tamilnadu

மதச்சார்பின்மையே மருந்து!

இலங்கையில் நிகழ்ந்த கொடூர பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்தும், அதில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், சென்னை அடையாறு செயின்ட் பேட்ரிக் கல்வி வளாகத்தில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தினர் நடத்திய கூட்டத்தில் அண்மையில் கலந்துகொண்டேன். என்னுடன் கிறிஸ்தவ, இஸ்லாமிய, இந்து மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய மத போதகர்கள் இலங்கையில் பயங்கரவாத தாக்குதலில் மரித்த மக்களுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ் பேசும்போது, அரிய கருத்துகளை முன்வைத்தார். ‘‘மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தி இயக்கங்களை முன்னெடுக்க வேண்டும்’’ என்றார் பீட்டர் அல்போன்ஸ். அண்மைக் காலத்தில் மத போதனைகள் அதிகரிக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்பி, ‘‘நல்ல கிறிஸ்தவனாக இரு, நல்ல இஸ்லாமியனாக இரு, நல்ல இந்துவாக இரு’’ என்று போதிப்பது அதிகமாக இருக்கிறது, அதே நேரத்தில் நல்ல மனிதனாக நீ வளர வேண்டும் என்று இளைய தலைமுறையினருக்குப் போதிய அளவுக்கு நாம் போதிக்கவில்லையோ என சந்தேகம் எழுகிறது’’ எனச் சரியான கேள்வியை முன்வைத்தார் பீட்டர் அல்போன்ஸ்.

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தற்கொலைப் படையாளிகளாக இயங்கியவர்கள் அனைவரும் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பெண் உள்பட அடையாளம் காணப்பட்டிருக்கும் 9 பேரும் இலங்கை குடிமக்கள். நடுத்தர, உயர் நடுத்தர மற்றும் பணக்கார குடும்பங்களைச் சார்ந்த படித்தவர்கள். இந்தக் கொடுமையை அரங்கேற்ற அவர்கள் தேர்ந்தெடுத்த நாள், கிறிஸ்தவர்கள் புனிதமாகக் கருதக் கூடிய, ஏசுபெருமான் உயிர்த்தெழுந்ததாக நம்புகிற ஈஸ்டர் திருநாள். ஈஸ்டர் நாளில் கிறிஸ்தவர்கள், குழந்தைகளுக்கு புத்தாடை அணிவித்து புது நன்மை பெறுவதற்காக தேவாலயத்துக்குச் செல்வார்கள். அவ்வாறு சென்ற பெற்றோர்கள், குழந்தைகளின் சடலங்கள்தான் வீடு திரும்பின.ஒரு தேவாலயத்துக்குள் எல்லாம் தகர்க்கப்பட்டு இயேசுவின் சிலை மட்டும் அப்படியே ரத்தக் கறை படிந்து நின்றிருந்தது. ‘‘இந்தப் பாவிகளை மன்னித்துவிடுங்கள்’’ என்று சொல்வதுபோல அந்தச் சிலை நின்றதாக ஒரு பேராயர் பேசினார். 11 இந்தியர்கள் உள்பட இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாகவும், நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.3 தேவாலயங்கள், 3 நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 8 இடங்களில் ஒரே நேரத்தில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. விமான நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் குண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. சுற்றுலாவுக்காக வந்த வெளிநாட்டவர்களும் பலியாகியுள்ளனர். உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தச் சம்பவம், மக்கள் ஒற்றுமைக்கு எதிரானது மட்டுமல்ல, இலங்கையின் பொருளாதாரத்தையும் பாதிக்கக் கூடியது. குறிப்பாக, இலங்கை பொருளாதாரத்தில் 5 சதவீத பங்களிப்பைச் செலுத்தக் கூடிய சுற்றுலாத் துறையை கடுமையாகப் பாதிக்கும்.  

