tamilnadu

img

பாஜக ஆட்சிக்காலம் வரலாற்றுப் புத்தகங்களில் இருண்ட காலமாக எழுதப்படும்

மாநிலங்களவையில் எளமரம் கரீம் இடித்துரை

புதுதில்லி, பிப். 11- மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எளமரம் கரீம் பேசியதாவது:

ரத்தக்கறை படிந்த கரங்கள்

நம் நாடு மிகவும் ஆழமான முறையில் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அது குறித்து குடியரசுத் தலைவர் உரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த அரசாங்கம், நம் அரசமைப்புச் சட்டத்தை உயர்த்திப்பிடித்து, அதனைப் பாதுகாப்பதில் பரிதாபகரமான முறையில் தோல்வி அடைந்திருக்கிறது. நம் அரசமைப்புச்சட்டத்தில் பொறித்துள்ள மதச்சார்பின்மை மற்றும் சகோதரத்துவக் கொள்கைகளை அழித்திட தன்னாலான அனைத்தையும் இந்த அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. இந்த அரசாங்கத்தின் பின்னால் இருந்துகொண்டு செயல்படும் சக்திகள்,  நம் சமூகத்தில் நிலவும் சமூக நல்லிணக்கத்தை அழித்து ஒழித்திடவும், மதச்சிறுபான்மையினர் மத்தியில் ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலையை உணரும் விதத்தில் வன்முறை வெறியாட்டங்களைத் தொடர்ந்து மேற்கொண்டும் வருகின்றன. ஆளும் கட்சி உறுப்பினர்கள், நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள்  குறித்துக் கொஞ்சமும் கவலைப்படாமல், தங்கள் கண்களையும், காதுகளையும் மூடிக்கொண்டிருக்கிறார்கள். உங்கள் கார்ப்பரேட் எஜமானர்களைக் குஷிப்படுத்துவதற்காக, சாமானிய மக்களைக் கசக்கிப்பிழிந்ததன் விளைவாக உங்கள் கரங்கள் ரத்தக்கறைகளுடன் காணப்படுகின்றன.

பரிதாபகரமான தோல்வி

ருண்ட காலமாக எழுதப்படும். நம் நாட்டின் அவமானகரமான நிலையினை குறித்தோ அதை எப்படிச் சரிசெய்யப்போகிறோம் என்பது குறித்தோ குடியரசுத் தலைவர் உரை எதுவுமே கூறாது பரிதாபகரமான முறையில் தோல்வி அடைந்திருக்கிறது. உண்மையில் இந்த அரசாங்கமானது, நம் நாட்டை புதைகுழிக்குள் தள்ளுவதற்குக் கடுமையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  இப்போது நம் நாடு மிகவும் மோசமானமுறையில் சந்தித்துவரும் பொருளாதார மந்தம் குறித்து எதுவும் கூறாது தோல்வி அடைந்திருக்கிறது. நாட்டின் சேமிப்பு விகிதத்திலும், உள்நாட்டு மூலதன உருவாக்கத்திலும், முதலீட்டு வளர்ச்சியில் வீழ்ச்சியும், பல்வேறு தொழில்துறைகளில் ஏற்பட்டிருக்கிற வீழ்ச்சி குறித்தும் எதுவுமே கூறப்படவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் விரிவான அளவிற்கு இருக்கிறது. வறுமையின் கொடூரமான நிலை, வலுவான கிராக்கி மற்றும் பண்டங்கள் சந்தையில் சுருக்கம் ஆகியவற்றை மிகவும் கூர்மையான வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றிருக்கிறது.  இவற்றின் விளைவாக, தொழில்துறைகள் தங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடியாத விதத்தில் தங்கள் உற்பத்திகளில் கடும் வெட்டினை ஏற்படுத்தியிருக்கின்றன. பலதொழிற் சாலைகள் மூடப்பட்டுவிட்டன. இவற்றால் ஏராளமான தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இருக்கின்ற தொழிலாளர்களுக்கும் ஊதியங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் மக்களை வறிய நிலைக்குத் தள்ளிக்கொண்டிருக்கிறது. வேலையின்மை விகிதம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்திருக்கிறது. நம் நாட்டின் பொருளாதாரத்தின் தற்போதைய சித்திரம் இதுவாகும். ஆனால் இதையெல்லாம் குடியரசுத்தலைவர் உரை குறிப்பிடத் தவறி இருக்கிறது.

