tamilnadu

img

தமிழக மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு எந்த நிதியும் விடுவிக்கப்படவில்லை... பி.ஆர்.நடராஜன் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

புதுதில்லி:
தமிழகத்தில் மெட்ரோ ரயில் சேவை திட்டங்களுக்காக எந்த நிதியும் விடுவிக்கப்படவில்லை என மக்களவையில் பி.ஆர்.நடராஜன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.

மெட்ரோ ரயில் சேவை சம்பந்தமாக ,கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வியாழனன்று, மக்களவையில் எழுப்பிய கேள்விகளும் அதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரத் துறை அமைச்சர் (தனிப் பொறுப்பு)  ஹர்தீப் சிங் பூரி அளித்த பதில்களும் பின்வருமாறு: 

தற்போதுவரை, நாடு முழுவதிலும் மெட்ரோ ரயில் சேவை வசதியைப் பெற்றுள்ள நகரங்களின் பெயர்கள் மற்றும் எண்ணிக்கை என்ன? குறிப்பாக தமிழக நகரங்கள் எவை? மெட்ரோ ரயில் சேவை திட்டம் சம்பந்தமாக ஏதேனும் திட்ட வரைவு முன் மொழிவுகளை அரசு பெற்றுள்ளதா? அப்படி யெனில், அதன் விவரங்கள் மற்றும் அதற்கென அரசால் வழங்கப்பட்ட நிதி என்னென்ன?. இவ்வாறு பி.ஆர்.நடராஜன் கேள்வி எழுப்பினார்.இதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சர் (தனிப் பொறுப்பு)  ஹர்தீப் சிங் பூரி அளித்த பதில் வருமாறு :  

தற்போது, நாடு முழுவதிலும் 18 நகரங்களில் அதாவது, தில்லி, நொய்டா, கிரேட்டர் நொய்டா, காஸியாபாத், ஃபரிதாபாத், பல்லப்கார், பகதூர்கார், குருக்ராம், பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை, ஜெய்ப்பூர், கொச்சி, லக்னோ, மும்பை,அகமதாபாத், நாக்பூர் ஆகிய நகரங் களில் மெட்ரோ ரயில் சேவை வசதி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.நகரப் போக்குவரத்து என்பது நகர மேம்பாட்டின் ஒருங்கிணைக்கப்பட்ட பகுதியாகும். இது மாநில அரசு சம்பந்தப்பட்ட பொருளாகும். மெட்ரோ ரயில் திட்டம் உட்பட, நகரப் போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளை ஆரம்பித்த லும், மேம்படுத்துவதும் , அதற்காக நிதி வசதி செய்தலும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அல்லது யூனியன் பிரதேசங்களின் பொறுப்பாகும். மாநில அரசுகள் அல்லது யூனியன் பிரதேசங்களால் அவ்வப்போது முன் வைக்கப்படும் நகரங்களுக்கான/நகர ஒருங்கிணைப்பிற்கான, மெட்ரோ ரயில்சேவை திட்டங்களின், திட்ட சாத்தியக்கூறு மற்றும் ஆதாரங்களின் கிடைக்கும் தன்மை ஆகியவை அடிப்படையில் , இத்திட்டங்களுக்கான நிதி உதவியை மத்திய அரசு பரிசீலிக்கிறது. மத்திய அரசின் நிதி உதவி வேண்டி, அமைச்சகத்தால் பெறப்பட்டுள்ள மெட்ரோ ரயில்/ பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு  திட்டங்களுக்காக எந்த நிதியும் விடுவிக்கப்படவில்லை.இவ்வாறு மத்திய அமைச்சர் பதிலளித்தார்.

;