tamilnadu

img

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் நீடூழி வாழும்!

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் மமிதா ஜகதீஷ் குமார் இது நீங்கள் வெளியேற வேண்டிய நேரம் என்று மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது. 

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான எம்.ஜகதீஷ் குமார், தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் வருகின்ற  பல்கலைக்கழகத்தில் வன்முறையை  நிலைநாட்ட விரும்புகின்ற கொள்ளைக்கூட்டத்தைச் சார்ந்தவர் போல நடந்து கொள்கிறார்.  இரும்பு கம்பிகள், கற்கள், லத்திகளைப்  பயன்படுத்தி,  வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட  குற்றவாளிகளால் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் என்று ஒட்டு மொத்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சமூகமும்  வன்முறையை  எதிர்கொள்வதைக் காண அவர் எல்லா வழிகளையும், முறையையும் பயன்படுத்தி இருக்கிறார். நாங்கள் இதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் வேளையில், ஏபிவிபி நடத்திய தாக்குதலில் தலையில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள படுகாயம் அடைந்தவர்களுக்கான மையத்தில்  சிகிச்சை பெற்று வருகிறார்.
கோழைத்தனமான இந்த  துணைவேந்தர், பின்கதவு  வழியாக சட்டத்திற்கு விரோதமான கொள்கைகளை அறிமுகப்படுத்தி வருகிறார். மாணவர்கள், ஆசிரியர்களின் கேள்விகளில் இருந்து தப்பி ஓடிப் போகின்ற இவர்  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அச்ச உணர்வு அதிகரிக்கும் சூழ்நிலையை உருவாக்கி வருகிறார். அவருடைய அடியாட்களும், ஏபிவிபி செயற்பாட்டாளர்களை சட்ட விரோதமாக ஒட்டுமொத்தமாகப் பணி நியமனம் செய்வதை அதிகரிப்பதன் மூலம் உருவாக்கியுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜே.என்.யு.டி.எஃப்) என்று தங்களை அழைத்துக் கொள்கின்ற அடிவருடிகளும், ஏபிவிபி  கூட்டாளிகளும் மற்றும் சைக்ளோப்ஸ்  பாதுகாப்பு  படையினரும் இவ்வாறு கோழைகளாகவே  உள்ளனர்.
ஏறக்குறைய  எழுபது நாட்களாக, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தனியார்மயமாக்கல் மற்றும் பேராசையின் பிடியிலிருந்து தங்களுடைய  பல்கலைக்கழகத்தைக் காப்பாற்றுவதற்கான தைரியமான போரில் ஈடுபட்டுள்ளனர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வை அமல்படுத்துவதன் மூலம், அனைவராலும் அணுகக்கூடிய கல்வி என்பது சாத்தியமில்லை என்பதை தன்னால் நிரூபிக்க முடியும் என்று இந்த துணைவேந்தர் பிடிவாதமாக இருக்கிறார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வு  நடக்காது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், பொதுக் கல்வி என்ற கனவு  நீடித்திருக்க வேண்டும் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சமூகத்தைச் சார்ந்த நாங்கள்  உறுதியாக இருக்கின்றோம். 
துணைவேந்தர் மற்றும் அவரது அடிவருடிகளின் விரக்தி மற்றும் மூர்க்கத்தனத்தின் விளைவாகவே இன்று  இந்த வன்முறை  நடந்திருக்கிறது.  இன்று நடந்த நிகழ்வுகளின் காலவரிசையானது  வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஏபிவிபி குண்டர்களுக்கு பாதுகாப்பான வழியை ஏற்படுத்திக் கொடுத்த டெல்லி காவல்துறையினரின் வெட்கக்கேடான செயலை  வெளிசம் போட்டு காட்டியிருக்கிறது. நீண்ட நாட்களாக  எங்களுடைய எதிர்ப்பை நிர்வாகத்தால் தகர்க்க முடியவில்லை. ஜனவரி 4ஆம் தேதி முதல், ஏபிவிபியைச் சார்ந்தவர்கள் துணைவேந்தரின் அடியாட்களாக வந்து மாணவர்களை அடித்து உதைத்தனர். தாக்குவதற்காக லத்திகள்  மற்றும்  குழாய்களை  அவர்கள் பயன்படுத்தினர்.
