tamilnadu

img

நிலத்தடி நீரின் நிலை என்ன?

புதுதில்லி, ஜூலை 7-

நாட்டில், குறிப்பாக தமிழ்நாட்டில் நிலத்தடியின் நிலை என்ன என்றும் இது தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்றும் மக்களவையில் பி.ஆர். நடராஜன் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய ஜலசக்தி அமைச்சர் பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது பி.ஆர். நடராஜன், தமிழ்நாட்டில் பல நகரங்களில் விரைவில் நிலத்தடி நீர் முற்றாக வற்றிவிடும் என்று கூறப்படுகிறதே, அது உண்மையா என்றும், அப்படியெனில் நிலத்தடி நீரைப் பாதுகாத்திட, மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்றும் நிலத்தடி நீர் தமிழ்நாட்டில் மிக வேகமாக குறைந்து கொண்டிருப்பதற்கான காரணங்கள் என்ன என்றும், நிலத்தடி நீரை நீர்த்துப்போகாமல் தக்கவைத்துக் கொள்ளக்கூடிய விதத்தில் நிரந்தரத் தீர்வு காண்பதற்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்றும் கேட்டிருந்தார்.

இதற்கு மத்திய ஜல சக்தி மற்றும் சமூக நீதி மற்றும் மேம்பாட்டு இணை அமைச்சர் ரத்தன் கட்டாரியா எழுத்துபூர்வமாகப் பதிலளிக்கையில் உறுப்பினர் கூறுவதுபோன்று நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றிவிடவில்லை என்று கூறினார். 

அவர் மேலும், நாட்டில் பல பகுதிகளில் நிலத்தடிநீர் அதளபாதாளத்திற்குச் சென்றுவிட்டது என்றும், அதற்கு மக்களின் பல்வேறு பயன்பாடுகளுக்காக சுத்தமான நீரின் தேவை அதிகரித்திருப்பது காரணம் என்றும்,  மழை, காலத்தே பெய்யாமல் பொய்த்துப்போயிருப்பதும் காரணம் என்றும், அத்துடன் மக்கள்தொகைப் பெருக்கமும், தொழில்மயமும் மற்றும் நகர்மயமும் காரணங்கள் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும், தண்ணீர் மாநிலப் பட்டியலில் இருக்கிறது என்றும், எனவே நிலத்தடி நீரைச் சேமித்துப் பாதுகாத்து, மிகவும் சிக்கனமானமுறையில் பயன்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு என்றும் கூறியிருக்கிறார்.

(ந.நி.)

 

;