மதத்தின் அடிப்படையிலா குடியுரிமை

இந்த அரசாங்கம், நம் அரசமைப்புச்சட்டத்தைப் பாதுகாப்பதில் தோல்வி அடைந்திருக்கிறது. நம் அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாக்க வேண்டியது தன் கடமை என்பதை அது உதாசீனம் செய்கிறது. குடியுரிமைச் சட்டத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கிற திருத்தம், அரசமைப்புச்சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள குடியுரிமையின் மீதான மதச்சார்பின்மைக் கருத்தாக்கத்தையே அரித்து வீழ்த்துகிறது. நாட்டிலுள்ள மக்களில் ஒரு பிரிவினரைப் பாகுபடுத்துகிறது. நம் அரசமைப்புச்சட்டத்தின்கீழ் குடியுரிமை மதத்தின் அடிப்படையில் எப்போதுமே இருக்கக் கூடாது. இந்த அரசாங்கம் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம், இந்தக்  கொள்கையிலிருந்து தடம் புரண்டிருக்கிறது. இந்தச் சட்டமானது, நம் ஆட்சியாளர்களின் ‘இந்தியாவை ஒழித்துக்கட்டும்’ தொடரில் சமீபத்திய கிளைக்கதையாகும். குடியரசுத்தலைவர், தன்னுடைய உரையில், ஒருசில மாதங்களுக்குள்ளேயே சில சட்டங்களை நிறைவேற்றியிருப்பதற்காக, இந்த அரசாங்கத்தைப் பாராட்டி இருக்கிறார். ஆனால், இவை அனைத்தும் நாடாளுமன்றத்தின் நடைமுறைகளை அரித்து வீழ்த்தியதன் மூலம் மேற் கொள்ளப்பட்டன.  சட்டங்களின்மீது நாடாளுமன்றத்தின் நுண்ணாய்வு அனுமதிக்கப்படவில்லை. நாடாளுமன்ற நடைமுறை என்றால் என்ன பொருள்? குடியரசுத் தலைவர் உரை, அயோத்தி மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைக் குறிப்பிட்டிருக்கிறது. 1992இல் வரலாற்று நினைவுச்சின்னமாக விளங்கிய பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்படுவதற்கு முன்னர், பல்வேறு நீதிமன்றங்களிலிருந்தும் பல்வேறு தீர்ப்புகளும் கட்டளைகளும் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. அந்தத் தீர்ப்புகளையெல்லாம் இன்றைய ஆட்சியாளர்கள் எப்படிக் கையாண்டார்கள் என்பதை இந்த நாடு நினைவுகூர்கிறது. அவர்கள் வன்முறை வெறியாட்டங்களுக்குத் தலைமை தாங்கி, பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கினார்கள். இவ்வாறு வன்முறையில் ஈடுபட்ட இதே நபர்கள்தான் இப்போது நீதித்துறையை மதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

குடியரசுத் தலைவரின் உரை, கிளர்ச்சிகள் என்ற பெயரில் நடைபெறும் வன்முறை, சமூகத்தையும், நாட்டையும் பலவீனப்படுத்திவிடும் என்று கூறுகிறது. ஆனால், அரசாங்கமே வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிடும்போது, நாட்டின் குடிமக்கள் என்ன செய்வது? நாட்டின் பல பகுதிகளிலும் அமைதியான முறையில் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபடுபட்டவர்கள்மீது அரசாங்கமே வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டதைப் பார்த்தோம். கவுரவமிக்க கல்வி நிலையங்களிலும், பல்கலைக் கழகங்களிலும் நடைபெற்ற நிகழ்வுகள் இவற்றைத் தெளிவாக மெய்ப்பிக்கின்றன. பிறிதொரு நாளில், கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் மீது ஒருவன் துப்பாக்கியால் சுடுவதையும், அதனைப் போலீசார், ஏதோ ஒரு விளையாட்டைப் பார்ப்பதைப் போல வெறுமனே பார்த்துக்கொண்டிருந்ததையும் பார்த்தோம்.   குடியரசுத் தலைவர் உரை, தங்களுக்குப் பெரும்பான்மை கிடைத்ததாக மறைமுகமாகக் கூறுகிறது. மக்களவைத் தேர்தலுக்குப்பின்னர் இப்போதுள்ள நிலை என்ன? மகாராஷ்டிராவில் என்ன நடந்தது? மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் கட்சியின் சாணக்கியர்கள், ஆட்சியை அமைப்பதற்காக, இரவும் பகலும் வேலை செய்தார்கள். இறுதியில், சாணக்கியர்கள் அனைவரும் அரபிக்கடலில் மூழ்கிப் போனார்கள்.  பாஜக-விற்கு எதிரான அரசாங்கம் இந்தியாவின் நிதித் தலைநகரில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது.