ஜனவரி 5ஆம் தேதி  அவர்கள் வெளியில் இருந்து  குண்டர்களை  குறிப்பாக  குற்றச் செயல்கள் புரிவதை வழக்கமாகக் கொண்ட சதீந்தர் அவானா தலைமையில் டெல்லி பல்கலைக்கழகத்தைச் சார்ந்தவர்களை வருவித்தனர். 2018 தேர்தலுக்குப் பின்னர் நடந்த வன்முறையின் போது  செய்ததை விடவும் ஒரு அடி மேலும் கூடுதலாக இப்போது அவர்கள் கடந்து சென்றிருக்கின்றனர்.
பெரியார், எஸ்.எஸ்.எஸ் 2, மஹி  மந்தவி மற்றும் குறிப்பாக சபர்மதியில் நடந்த தாக்குதல்களில் லத்திகளும், இரும்புத் தடிகளும், பெரிய கற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. வெளியில் இருந்து வந்த குண்டர்கள் கண்ணாடிகளை உடைத்து, கார்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அங்கிருந்த உணவுக்கூடத் தொழிலாளர்களையும் அவர்கள் தாக்கியுள்ளனர். மிகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் வெட்கக்கேடான வகையில் சபர்மதியில் உள்ள பெண்கள் பிரிவுக்குள்ளும் சென்றிருக்கின்றனர். அங்கிருந்த மாணவிகளை  மிரட்டி தாக்கியுள்ளனர். துணைவேந்தரின் உத்தரவின் பேரில் ஆண்  குண்டர்கள்  பெண்கள்  விடுதிகளுக்குள் சென்று கதவுகளைத் தாக்கி உடைப்பதற்கு சைக்ளோப்ஸ் பாதுகாப்பு படையினர்  ஒத்துழைத்துள்ளனர். இதை விட  மோசமான செயல் வேறு  எதுவும் இல்லை. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைதிப் பேரணிக்கு அழைப்பு விடுத்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தினரைக்கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. தாக்கப்பட்ட பல ஆசிரியர்களுடன்  இருந்த பிராந்திய ஆய்வு மையத்தின்  பேராசிரியர். சுசரிதா சென்  தலை மீது கொடூரமாக  தாக்குதல் நடத்தப்பட்டது. 
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்தது அனைத்தும் முழுமையாக ஏபிவிபி உறுப்பினர்களாலேயே  இயக்கப்பட்டது. வெளியாட்களின் நுழைவுக்குத்  திட்டமிட்ட யோகேந்திர  பரத்வாஜ் போன்ற லும்பன்களின் செயல்பாடுகள் வாட்ஸ்ஆப்  செய்திகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
ஜமியா மீது வன்முறையை நிகழ்த்திய டெல்லி  காவல்துறை  இப்போது தன்னுடைய பாத்திரத்தை மாற்றிக் கொண்டது என்றாலும் தனது நோக்கத்தை சற்றும் மாற்றிக் கொள்ளவில்லை. மாணவர்களைத் தாக்குவதற்கு குச்சிகள் மற்றும் இரும்புக் கம்பிகளை குண்டர்கள் எடுத்துச் சென்ற வேளையில், அவர்கள் வெறுமனே ஊமைகளாக, பார்வையாளர்களாக மட்டுமே நின்று கொண்டிருந்தனர்.  குண்டர்களுக்கு பாதுகாப்பாக இருந்து அவர்கள் செல்வதற்கு அனுமதித்துள்ளனர்.
