tamilnadu

img

கடந்த 2 ஆண்டுகளில் சதுப்பு நிலங்களை பாதுகாக்க எந்த நிதியும் ஒதுக்கவில்லை... பி.ஆர்.நடராஜன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

கோயம்புத்தூர்
நாட்டில் உள்ள சதுப்பு நிலங்களின் சூழலியலை பாதுகாக்கவும் மேலாண்மைசெய்யவும் மாநில அரசுகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்த நிதியும் ஒதுக்கவில்லை என்று மக்களவையில் பி.ஆர்.நடராஜன் எழுப்பிய கேள்விக்கு மத்திய வனத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார். 

அனைத்து பன்னாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்கள் எனப்படும் சதுப்புநிலங்களின் சூழலியல் தன்மையைத் தக்கவைப்பதற்கும் அவற்றின் தொடர்ந்த, சிறந்த பயன்பாட்டினை உறுதி செய்வதற்கும் அந்நாடுகளின் பொறுப்புகளை உள்ளடக்கி ஏற்படுத்தப்பட்டதுதான்   ராம்சார் ஒப்பந்தம் அல்லது ஈரநிலங்களுக்கான ஒப்பந்தம்  ஆகும்.இந்த ஒப்பந்தம் 1971 ஆம்ஆண்டில் ஈரான் நாட்டின் ராம்சார் என்ற இடத்தில் ஈரான் நாட்டின் சுற்றுச்சூழல் துறையால் ஏற்படுத்தப்பட்டு 1975 முதல் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. 

சதுப்பு நிலங்கள் பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவைநாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மக்களவையில் கேள்வி எழுப்பினார். அதில்,  நாட்டில் ராம்சார்தளங்களாக பாதுகாக்கப்பட்டுள்ள சதுப்பு நிலங்களின்அமைவிடம் பற்றிய விவரங்கள்  மாநில/யூனியன் பிரதேசங்கள் வாரியாக தேவை? இத்தகு சதுப்பு நிலங்களை பாதுகாக்க கடந்த 3 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகை எவ்வளவு?  நாடு முழுவதும் மேலும் சதுப்பு நிலங்களை கண்டறிய அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல், வனம் - காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பாபூல் சுப்ரியோ பதிலளித்துப் பேசியதாவது: ராம்சார் தளங்களை நியமிப்பதற்காக, ராம்சார்  அளவுகோல்களின் அடிப்படையில், இந்தியாவில் 1981 முதல் 37 ராம்சார் தளங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. மாநில/யூனியன் பிரதேசங்கள் வாரியாக, இந்தியாவில் உள்ள, ராம்சார் தளங்களின் பட்டியல் இணைப்பு-1 ல் கொடுக்கப்பட்டுள்ளன.நீர்வாழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான தேசியதிட்டத்தின் கீழ்,  ராம்சார்தளங்கள் உள்ளிட்ட ஈரநிலங்களை பாதுகாக்கவும், நிர்வகிக்கவும், மாநில/யூனியன் பிரதேசங்களுக்கு துணை நின்று வருகிறது. இதனிடையே இந்தியாவில், ராம்சார் தளங்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்காக கடந்த மூன்று ஆண்டுகளில், மத்திய அரசுக்கும்,அந்தந்த மாநில அரசுகளுக்கும் இடையில், செலவு பகிர்வு அடிப்படையில், வழங்கப்பட்ட நிதி ஆதரவின் விவரங்கள் இணைப்பு-2ல் உள்ளன. தொடர்ந்து திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 18 பட்டறைகள் நடத்தப்பட்டு, ராம்சார் தளங்களை அறிவிக்கும் செயல்முறை குறித்து உணர வைக்கப்பட்டுள்ளது. ராம்சார் தளங்கள் பட்டியல், மாநில வாரியாக கேரளாவில், அஸ்தமுடி ஈரநிலம், சாஸ்தான் கோட்டை ஏரி மற்றும் வெம்பநாடு ஈரநிலமும், இதேபோல் தமிழகத்தில் கோடியக்கரை வன விலங்குகள் மற்றும் பறவைகள் சரணாலயம் ஆகியவை இணைப்பு- 1 இல் உள்ளது. 

இதனைத்தொடர்ந்து, ராம்சார் தளங்களை பாதுகாக்கவும் மேலாண்மை செய்யவும் மாநில அரசுகளுக்கு கடந்த மூன்றாண்டுகளில் அரசால் விடுவிக்கப்பட்ட நிதி விவரங்களான, கேரளாவில் 2017-18 ஆம் ஆண்டு அஸ்தமுடி ஈரநிலத்திற்கு ரூ.86.85 லட்சமும், சாஸ்தான் கோட்டை ஏரிக்குரூ.35.775 லட்சமும், வெம்பநாடு ஈரநிலத்திற்கு ரூ. 84.45லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2018-19 ஆண்டுமற்றும் 2019-20 ஆம் ஆண்டில்எந்தத் தொகையும் வழங்கப்படவில்லை. தமிழகத்தில் 2017-18 ஆம் ஆண்டு கோடியக்கரை வனவிலங்குகள் மற்றும்பறவைகள் சரணாலயத்திற்கு  25.048 லட்சமும், 2018-19 ஆம் ஆண்டில் 49.898 லட்சமும், 2019-20 ஆம் ஆண்டில்44.77 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு மத்திய அமைச்சர் பாபூல் சுப்ரியோ கூறினார். 

;