அண்மைக்காலம் வரையில் இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் பெரிய சிக்கல்கள் எதுவும் எழுந்ததாகத் தெரியவில்லை. அப்படியிருக்கும்போது இவ்வளவு கொடுமையான தாக்குதல் யாரால், எதற்காகத் திட்டமிடப்பட்டிருக்கும் என்பது வரும் நாள்களில்தான் தெளிவாகும். எப்படியிருப்பினும் இந்தத் தாக்குதலுக்கு மதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, அப்பாவிகள் பலியாகியிருக்கிறார்கள் என்பது உண்மை. ஐந்து வாரங்களுக்கு முன்பு நியூசிலாந்து நாட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், மசூதிக்குள் இருந்த 50 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள். அந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கான பழிவாங்கல்தான் இலங்கையில் நடந்திருப்பதாக சில ஊடகங்கள் சொல்கின்றன. அதே நேரத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இந்தக் குண்டுவெடிப்புக்குப் பின்னணியில் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. நியூசிலாந்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு, 5 வாரங்களுக்கு முன்பு நடந்தது. இந்தக் குறுகியகால இடைவெளியில் இவ்வளவு பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டிருக்க முடியுமா? தற்கொலைப் படையாளிகளை உருவாக்க முடிந்திருக்குமா? இதற்கான தயாரிப்புகள் முன்கூட்டியே நடந்திருக்கலாம் என்று ஓர் ஊடகச் செய்தி கூறுகிறது. இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில், அனைவரையும் உறுத்துகின்ற பிரச்சனை, ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் புனிதமாக கருதுகிற ஒரு நாளை தேர்ந்தெடுத்து தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதுதான். இதுபோன்ற தாக்குதல்களுக்கு அடிப்படையாக அமைவது மத வெறுப்பு. இப்படிப்பட்ட தாக்குதல்களுக்கு இளைஞர்களை தயார்படுத்துவதையும், தொடர்ந்து இவ்வாறான தாக்குதல்களை நடத்துவதையும் பயங்கரவாத இயக்கங்கள் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன.இலங்கையில் வாழும் இஸ்லாமிய அறிஞர் நுஹ்மான், பிபிசி இதழுக்குக் கொடுத்த பேட்டியில், ‘‘இஸ்லாத்தைப் பற்றிப் பேசினாலும், அவர்கள் (ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற அமைப்புகள்) இஸ்லாத்துக்கு விரோதமானவர்கள் என்பதே எனது நிலைப்பாடாகும். இன்னும் சொன்னால், அவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் தொடர்புகளே கிடையாது. ஏனென்றால், இஸ்லாத்தை இவர்கள் போன்றோர் இஸ்லாத்தின் பெயராலேயே மிகவும் கேவலப்படுத்துகின்றனர்’’ என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அவர், இந்தத் தாக்குதல்கள் முஸ்லிம்களை பயங்கரமானதொரு சூழ்நிலைக்குள் தள்ளிவிட்டிருக்கிறது என்ற அச்சத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.மதத்தின் பெயராலான அமைப்புகளும், மதத்தை மையப்படுத்திய அரசியல் திரட்டலும் அப்பாவிகளை, சாதாரண மக்களைத்தான் பலியெடுக்கின்றன. அதே சமயம் இதுபோன்ற தாக்குதல்கள் யாருக்குப் பலன் கொடுக்கின்றன என்பதையும் பார்க்க வேண்டும்.

