புதுதில்லி:
மக்களவை உறுப்பினர் வாழ்க்கையை, சர்ச்சையுடனேயே துவக்கியிருக்கிறார் பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குர்.பெண் சாமியாரிணியான பிரக்யா சிங், சர்ச்சைக்குப் பேர் போனவர். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கிய இவரை, தேடிப்பிடித்து போபால் மக்களவைத் தொகுதியில் பாஜக நிறுத்தியது. அப்போதிருந்து பிரக்யா சிங் ஏதாவது ஒரு சர்ச்சையை கிளம்பிக் கொண்டே இருந்தார்.
கோமியம் அருந்தியதால் எனது புற்றுநோய் குணமானது என்றும், கோட்சே மிகச்சிறந்த தேசியவாதி என்றும் அடுத்தடுத்து அவர் கிளப்பிய சர்ச்சைகளால் மோடியே எரிச்சல் அடைந்தார். எனினும் தேர்தலில் வெற்றிபெற்று, தற்போது எம்.பி.யாகி விட்ட பிரக்யா சிங் தாக்குர், திங்களன்று பதவியேற்பிலும், வழக்கம்போல தனது சேட்டையை ஆரம்பித்துள்ளார்.
பிரக்யா சிங் எம்.பி.யாக பதவியேற்கும்போது, தனது பெயருடன் தமது குருநாதர் பெயரையும் சேர்த்து, ‘சாத்வி’ பிரக்யா சிங் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை காங்கிரஸ் எம்.பி.க்கள் ஏற்கவில்லை. பிரக்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.இதையடுத்து ஆவணங்களைப் பார்த்து, மீண்டும் பதவியேற்க அனுமதிப்பதாக தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் கூறிவிட்டார். ஆனால், இரண்டாவது முறையின்போது, தன் பெயருடன் தந்தையின் பெயரை சேர்த்துக் கூறினார். அதற்கும் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆட்சேபித்தனர். வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள பெயரை விட்டு விட்டு, எதையெதையோ கூறுவதா? என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து, ‘பிரக்யா சிங் தாக்குர்’ என உண்மையான பெயரைக் குறிப்பிட்டு பிரக்யா சிங் பதவியேற்றுக் கொண்டார்.