tamilnadu

img

கிராமப்புற வேலை உறுதித் திட்டம் இந்தாண்டு கூலி ரூ.229 ஆக நிர்ணயம் பி.ஆர்.நடராஜன் கேள்விக்கு அமைச்சர் பதில்

புதுதில்லி:
மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 2019- 2020 நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கூலி விவரங்களை மாநில வாரியாக மத்திய அரசு அளித்துள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழு தலைவரும், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினருமான நடராஜன் இது தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் அளித்த பதில்களின்படி, 2019-20 ஆம் நிதியாண்டில் தமிழகத்தில் மகாத்மா காந்தி கிராமப்புற வேலையுறுதித் திட்டத்தின்கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள கூலி ரூ.229 எனத் தெரிய வந்துள்ளது. 

எனினும் தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் இந்த முழுமையான கூலி வழங்கப்படவில்லை என்றுஅகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம்புகார் தெரிவித்தும், விலைவாசிப்புள்ளி களின்படி கூலியை ரூ.600ஆக நிர்ணயிக்க வலியுறுத்தியும், போராட்டங்கள் நடத்தியும் வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.பி.ஆர்.நடராஜன் மக்களவையில் டிசம்பர்2 அன்று, நாடு முழுவதும் முறைசாராத் தொழிலாளர்களுக்கு தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளதா எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அப்படி ஒரு திட்டம் இல்லை என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தமது பதிலில் மறுத்துள்ளார்.எனினும், மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதிச் சட்டக் கூலி தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, இச்சட்டத்தின் -பிரிவு6(1)- ன்படி கிராமப்புற மேம்பாட்டு அமைச்ச கம் ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் வழங்க வேண்டிய ஊதிய விகிதங்களை தீர்மானித்து அறி விக்கிறது எனக் குறிப்பிட்ட அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார், ஒவ்வோராண்டும் விவசாயத்தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலை புள்ளிகள் அடிப்படையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்கிறது; ஒவ்வொரு நிதியாண்டிலும் ஏப்ரல் 1 முதல் இந்த புதிய ஊதிய விகிதங்கள் அமலுக்கு வருகிறது என்றும் விளக்கினார். 2019- 20 ஊதிய விகிதங்களின்படி அதிகபட்சமாக ஹரியானா ரூ.284, கேரளா ரூ.271 அளிக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

;