இராக் மீது படையெடுத்து அந்த நாட்டை சின்னாபின்னமாக்கிய அமெரிக்க ஏகாதிபத்தியம், அங்குள்ள ஷியா, சன்னி, குர்து பிரிவுகளைச் சார்ந்த இஸ்லாமியர்களுக்கு இடையிலான வேறுபாடுகளை தீவிரப்படுத்தி, மோதலை உருவாக்கியது. ஒரு கட்டத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு உருவாக்கப்படுவதற்கும் அதன் தொடர் நடவடிக்கைகளுக்கும் அமெரிக்காவே பின்புலமாக இருந்தது ஊரறிந்த உண்மை.ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு ‘‘இஸ்லாமிய அரசை’’ ஏற்படுத்துவதுதான் தன்னுடைய நோக்கம் என்று அறிவித்திருந்தது. இராக், சிரியா நாடுகளின் பகுதிகளை இணைத்து இஸ்லாமிய அரசை ஏற்படுத்தும் அவர்கள் முழக்கத்தில் படுதோல்வி அடைந்தார்கள். இருப்பினும் தாங்கள் வசப்படுத்திய இளைஞர்களை வைத்து பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்துவதை தொடர்கிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற அமைப்பு உருவாக்கத்தில் பங்கு கொண்டிருக்கும் ஏகாதிபத்திய சக்திகள், இப்போது அதனை எதிர்க்கிறார்கள்.  தங்களது நோக்கத்துக்காக பயங்கரவாத இயக்கங்களை உருவாக்குவதும் பின் ஒரு கட்டத்தில் அதே அமைப்புகளை எதிர்க்கும் கட்டாயத்துக்கு ஆளாவதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஆளும் வர்க்கத்திற்கு வாடிக்கையாக இருந்துவருகிறது. காலம் காலமாக அதிகாரத்தைக் கைப்பற்றவும், அதில் நீடித்திருக்கவும் மதத்தைப் பயன்படுத்துவது நடக்கிறது. மத உணர்வு என்பது மனிதர்களிடையே இயல்பாக எழுகிற ஒன்று, அதனை மத வெறியாக்கி, இன்னொரு மதத்தைச் சார்ந்தவர்களுக்கு எதிராக கூர்தீட்டி, மத ஆதிக்கத்தை, மத வெறுப்பை உருவாக்குவதும் அதன் வழியே அரசியல் நடத்துவதும்தான் வகுப்புவாதம்.

இந்தியாவிலும் மதத்தின் பெயரால்தான் நாட்டுப் பிரிவினை நடந்தது. வங்காளத்தை கிழக்கு/மேற்கு என ஆங்கிலேய அரசு பிரித்ததும் இந்த நோக்கத்தோடுதான். இந்திய விடுதலைக்குப் பின், இந்த அனுபவங்களையும் சேர்த்தே பரிசீலித்து, இந்திய அரசமைப்பு மதச்சார்பற்றதாக அமைக்கப்பட்டது. மதச்சார்பின்மை என்பது, மத மறுப்பு அல்ல. அரசியலுக்கும், அரசுக்கும் அப்பால் மதம் இருக்க வேண்டும். மத வழிபாடோ, மத மறுப்போ, கடவுள் நம்பிக்கையோ, கடவுள் மறுப்போ மனிதர்களின் அடிப்படை உரிமை; அதை யாராலும் மறுக்கவோ தடுக்கவோ முடியாது என்பதுதான் மதச்சார்பின்மை.மதச்சார்பின்மையை இந்திய அரசியல் சட்டம் உறுதி செய்கிறது. ஆனால், இந்திய அரசியல் களத்தில் மதச்சார்பின்மைக்கு எதிரான தாக்குதலும் தொடர்ந்து திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது. மதச்சார்பின்மை கோட்பாடு பலவீனமாவது, தேச ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்குமே பாதகமாகும். அதனைத் தடுக்கவேண்டியது தேச பக்தர்களின் கடமை. மனித குலம் தன்னைத் தானே நெறிப்படுத்திக் கொள்ளத்தான் மதம் என்று சொல்வார்கள். ஆனால், மதத்தின் பெயரால் மனிதர்கள் கொல்லப்படுவார்கள் என்றால், மக்கள் ஒற்றுமை அதன்பேரால் பிளவுபடும் என்றால், அது எந்த மதத்தின் பெயரால் நடந்தாலும் அந்த பயங்கரவாதத்தை எதிர்த்து நாம் உறுதியாகப் போராடவேண்டும். அவ்வாறு போராடுகிற ஒவ்வொருவரும் முன்வைக்க வேண்டிய முழக்கங்கள் மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம், மதச்சார்பின்மை ஆகியவையே. 


நன்றி : தினமணி, 27-04-2019


;