tamilnadu

img

அமேசானை காப்பாற்றாவிட்டால் உலகின் அழிவு தொடங்கும்

அமேசான் காடுகளின் அழிவைப் பற்றி சென்னை கேரள சமாஜத்தில் செப்டம்பர் 17 செவ்வாயன்று, சென்னை மக்கள் மேடை சார்பில்  கருத்தரங்கம் நடைபெற்றது.   எம்.ராமகிருஷ்ணன், ஜி.செல்வா ஆகியோரது ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் கருத்தாளர்களது உரை, அதிர்ச்சிகரமான விபரங்களை அளித்தது.

சுற்றுச்சூழல் எழுத்தாளர், செயற்பாட்டாளர் கோவை சதாசிவம்

அமேசான் பற்றி எரிகிறது என்று கூறினால் சார் இனி பொருட்கள் வாங்க முடியாதா என்று கேட்கும் அளவிற்குத்தான் புரிதல் இருக்கிறது. இணையத்தில் பொருள்வாங்கும் நிறுவனமான அமேசான் தெரிந்த அளவிற்கு ‘உலகின் நுரையீரல்‘ என வர்ணிக்கப்படும் காட்டை நம் கல்விப்புலம் அறிமுகப்படுத்தாமல் இருப்பது வேதனையே. ஒரு மரம் பறவைகள், புழுக்கள், பூச்சிகள், தேனீக்கள் உள்ளிட்ட 86 வகையான உயிரினங்களை வாழ்விக்கிறது. உயிரினங்கள் உலகில் வாழவந்தவை. மனிதர்கள் பிழைக்கவந்தவர்கள். 9 நாடுகளைத் தழுவியிருக்கும் அமேசான் காட்டில் 1100 காட்டாறுகள் ஓடுகின்றன. கோடிக்கணக்கான உயிர்கள் வாழ்வதாக ஆய்வுகள் சொல்கின்றன.

மழைத்துளி அந்த காட்டின் மண்ணைத்தொட 10 நிமிடங்கள் ஆகும். அனகோண்டா பாம்புகள் வாழும் இடமும் அதுதான். 55 லட்சம் சதுரகிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காடு எரிவது நாசா ஆய்வு மையம் சொன்னபிறகு தான் தெரிகிறது. அந்த காடு திட்டமிட்டு முதலாளித்துவ ஆட்சியாளர்களால் எரிக்கப்படுகிறது.  ஒரு கிலோ பன்றிக் கறி உற்பத்தி செய்ய 5000 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. இதனால் சீன அரசு பன்றி வளர்ப்பை தடை செய்துவிட்டது. உற்பத்தி பண்பாட்டில் மாற்றம் வராவிட்டால் கலாச்சாரம் சீரழியும். பவானி, காவிரி, பாலாறு, நொய்யலாறு உள்ளிட்ட ஆறுகளை ஆட்சியாளர்கள் சொல்லும் உற்பத்திப் பண்பாட்டினால்  தொலைத்து வருகிறோம். உலகின் 20 விழுக்காடு உயிர்க் காற்றை தருகிற, 5 விழுக்காடு மழைத்தருகிற  அமேசானை காப்பாற்றாவிட்டால் உலகின்  அழிவு தொடங்கும்.  தமிழகத்திலும் நமது மேற்குத்தொடர்ச்சி மலையை காப்பாற்றவேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலையில் இன்னும் எடுக்கப்படாத கனிம வளங்களை வெட்டி எடுக்கும் பொருட்டு பெருமுதலாளிகளுக்கு தாரைவார்க்க மத்திய மோடி அரசு முயற்சி செய்கிறது.

‘பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர்ராஜன் 

உலகின் 90விழுக்காடு பனிப்பரப்பு கொண்ட கிழக்கு அண்டார்டிகா தற்போது வேகமாக உருகி வருகிறது. இது தொடர்வதால் கடல் மட்டம் உயர்ந்து உலகின் நிலப்பரப்பு நீரில் மூழ்கி பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறது ஆய்வு. பனிமலைகள் உருகுவதால் 2016ல் 25 ஆயிரம் பென்குவின்கள் அழிந்துவிட்டன.  கடந்த மாதம் அண்டார்டிகாவில் வாழும் எம்பரர் பென்குயின்கள் இனப்பெருக்கம் செய்யமுடியாமல் ஒட்டுமொத்த இனமே பேரழிவை சந்தித்து வருவதாக லண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.  கடந்த 20 ஆண்டுகளில் கடலூர் மாவட்டம் பிச்சாவரம் முதல் நாகப்பட்டினம் வரை சுமார் 4800 ஏக்கர் நிலம் கடல் ஆட்கொண்டுவிட்டது.

மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகளில் 2 காணவில்லை. 2032க்குள் மேலும் 4 தீவுகள் காணாமல் போகும் நிலை உள்ளது. அமெரிக்காவைபோன்று 50 மடங்கும்,  தமிழ்நாட்டை போன்று 42 மடங்கு பெரிய நிலப்பரப்பை கொண்ட அமேசான் அழிவை நோக்கிச் செல்கிறது.  நமக்குத் தேவையான ஆக்சிஜனை 70விழுக்காடு கடலும் 20விழுக்காடு அமேசானும், மீதமுள்ள 10விழுக்காடு பிறவகைகளிலும் கிடைக்கிறது. தற்போது நமது நுரையீரலில் 20விழுக்காடு எரிந்து கொண்டிருக்கிறது. ஒருநிமிடத்திற்கு 3 கால்பந்தாட்ட மைதானம் அளவு எரிந்து சாம்பலாகிறது. இதனால் 10லட்சம் பூர்வகுடி மக்கள் தாங்கள் வாழ்விடத்தை இழந்துவிட்டனர்.  இந்தியாவில் ஏற்படும் 1000 மரணங்களில் 750 மரணங்கள் மட்டும் நான்கு தொற்றா நோய்களான புற்றுநோய், மாரடைப்பு, சர்க்கரை, சிறுநீரகம் ஆகியவற்றால் நிகழ்கிறது. இது நமது இருத்தலையே கேள்விக்குறியாக்கியுள்ளது. தமிழகம் மிகக்குறுகிய காலத்தில் 4 புயலை சந்தித்துள்ளது. காலநிலையை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும். இயற்கையை பாதுகாக்கவேண்டும்.

ஐஐடி பேராசிரியர்  கல்பனா கருணாகரன்

ஆண்டுதோறும் அமேசானில் காட்டுத்தீ ஏற்படும். ஆனால் இந்தஆண்டு திட்டமிட்டு தீவைக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 19 அன்று  பிரேசில் நாட்டின் வானத்தை மறைக்கும் அளவிற்கு காட்டுத்தீ பரவியபிறகே மக்கள் உணர்ந்துள்ளனர். பிரேசில், பெரு, வெனிசுலா, கொலம்பியா, பொலிவியா, ஈக்வடார் உள்ளிட்ட 8 நாடுகளை உள்ளடக்கிய அமேசான் காடு கடந்த ஆண்டு 40ஆயிரம் முறையும் இந்த ஆண்டு 80ஆயிரம் முறையும் எரிக்கப்பட்டுள்ளது.

அந்நியச்செலாவணியை ஈட்டுவதற்காக கனிமவளங்களைச் சுரண்டும் சுரங்கத் தொழில், சோயா விவசாயத் தொழிலுக்காக 5 முதலாளித்துவ அரசுகள் அமேசானை அழிக்க முயற்சிக்கின்றன. அமேசான் காட்டுக்குள் 10 லட்சம் பூர்வீகக்குடி மக்களு க்கும், பண்ணை விவசாய கூலிப்படை யினருக்கும் இடையே குழுப்போர் நடந்து கொண்டு இருக்கிறது. முதலாளிகளின் மூலதனம் உருவானதே வன்முறையில் தான். அதற்காக அவர்கள் எதையும் செய் வார்கள். உலகின் பலநாடுகளில் பொது  சொத்துக்களை தனியார் உடமையாக்கு வது, இயற்கையை, கனிம வளங்களை அப கரிப்பது, பூர்வகுடிகளை அப்புறப்படுத்து வது, அழகான மாநிலங்களை சந்தைப்படு த்துவது, அரசுகள் மூலம் உரிமைகள் பறிப் பது என்பதுதான் முதலாளித்துவ ஆட்சி. இதற்கு எதிராக மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்து அணிதிரட்ட வேண்டும்.
 

;