tamilnadu

img

முதலாளிகள் மீதே கவலைப்படும் உச்சநீதிமன்றம்

புதுதில்லி:
கொரோனாவையொட்டி பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோது, நிறுவனங்கள் உற்பத்தி யின்றி மூடப்பட்டாலும் தொழிலாளர்களுக்குப் பிடித்தமின்றி ஊதியம் வழங்க வேண்டும் என்று மார்ச் 29 அன்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அவ்வாறு வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு அப்போது கூறியது.

இதனை எதிர்த்து பல்வேறு நிறுவனங்களின் முதலாளிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, அவற்றின் மீது விரைந்து விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்றம், முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் உத்தரவை கடந்த மே 15-ஆம் தேதி அதிரடியாக நிறுத்தி வைத்தது.  பின்னர் மே 17 அன்று, மத்திய அரசே மார்ச் 29-இல் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற்றுக் கொண்டதாக அறிவித்தது.எனினும், இதுதொடர்பான வழக்கு வியாழக்கிழமையன்று நீதிபதிகள் அசோக் பூஷன், எஸ்.கே. கவுல், எம்.ஆர். ஷா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தனது பதில் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

“கடந்த மார்ச் 29 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு அரசியலமைப்புச் சட்டப்படி செல்லும் என்றாலும், இந்த உத்தரவு மார்ச் 25 முதல் மே 17 வரை மட்டுமே. அதாவது இந்த 54 நாட்களுக்கு பிறகு அரசாணையானது திரும்பப் 
பெறப்பட்டு விட்டது. அதன்பின்னர் பணிக்குத் திரும்பாத ஊழியர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை; மேலும் அந்த உத்தரவு மே 17 அன்று திரும்பப் பெறப்பட்டு விட்டது. ஆனால், மார்ச் 29-இல் உத்தரவு பிறப்பிக்க ப்பட்ட நோக்கம் பொதுமுடக்கக் காலத்தில் ஒப்பந்த ஊழியர்களும், தொழிலாளர்களும் ஊதியமில்லாத சூழலுக்கு ஆட்படக்கூடாது என்பதற்காக, பொதுநலன் கருதி, 2005-ஆம் ஆண்டின் தேசியபேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தேசிய நிர்வாகக்குழு எடுத்த முடிவாகும். இந்த உத்தரவைப் பிறப்பிக்க தேசிய நிர்வாகக் குழுவுக்கு முழு அதிகாரம் இருக்கிறது” என்று தெரிவித்திருந்தது.

மேலும், “நிறுவனங்கள், தொழிற்சாலைகளால் முழுமையான ஊதியத்தை தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் வழங்க முடியாத சூழலில் இருந்தால், அதற்கான ஆதாரங்களை அதாவது தாங்கள் ஊதியம் வழங்க முடியாத சூழலில் இருக்கிறோம் என்பதற்கான ஆதாரத்தை நிறுவனங்கள் தங்களின் பேலன்ஸ்ஷீட்டிலும், வரவு - செலவுக் கணக்கிலும் குறிப்பிட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யட்டும்” என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.இவ்வளவையும் கேட்ட பின்பும் “ஊழியர்கள், தொழிலாளர்கள் ஊதியமில்லாமல் இருந்து விடக்கூடாது என்ற கவலை இருக்கிறது; ஆனால்,தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் அவர் களுக்கு ஊதியம் வழங்க இயலாத சூழல் இருப்ப தையும் காண முடிகிறது” என்று நீதிபதிகள் கூறியிருக்கின்றனர். அத்துடன் வழக்கை ஒத்திவைத்த அவர்கள், ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்காத முதலாளிகள் மீது எந்தவொரு கட்டாய நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது என்று ஏற்கெனவே தாங்கள் பிறப்பித்த உத்தரவை ஜூன் 12 வரை நீட்டிப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

;