போபால்:
மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பரில் ஒரு மசூதிக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு இந்துத்துவா பயங்கரவாதிகளின் சதிதான் காரணம் என்று கண்டுபிடித்த மகாராஷ்டிர காவல்துறை 11 பேரைக் கைது செய்தது. அவர்களில் பெண் சாமியாரான பிரக்யா சிங் தாக்கூரும் ஒருவர். இந்த வழக்கு தற்போதும் நிலுவையில் உள்ளது.
இதனிடையே, 9 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பிரக்யா சிங் தாக்குர், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி 2017-ஆம் ஆண்டில் மும்பை என்ஐஏ நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார். அத்துடன் 2019 மக்களவைத் தேர்தலில் ம.பி. மாநிலம் போபாலில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பி.யும் ஆனார். அதன்பின்னர் நீதிமன்றம் இவரை நேரில் ஆஜராகச் சொல்லும் போதெல்லாம் தன்னால் நடக்க முடியாது என்று காரணம் கூறி வந்தார். நீதிமன்றத்தை நம்பவைக்க வேண்டும் என்பதற்காக சக்கர நாற்காலியிலேயே ஊரைச் சுற்றி வந்தார்.இந்நிலையில்தான், அண்மையில் உறவினர் ஒருவரின் திருமண ஊர்வலத்தில் பிரக்யா சிங் நடனமாடிய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக சக்கர நாற்காலியில் வலம்வந்து கொண்டிருந்தவர், திடீரென நடனமாடியது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.அப்படியானால், ‘தன்னால் நடக்க முடியாது’ என்று இதுவரை பிரக்யா சிங் கூறி வந்தது, நீதிமன்றத்தை ஏமாற்றுவதற்கான நாடகமா? என்று பலரும் கேள்வியெழுப்ப ஆரம்பித்துள்ளனர். இன்னும் சிலரோ, நடனமாடியது மட்டுமல்ல, அண்மையில் பிரக்யா சிங் கூடைப்பந்தாட்டமும் ஆடியிருக்கிறார் என்று கூறி, அந்த வீடியோக்களையும் சமூகவலைதளங்களில் பகிரிந்துள்ளனர். நீதிமன்றத்தை ஏமாற்றிய பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.