tamilnadu

img

பாலஸ்தீனத்திற்கு மோடி அரசு துரோகம்

புதுதில்லி:
பிரிட்டிஷ் வல்லாதிக்கத்தில் நானூறு ஆண்டுகாலம் அடிமைப் பட்டுக் கிடந்த இந்தியா, தனது விடுதலைக்குப் பின், உலகளவில் வல்லாதிக்கத்தை எதிர்ப்பதையும், ஒடுக்கப்படும் நாடுகளுக்கு நேசக்கரம் நீட்டுவதையுமே வெளியுறவுக் கொள்கையாக வரித்துக் கொண்டிருந்தது.

அந்த அடிப்படையில்தான், அமெரிக்க, இஸ்ரேல் நாடுகளின் வல்லாதிக்கத்தால் சொந்தநாட்டை பறிகொடுத்த நின்ற பாலஸ்தீனர்களும், பாலஸ்தீன நாட்டிற்கும், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா ஆதரவு தெரிவித்து வந்தது.ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜகஅரசு, ஐக்கிய நாடுகள் அவையில் முதன்முறையாக இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்து, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலஸ்தீனத்தில் செயல் பட்டு வரும் அமைப்பு ‘ஷாகீத்’ ஆகும். அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் பாலஸ்தீனியர்கள் மீதுநடத்தும் தாக்குதல்களை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெற்றுத் தரும் மனித உரிமைக்கான பணிகளை இந்த அமைப்பு செய்து வந்துள்ளது. அந்த அடிப்படையில், ஐக்கிய நாடுகள் அவையில் தங்களை கண்காணிப்பு உறுப்பினராக்க வேண்டுமென்று ‘ஷாகீத்’ கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனால், இதற்கு கடும்எதிர்ப்பு தெரிவித்த இஸ்ரேல்,‘ஷாகீத்’ அமைப்பு தீவிரவாதிகளுடன் தொடர்புடையது என் றும், ஹமாஸ் இயக்கத்தின் மற்றொரு பிரிவுதான் இது என்றும் கூறியுள்ளது. மேலும், ஷாகீத்அமைப்பை கண்காணிப்பு உறுப்பினர் ஆக்கக் கூடாது என்றுஐக்கிய நாடுகள் அவையில் தீர்மானம் கொண்டுவந்துள்ளது.இந்த தீர்மானத்தை, ரஷ்யா,சீனா, பாகிஸ்தான், எகிப்து, மொராக்கோ போன்ற நாடுகள்எதிர்த்து வாக்களித்த நிலையில்,வழக்கத்திற்கு மாறாக, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து, அந்ததீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்துள்ளது. 

இதனால் இஸ்ரேல் கொண்டுவந்த தீர்மானம் 28-14 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது.ஜூன் 6-ஆம் தேதி ஐ.நா. அமைப்பின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் இந்தவாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. எனினும், இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்த தகவல் தற்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இந்தியாவுக்கான இஸ்ரேல் துணை தூதர் மயா கடோஷ், “எங்களுக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியாவுக்கு நன்றி.இரு நாடுகளும் இணைந்து தீவிரவாதிகளை வேரறுப்போம்” என்றுட்விட்டரில் பதிவிட்ட பிறகே உண்மை வெளிப்பட்டுள்ளது. 

“தெற்காசியாவிலிருந்து எங்களுக்கு ஆதரவு கிடைத்திருப்பது நல்லதொரு தொடக்கம்”என்றெல்லாம் ட்விட்டர் பதிவில்மயா கடோஷ் புளகாங்கிதப் பட்டுள்ளார். ஆனால், இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்தது குறித்து, இந்திய அரசு இதுவரை வாய் திறக்கவில்லை.
 

;