tamilnadu

img

‘எங்கே எனது வேலை’.... திருப்பூரில் இளைஞர்கள் ஊர்வலம்

திருப்பூர்:
எங்கே எனது வேலை என்ற முழக்கத்துடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் திருப்பூரில் ஊர்வலம் நடத்தினர்.இந்திய விடுதலைப் போரில் மகத்தான ஒளிவீசும் அத்தியாயமாகத் திகழும் கப்பற்படை எழுச்சி தினம் பிப்ரவரி 18ஆம் நாள் ஆகும். 1946ஆம் ஆண்டு மும்பையில் கப்பற்படையைச் சேர்ந்தோர் பிரிட்டீஷ் அரசுக்கு எதிராக பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளுடன், தேச விடுதலைக்  கோரிக்கையும் முன்வைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். இந்த வீரஞ்செறிந்த போராட்டத்தில் பிரிட்டீஷ் அரசின் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் ஆகிய மூன்று இயக்கங்களின் கொடிகளை கப்பலில் ஏற்றிப் போராட்டத்தின் நோக்கத்தை உலகறியச் செய்தனர். இந்த எழுச்சியே பிரிட்டீஷ் அரசு இந்தியாவை விட்டு வெளியேறுவதை துரிதப்படுத்திய முக்கிய காரணமாகும்.

இந்திய விடுதலைக்குக் காரணமான கப்பற்படை எழுச்சி தினத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் வேலையின்மைக்கு எதிராக நாடு தழுவிய இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் எங்கே எனது வேலை என்ற முழக்கத்தோடு ஊர்வலம் நடத்தப்பட்டது.ஆண்டுக்கு 2 கோடி வேலைகளை உருவாக்குவோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த மோடி அரசு, இருக்கும் வேலைவாய்ப்பைப் பறித்து வருவதைக் கண்டித்தும், அரசாணை 56 என்ற பெயரில் வேலை வாய்ப்பை ஒழிக்கும் கேடுகெட்ட செயலைக்கைவிடவும், ஓய்வு பெற்றோருக்கு மீண்டும் அரசு வேலை கொடுத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை மறுப்பதைக் கைவிடக் கோரியும், ரயில்வே துறை வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தவும், அரசுத் தேர்வாணைய முறைகேடுகளில் கடும் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளைத் தண்டிக்கவும், இளைஞர்களுக்கு கண்ணியமான வாழ்க்கைக்குரிய புதிய வேலைவாய்ப்பை உருவாக்கிட வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் மாவட்டத் தலைவர் ப.ஞானசேகரன், மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் முன்னணி ஊழியர்கள் திரளானோர் பங்கேற்றனர். தியாகி குமரன் நினைவிடத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் குமரன் சாலை, நொய்யல் பாலம், வளர்மதி வழியாக மாநகராட்சி அலுவலகம் எதிரில் நிறைவடைந்தது. அங்கு வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா சிறப்புரை ஆற்றினார். முன்னதாக வேலைவாய்ப்பு கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்ட முழக்கம் எழுப்பப்பட்டது.

;