பீகார் தேர்தலையொட்டி தான் குறி வைக்கப்பட்டுவதாக கன்னையா குமார் குற்றம் சாட்டி உள்ளார்.
தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கன்னையா குமார், உமர் காலித், உள்ளிட்ட ஒன்பது பேர் மீதான தேசத் துரோக வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து அடுத்த கட்ட நடவடிக்கைக்குச் செல்ல டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவுக்கு டெல்லியின் ஆம் ஆத்மி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து என்.டி.டி.வியிடம் பேசிய கன்னையா குமார், இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் பீகார் மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி முன்னதாகவே தான் குறிவைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும், சில வழக்குகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். கடந்த மாதம் மூன்று ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளுடன் டெல்லிக்குச் சென்றிருந்தபோது பிடிபட்ட மூத்த ஜம்மு-காஷ்மீர் காவல்துறை அதிகாரி டேவிந்தர் சிங் மீது தேசத் துரோக வழக்கு பதியப்படவில்லை என கன்னையா குமார் குறிப்பிட்டிருக்கிறார். தேசத் துரோக வழக்குகள் குறுகிய அரசியல் நோக்கத்திற்காகவும் ஆதாயத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் விமர்சித்திருந்தார்.
மேலும், தான் தேச விரோத முழக்கங்கள் எதையும் எழுப்பவில்லை என்றும், பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் சூழலில் இம்மாதிரியாக வழக்குகள் பதியப்படுவதையும் சுட்டிக்காட்டியிருந்தார். அரசியல் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் இந்த மாதிரியான குற்றச்சாட்டுகளை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவின் விண்ணப்பத்தினை, ஒரு வருடத்திற்குப் பின்னர் ஆம் ஆத்மி கட்சி ஏன் வழக்குத் தொடர அனுமதித்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க கன்னைய குமார் மறுத்துவிட்டார்.