tamilnadu

img

ஐசிஎஸ்சி பாடத்திட்டத்தில் ‘ஜாமுன் கா பேட்’ நீக்கம்

புதுதில்லி:
புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர் கிருஷன் சந்தரின் ‘ஜாமுன் கா பேட்’ என்றசிறுகதை, ஐ.சி.எஸ்.சி. பாடத்திட்டத்திலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளது.இந்த சிறுகதை ஆட்சியாளர்களை விமர்சிப்பதாகவும், இது பள்ளி மாணவர்களுக்கு பாடமாக வைக்கத்தக்கது அல்ல என்றும் கூறி, ஐசிஎஸ்சி கவுன்சில்அந்தக் கதையை நீக்கியுள்ளது.இந்தி மொழி இலக்கியத்தில் போற்றப்படும் எழுத்தாளர்களுள் கிருஷன் சந்தர் முக்கியமானவர் ஆவார். பல்வேறுநாவல்கள், சிறுகதை ஆகியவற்றை இந்தி, உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதியுள்ளார். பாலிவுட்டில் திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர், 1960 காலக்கட்டத்தில், ‘ஜாமுன் கா பேட்’ என்ற தலைப்பில் சிறுகதை ஒன்றை எழுதினார். இந்தத்தலைப்பின் பொருள் ‘நாவற் பழ மரம்’என்பதாகும். அரசு அதிகாரம், ஊழல்,அரசு அலுவல் முறையிலுள்ள சிக்கல் கள், ஒரே இடத்தில் குவிக்கப்படும் அதிகாரம் முதலானவற்றைப் பகடி செய்து எழுதப்பட்ட சிறுகதை ஆகும்.“பெருமழைக்குப் பிறகு, அரசுக்குச் சொந்தமான கட்டடம் ஒன்றின் முன் வளர்ந்த நாவற்பழ மரத்தின் கீழ் பிரபல கவிஞர் ஒருவர் சிக்கிக்கொள்கிறார். கவிஞரைக் காப்பாற்ற வேண்டுமானால், மரத்தை வெட்ட வேண்டும் என்றசூழல் உருவாகிறது. மரத்தை வெட்டுவதற்காக, தோட்டக்காரர் பியூனிடம் கேட்கிறார்; பியூன் கிளார்க்கிடம் கேட்கிறார்; கிளார்க் அந்தக் கட்டடத்தின் கண்காணிப்பாளரிடம் கேட்கிறார்.அடுத்ததாக, மரத்தை வெட்டுவதற்கான உத்தரவை வனத்துறையிடம் கேட்க, சிக்கிக் கொண்டிருப்பவர் பிரபலகவிஞர் என்பதால், கலாச்சாரத் துறையைத் தொடர்புகொள்ளுமாறு கூறப்படுகிறது. கலாச்சாரத் துறையானது, நாவற் பழ மரத்தை நட்டவர் அண்டைநாட்டுப் பிரதமர் எனக்கூறி, இந்த விவகாரத்தை வெளியுறவுத் துறையிடம் தள்ளி விடுகிறது.

வெளியுறவுத்துறையோ, அண்டைநாட்டு உறவுகள் பாதிக்கப்படும் என்றுகருதி, பிரச்சனையை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்புகிறது. பிரதமர் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தில் இருப்பதால்,அவர் வந்த பிறகே முடிவு எடுக்கப்படும் என பிரதமர் அலுவலக அதிகாரிகள் முடிவெடுக்கின்றனர். சுற்றுப் பயணம் முடிந்து நாடு திரும்பும் பிரதமர், ஒருமனிதரின் உயிரைக் காப்பாற்ற மரத்தைவெட்டுவது தவறில்லை எனக்கூறி உத்தரவிடுகிறார்.ஆனால், பிரதமர் அலுவலகத்தின் உத்தரவு, அரசுக் கட்டட கண்காணிப்பாளரின் கைகளுக்கு வந்து சேரும்போது, மரத்தின் அடியில் சிக்கிக்கொண்டிருந்த கவிஞர் உயிரிழந்து விடுவார்.”- இதுதான் அந்தச் சிறுகதையாகும்.இதனைத்தான் தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைப்பதற்கு பொருத்தமற்றது என்று மத்திய அரசு கூறியுள்ளது.2015-ஆம் ஆண்டு முதல், ஐ.சி.எஸ்.சிகல்வித் திட்டத்தின் பத்தாம் வகுப்புக் கான இந்திப் பாடத்தில் இந்தச் சிறுகதைஇடம்பெற்று வருகிறது. ஆனால், கடந்த நவம்பர் 4- அன்றுதான், இந்தப்பாடத்தைத் தேர்வுகளிலிருந்து விலக்குவதாகவும், இதிலிருந்து கேள்விகள் கேட்கப்படாது எனவும் ஐ.சி.எஸ்.சி கவுன்சில் சார்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.ஐ.சி.எஸ்.சி கவுன்சிலின் இந்தமுடிவுக்கு இந்தி மொழி எழுத்தாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இன்றைய சூழலில் பிரதமர் அலுவலகமே நாட்டின் முக்கிய முடிவுகளை எடுக்கிறது என்று எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுக்கு ‘ஜாமுன் கா பேட்’ சிறுகதை வலு சேர்ப்பதால், இந்த கதை நீக்கப்பட்டிருக்கலாம் என்றும், இந்த முடிவின் பின்னணியில் மத்திய பாஜக அரசின் தூண்டுதல் இருக்கலாம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதனிடையே, ‘ஜாமுன் கா பேட்’ சிறுகதையை நீக்குவதற்கு உத்தரவு அளித்தது யார்? என்று, ஐ.சி.எஸ்.சி-யின் தலைமை நிர்வாகி கெர்ரி அராத்தூனிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் பதிலளிக்க மறுத்துள்ளார்.

;