பெரும்பான்மை என்பது உங்களுக்கு கொடுத்த உரிமையா?

ஜார்கண்டில் என்ன நடந்தது? எனவே, தங்களுக்குப் பெரும்பான்மை கிடைத்தது என்று கூறுவதெல்லாம் பழங்கதையாகும். இவ்வாறு பெரும்பான்மை கிடைத்தது என்பதன்மூலம், நீங்கள், உங்கள் விருப்பு வெறுப்புக்கேற்ப எவ்விதமான சட்டத்தையும் நிறைவேற்றிக் கொள்வதற்கு உங்களுக்கு வழங்கப்பட்ட உரிமம் என்றும், அனைத்துக் குடிமக்களும் அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் நினைக்கிறீர்களா?

இந்தப் பெரும்பான்மை என்பது, நம் அரசமைப்புச் சட்டத்தைத் தடம் புரளச் செய்வதற்கான ஒன்று அல்ல என்று அரசாங்கத்திற்கு நினைவூட்ட விரும்புகிறேன். நம் அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களுக்கும், கொள்கைகளுக்கும் எதிராக நீங்கள் சட்டங்களை நிறைவேற்றினால், பின் அவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்காதீர்கள். நாடு முழுதும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கிளர்ச்சிப் போராட்டங்களைப் பாருங்கள். நம் நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுதும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கிளர்ச்சிப் போராட்டங்கள் நடந்து கொண்டிருப்பதைப் பாருங்கள். ஐ.நா. மன்றத்திற்கு முன்பு, ஒரு குழு கூடி,குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டதைப் பார்த்தோம். இது நம் நாட்டிற்குக் பெருமை  அளித்திடுமா?

நாட்டுக்கே வழிகாட்டும் கேரளம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, கேரள சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் மன்ற உறுப்பினர்களால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு கேரள மாநிலம் நாட்டிற்கே வழிகாட்டியிருக்கிறது என்று கூறுவதில் பெருமிதம் கொள்கிறேன். அந்தத் தீர்மானத்தை கேரள சட்டமன்றத்தில் உள்ள ஒரேயொரு பாஜக உறுப்பினரும்கூட ஆதரித்துள்ளார். முதலமைச்சரின் தலைமையின்கீழ் அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும், கேரளாவில் அனைவரும் இணைந்து ஒரு கூட்டுக் கிளர்ச்சிப் போராட்டமும் நடைபெற்றுள்ளது. கேரளாவில் 75 லட்சம் மக்கள் பங்கேற்ற மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து, வேறு பல மாநில சட்டமன்றங்களும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கின்றன. இவற்றையெல்லாம் இந்த அரசாங்கம் பரிசீலனை செய்திட வேண்டும். மக்களின் உணர்வுகளை இந்த அரசாங்கம் நிச்சயமாகப் பரிசீலனை செய்திட வேண்டும். அடுத்து, பட்ஜெட்டைப் பொறுத்தவரை, இந்த அரசாங்கம் மதிப்புமிக்க பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியாருக்குத் தாரை வார்க்கப்படும் என அறிவித்திருக்கிறது. இவ்வாறு நாடு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாட்டு மக்கள், குறிப்பாகத் தொழிலாளர்களும் விவசாயிகளும் மிகவும் வறிய நிலை யில் இருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில்  குடியரசுத் தலைவர் உரையை என்னால் ஆதரிக்க முடியவில்லை. இவ்வாறு இளமாரம் கரீம் கூறினார்.   (ந.நி.)




 

;