புதுதில்லி:
மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்த வட்டிக்கு வட்டி (கூட்டு வட்டி) தள்ளுபடி அறிவிப்பானது பயிர்க் கடன், டிராக்டர் கடன் பெற்றவர்களுக்குப் பொருந்தாது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காலத்தில் மக்கள் வேலையின்றி, வருமானமின்றி மிகவும் அவதிப்பட்டனர்.கொரோனா காலத்தில் வங்கியில் கடன் பெற்றவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த மார்ச் முதல்ஆகஸ்ட் மாதம் வரை சலுகை அளித்திருந்தது. ஆனால், அந்தச் சலுகை காலத்தில் கடன்தவணையைச் செலுத்தாமல் ஒத்திவைப்புச் சலுகை பெற்றவர்களுக்குக் கூட்டு வட்டி விதிக்கப்பட்டது. மக்களின் நிலையை உணராமல் கூட்டுவட்டி விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்தது. வட்டிக்கு வட்டி விதிப்பதைதள்ளுபடி செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின்படி, ரூ.2 கோடிவரை கொரோனாகாலத்தில் வங்கியில் கடன் பெற்றவர்களுக்குவட்டிக்கு வட்டி விதிக்கப்படாது. அவ்வாறு கூட்டு வட்டியுடன் தவணையைச் செலுத்தி யவர்களுக்கு நிலையான வட்டிபோக, கூடுதலாக வசூலிக்கப்பட்ட வட்டித் தொகை நவம்பர் 5 ஆம் தேதிக்குள் கடன் தவணை செலுத்தியவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனத் தெரிவித்தது.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சகம் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த வட்டிக்கு வட்டி தள்ளுபடி விவகாரத்தில், பயிர்க் கடன், டிராக்டர் கடன் பெற்றவர்களுக்குச் சலுகை வழங்க முடியாது என்றுஅதிர்ச்சி தரும் வகையில் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:‘பிப்ரவரி 29 ஆம் தேதி கணக்கின்படி, கிரெடிட் கார்டில் பொருட்கள் வாங்கியோர், மாதத் தவணை செலுத்துவோர் தவணையுடன் கூட்டு வட்டி செலுத்தியிருந்தால், அவர்களுக்கான நிலையான வட்டி மட்டும்கணக்கில் எடுக்கப்பட்டு, கூடுதல் வட்டித்தொகை வங்கிக் கணக்கில் திருப்பிச் செலுத்தப்படும்.ஆனால் கொரோனா காலத்தில் வேளாண்கடன் திட்டத்தின் கீழ் பயிர்க் கடன், டிராக்டர் கடன் பெற்றவர்கள், விவசாயக் கடன் பெற்றவர்கள் தவணை செலுத்தும்போது வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படாது. இந்த வேளாண் கடன் பெற்றவர்கள் மத்திய அரசின் வட்டிச்சலுகை திட்டத்துக்குள் வரமாட்டார்கள்’.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.