tamilnadu

img

இழுத்தடிப்பு செய்யப்படும் இ.பி.எப். வட்டி உயர்வு

புதுதில்லி:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.65 சதவிகிதம் உயர்த்தப்படுவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் கூறியுள்ள நிலையில், அதிகாரப்பூர்வஅறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்பதையும் அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.வட்டியை உயர்த்துவதற்கான, இபிஎப் அறங்காவலர் குழுவின் பரிந்துரை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கடைக்கண் பார்வைக்காக, இப்போதும் அவரது மேசையில் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.2017-18 நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு (Employees’ Provident Fund) 8.55 சதவிகிதம் வட்டிமட்டுமே வழங்கப்பட்டது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத குறைவான வட்டிவிகிதம் என்பதால், தொழிலாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். 2018-19 நிதியாண்டிற்கான வட்டி விகிதத்தையாவது உயர்த்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

இபிஎப் அறங்காவலர் குழு கூட்டங்களில் (Central Board of Trustees), வட்டிவிகிதத்தை குறைந்தபட்சம் 8.70 சதவிகிதம் வரை உயர்த்தி வழங்கலாம் என்று பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வட்டியை 8.65 சதவிகிதமாக உயர்த்துவதற்கு, ரூ. 151 கோடியே 67 லட்சம் தேவைப்படும்; 8.7 சதவிகிதமாக உயர்த்தினால், ரூ. 157 கோடி தேவைப்படும்; அதற்கான நிதியும் அரசிடம் கையிருப்பு உள்ளது என்று எடுத்துரைக்கப்பட்டது. ஆனால், மோடி அரசு அதனை ஏற்காமல் இழுத்தடித்து வந்தது.இறுதியாக, கடந்த பிப்ரவரி மாதம் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் தலைமையில் கூடிய இ.பி.எப்.ஓ. அறங்காவலர் குழுகூட்டத்தில், வட்டியை 8.65 சதவிகிதமாக அதிகரிக்க முடிவு செய்து, நிதி அமைச்சகத்துக்கு பரிந்துரை வழங்கியது. ஆனால், தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் நிதியமைச்சகம் அதற்கு ஒப்புதல் வழங்கவில்லை.இதனிடையே 2 நாட்களுக்கு முன்புசெய்தியாளர்களிடம் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார், 2018-19ஆம் நிதியாண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டிவிகிதம் 8.65 சதவிகிதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார். இதன்மூலம் 6 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.

இது ஓரளவிற்கு, தொழிலாளர் களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது என்றாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாததால், மறுபுறத்தில் ஏமாற்றமாக இருந்தது. இந்நிலையில் இபிஎப் வட்டி விகிதம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பதை சந்தோஷ் கங்குவாரும் ஒப்புக் கொண்டுள்ளார்.“நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இப்போதெல்லாம் ரொம்ப பிசியாக இருக்கிறார். நாங்கள் வழங்கிய பரிந்துரை அவரிடம்தான் உள்ளது. அவர் அதனை நிராகரிக்கவில்லை. எனவே, இன்னும் சில நாட்களில் அதற்கு ஒப்புதல் வழங்கப் பட்டு விடும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். “எதிர்வரும் பண்டிகைக் காலத்துக்கு முன்பாகவே 2018-19 நிதியாண்டிற்கான வட்டியாக 8.65 சதவிகிதம் வழங்கப்பட்டு விடும்” என்றும் சமாளித்துள்ளார்.

;