tamilnadu

img

உ.பி. கூட்டுறவு அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

புதுதில்லி:
பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம்? என்பது தொடர்பான மனுவை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, நாள்தோறும் விசாரித்து வருகிறது.இந்த வழக்கு விசாரணையின் 22-ஆவது நாளில் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவாண் வாதிடும் போது, அயோத்தி விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக வாதாடுவதால் தன்னுடைய செயலாளர் கூட கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாக்கப்படுவதோடு மிரட்டப்படுவதாக நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார். தனக்கு மிரட்டல் விடுத்த சென்னையைச் சேர்ந்த என். சண்முகம் என்ற 88 வயது முதியவர் மீது அவதூறு வழக்கும் தாக்கல் செய்தார். சஞ்சய் கலால் பஜ்ரங்கி என்பவரின் ‘வாட்ஸ் ஆப்’ மிரட்டல்களையும், ஸ்க்ரீன் ஷாட் ஆதாரங்களுடன் தன் மனுவுடன் தவாண் இணைத்திருந்தார். 

இதனை விசாரணைக்கு எடுத்துகொண்ட உச்சநீதிமன்றம், தவாணுக்கு மிரட்டல் விடுத்த சண்முகத்திற்கு அண்மையில் நோட்டீஸ் அனுப்பியது. இதனிடையே, உத்தரப்பிரதேச மாநில கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கும் முகுத் பிகாரி வர்மா,“ராமர் கோயில் கட்டுவது நம்முடைய (பாஜக) முடிவைப் பொறுத்தது ஆகும்; ஏனென்றால், உச்ச நீதிமன்றமே நம்முடையதுதான்” என்ற பேசி சர்ச்சையைக் கிளப்பினார். இதுவும் வியாழனன்று நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த நீதிபதிகள், “இத்தகைய கூற்றுகளை ஒரு போதும் அங்கீகரிக்க முடியாது” என்று கூறியதுடன், “உச்சநீதிமன்றம் இதனை கண்டிப்பதோடு, இத்தகைய கருத்துக்கள் எத்தரப்பிலிருந்து வந்தாலும் அது தீவிரமாக உற்று நோக்கப்படும்” என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

;