந்த, போபால் பாஜக எம்.பி.யும், சாமியாரிணியுமான பிரக்யா சிங், வெள்ளியன்று திடீரென நீதிமன்றத்தில் ஆஜரானார் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தின் மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி, இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த சாமியாரிணி பிரக்யா சிங் தாக்குர், ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றத்தில், தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.ஆனால், பிரக்யா சிங் தாக்குர், உடல்நிலையைக் காரணம்காட்டி, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரி வந்தார். ஆனால், அந்தக் கோரிக்கையை என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் நிராகரித்தது. மேலும் ஜூன் 6-ஆம் தேதி கட்டாயமாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. 

ஆனால், பிரக்யா சிங், ரத்த அழுத்த குறைபாடு என்று கூறி ஜூன் 5-ஆம் தேதி இரவே மருத்துவமனையில் சேர்ந்து கொண்டார். இதனையடுத்து அவர் ஆஜராவதற்கு ஒருநாள் அவகாசம் வழங்கப்பட்டது. அவகாசம் கிடைத்தை அறிந்ததுமே, ஜூன் 6-ஆம் தேதி பகலில், மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பிரக்யா சிங் தாக்குர், போபாலில் நடைப்பெற்ற மகாராணா பிரதாப் விழாவில் பெரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டு, சிலைக்கு மாலையும் அணிவித்தார்.

அதைத்தொடர்ந்து இனிமேலும் டிமிக்கி கொடுக்க முடியாது என்ற முடிவுக்கு வந்த பிரக்யா சிங் தாக்குர், என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமையன்று விசாணைக்கு ஆஜரானார். 11 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கின் விசாரணைக்கு, பிரக்யா சிங் முதன்முதலாக ஆஜராகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

;