 4ஆம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளரை குண்டர்கள் தாக்கினர். நேற்று தலைவரை இரும்புக் கம்பியால் அவர்கள் தாக்கியுள்ளனர். பெண்கள் விடுதிகளுக்கு வெளியேயும்  உள்ளேயும்  இருந்த மாணவிகளை  ஏபிவிபி அடித்து உதைத்தது.  அதுமட்டுமல்லாது,  ஜனவரி 4 ம் தேதி ஏபிவிபி  குண்டர்கள் நடத்திய தாக்குதலில் சில மாணவிகளுக்கு கடுமையான காயங்களும், எலும்பு முறிவுகளும் ஏற்பட்டுள்ளன. இத்தகைய வெட்கக்கேடான மற்றும் கோழைத்தனமான செயல்கள் அவர்கள் மாணவர்களின்  ஒற்றுமையைக் கண்டு எவ்வாறு பயப்படுகிறார்கள் என்பதையே காட்டுகின்றன. எவ்வாறாயினும், அமித்ஷாவின்  நிர்வாகத்தின் கீழ் இருக்கின்ற காவல்துறையின் போக்கு இத்தகைய சூழ்நிலைகளில்  மிக மோசமாக இருந்து வருவதை நாங்கள்  கவனித்து வருகிறோம்.
சிவில் சமூகம், குடிமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு ஆதரவாக நிற்கும் சக பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருக்கும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம் தனது நன்றியைத்  தெரிவித்துக் கொள்கிறது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை அழிக்க வேண்டும் என்ற சங்பரிவாரின்  திட்டத்தில்  இந்த  துணைவேந்தர்  நான்கு ஆண்டுகளாக   தீவிரமாக  ஈடுபட்டுள்ளார். 2016ஆம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மீது அவதூறு ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ் நடத்திய திட்டத்தில் மமிதலாவிற்கும் பங்கு இருந்தது. நஜீப்பைத்  தாக்கிய  ஏபிவிபி குண்டர்கள் மீது  எந்த  நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை. 
மாணவர் சேர்க்கையை குறைத்ததன் மூலம்  அடுத்த தலைமுறை  மாணவர்களின்  எதிர்காலத்தை  அழிக்க  முயன்ற  அவர்  சமூக  நீதியைக்  கொலை செய்தார். பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பாலின உணர்திறன் குழுவை (GSCASH) கலைத்து, அதுல் ஜோஹ்ரி போன்றவர்களை அவர்  பாதுகாத்தார். உணவகங்களை மூடுவது, இரவு ஊரடங்கு உத்தரவு விதிப்பது ஆகியவற்றின் மூலம் கருத்து வேறுபாடு  கொள்ளும்  மற்றும்  விவாதம்  செய்யும் கலாச்சாரத்தைக்  கட்டுப்படுத்த  முயன்றார். எம்பிஏ மற்றும் இன்ஜினியரிங் போன்ற படிப்புகளுக்கான கட்டணங்களை உயர்த்தினார். மேலும் நுழைவுத் தேர்வை ஆன்லைனில்  நடத்தியதன் மூலம் அந்த தேர்வில் இருந்த கல்வி குறித்த சவால்களை நீக்கினார். தனது  எஜமானர்களைத் திருப்திப்படுத்துவதற்காக தகுதியைப் பொருட்படுத்தாமல் அரசியல் சார்ந்த பணிநியமனங்களைச் செய்து வருகிறார். கட்டண  உயர்வை  அமல்படுத்த அவர் முயற்சிக்கிறார். அது எங்களுக்குத் தெரிந்த வரை நடக்கப் போவதில்லை. மாணவர்கள் மீது வன்முறைகளை நிகழ்த்துவதற்கும், பல்கலைக்கழகத்தை அழிப்பதற்கும் அவர்  தனது அடியாட்களைப் பயன்படுத்துகிறார். தனது ஒவ்வொரு அடியிலும் பல்கலைக்கழகத்தின் கலாச்சாரத்தையும் கல்வியாளர்களையும் 
அழிக்கவே   அவர் முயல்கிறார்.

திரு மமிதலா  ஜகதீஷ் குமார், இது  நீங்கள் வெளியேற  வேண்டிய நேரம்!

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக சமூகத்திடம்  ஓர் ஒற்றை கோரிக்கையே இருக்கிறது. இந்த  துணைவேந்தர் ராஜினாமா  செய்ய வேண்டும் அல்லது  மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தனது பொறுப்பை உணர்ந்து அவரைப் பணி நீக்கம் செய்ய வேண்டும்! இந்த பல்கலைக்கழகத்தை  களங்கப்படுத்தி அதனை  அழிக்க முயற்சிப்பவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் நீடூழி வாழும்!

#StandWithJNU  MamidalaMustGo

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம்

தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு

;