tamilnadu

img

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை உயர்தனிச் செம்மொழியாம் தமிழிலும்  வெளியிடுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

நாட்டின் உயரிய நீதிவழங்கும் அமைப்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஐந்து மாநில மொழிகளில் வெளியிடப்படும் என தலைமை நீதிபதி அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. அவரவர் மொழியில் தீர்ப்புகள் கிடைக்கும்போதுதான் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தீர்ப்புகளுடைய அனைத்து அம்சங்களையும் புரிந்து கொள்வதற்கு பயன்படும். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் நாடு முழுவதும் உள்ள மக்கள் இத்தீர்ப்புகளை புரிந்து கொள்வதற்கு அவரவர் தாய்மொழியில் வெளியிடப்படுவதே மிகச் சிறந்த வழியாகும். இந்த வகையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் இந்தி, அசாமி, கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒடியா ஆகிய மொழிகளில் மட்டுமே தீர்ப்பு வெளியாகும் என்ற அறிவிப்பு மிகுந்த வருத்தத்தை தருகிறது.உலகின் மூத்த மொழியான செம்மொழியாம் தமிழ் அப்பட்டியலில் இடம்பெறவில்லை என்பது மிகுந்த வேதனை யளிப்பதாக உள்ளது. 

1970களில் இருந்தே வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளை மொழிபெயர்த்து வெளியிட்ட வரலாறும், பெருமையும் தமிழுக்கு உண்டு. மாண்புமிகு நீதியரசர்கள் வி.ஆர். கிருஷ்ணய்யர் - ஓ. சின்னப்ப ரெட்டி ஆகியோரின் இட ஒதுக்கீடு குறித்த தீர்ப்பு 1980லேயே வெளியாகியுள்ளது. இன்றுவரை நீதித்துறையின் பல்வேறு மட்டங்களிலும் தரப்பட்ட தீர்ப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு “தீர்ப்புத்திரட்டு” என்ற இதழில் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டு வருகிறது என்பதையும் இத்தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஏற்கனவே உயர்நீதிமன்றத்தின் சார்பில் தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்பட்டு வரும் சூழலில், உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் வெளியிடுவதில் எந்த சிக்கலும் இருப்பதற்கு வழியில்லை. 

எனவே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை தமிழ் மொழியிலும் வெளியிடுவதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.மேலும் தீர்ப்புகளை அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளிலும் வெளியிடுவதற்கும் உச்சநீதிமன்றம் ஆவன செய்ய வேண்டுமெனவும் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை...


 

;