tamilnadu

img

ரயில்வேத் தொழிலாளர் சம்மேளனம் - கே.அனந்தன் நம்பியார்

...16.03.2020 அன்று வெளியான கட்டுரையின் தொடர்ச்சி...

நாட்டின் முன்னேற்றத்திலும், அதன் வெற்றியிலும் அக்கறை கொண்டோர் ரயில்வே ஊழியர்களின் நலனைப் பற்றியும் அசிரத்தையாக இருக்க முடியாது. இத்துறையில் துரதிர்ஷ்டவசமாக இன்னும் அதிக அபிவிருத்தி ஏற்படவேண்டியுள்ளது. ரயில்வே ஊழியர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அடிமை போன்றே நடத்தப்பட்டனர். சம்பளம் பெறும் கூலிகளாகவே அவர்கள் கருதப்பட்டனர். நாம் சுதந்திரம் பெற்றபின்பும் ஏறக்குறைய இந்த நிலையே நீடித்து வருவதைக் காண்கிறோம். ரயில்வே தேசியத் தொழில், ஊழியர்கள் அனைவரும் அதில் பங்காளிகள் என்று கூறப்படுகிறது. ஆனால் நடைமுறையில், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இருந்ததைப் போன்று அதிகார வர்க்க ஆதிக்கமே தலைதூக்கி நிற்கிறது. 

ஊழியர்களின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கு அதிகாரிகள் முன் வருவதில்லை. ஊழியர்களின் ஆலோசனைகளைக் கேட்பதற்கு கூட அவர்கள் தயாராகயில்லை. உண்மையான ஜனநாயகத் தன்மைவாய்ந்த ஒரு ஐக்கிய ரயில்வே தொழிற்சங்கம் நிறுவுவதற்காக பலகாலம் தொடர்ந்த முயற்சி நடைபெற்று வருகிறது. இந்த முயற்சி இன்னும் வெற்றிபெறவில்லை. இந்திய ரயில்வே தொழிற்சங்க சரித்திரம் பழைமையானது. சுதந்திரப் போராட்ட காலத்தில் ரயில்வே ஊழியர்கள் வீரஞ்செறிந்த பல போராட்டங்களையும், வேலை நிறுத்தங்களையும் நடத்தினார்கள். சுதந்திரம் பெற்ற பிறகாவது நிலைமையில் தீவிர மாற்றம் ஏற்படுமென்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் ஏமாற்றமே அடைந்தனர்.

தற்போது, ரயில்வே ஊழியர்கள் மத்தியில் இரண்டு சம்மேளனங்கள் உள்ளன. ஒன்று இந்திய ரயில்வே தேசிய சம்மேளனம் ஆகும். மற்றது அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனம். இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசில் இணைக்கப்பட்டுள்ள இந்திய ரயில்வே தேசிய சம்மேளனம் ஏற்கனவே அரசு அங்கீகாரம் பெற்றுள்ளது. பம்பாயில் தற்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராயிருக்கும் வாசவதா என்பவர் அதன் தலைவர். அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனம் தோன்றி 25 ஆண்டுகளாகின்றன. “இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் இருப்பது தொழிலாளர் நலனுக்கு உகந்ததல்ல” என்ற காரணங்காட்டி அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்திற்குக் கொடுக்கப்பட்டிருந்த அங்கீகாரத்தை அரசாங்கத்தார் வாபஸ் வாங்கிக் கொண்டனர். ஆனால், சமீபத்தில் மீண்டும் இந்த சம்மேளனத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு சம்மேளனங்களையும் இணைப்பதற்காக முயற்சி நடைபெற்றது. அதிகாரிகளின் தலையீட்டால் இந்த இணைப்பு முயற்சி வெற்றி பெறாது போய்விட்டது. இந்த இரு சம்மேளனங்களுமே பலம் வாய்ந்ததாக இல்லை. ஒவ்வொன்றிலும் மொத்த ஊழியர்களில் 15 சதவிகிதத்திற்கும் குறைவான ஊழியர்கள் தான் அங்கத்தினராக உள்ளனர். எட்டு பிராந்திய ரயில்வேக்களிலும் இந்த இரு சம்மேளனங்களுக்கும் கிளை யூனியன்கள் உண்டு. இவற்றில் சில அங்கீகாரம்  பெற்றவை. அங்கீகாரம் பெறாதவையும் இதில் உண்டு. பிராந்தியங்களிலுள்ள ரயில்வே யூனியன்களுக்கும், சம்மேளனத்திற்கும் அங்கீகாரம் வழங்குவது பற்றிய ஒரு திட்டவட்டமான கொள்கை அரசாங்கத்தாருக்கும் இல்லை. இதன் விளைவாக சமீப காலத்தில் ரயில்வே ஊழியர்கள் பலருக்கு சங்கத்தைப் பற்றிய சிரத்தை குறைந்து போயிற்று. ரயில்வே தொழிற்சங்கங்களின் அங்கத்தினர்களின் தொகை குறைந்திருப்பதற்கு இதுவும் காரணம் ஆகும். திட்டக் குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு, ஊழியர்கள் உரிய ஊக்கம்செலுத்தாதிருப்பதையும் நாம் காண்கிறோம். இந்த துக்ககரமான நிலைமை நீடிப்பது நல்லதல்ல. மேலும் முன்னேறிச் செல்வதற்கு இந்த நிலைமை ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறது. 

தென் பிராந்திய ரயில்வே லேபர் யூனியன்

தென் பிராந்திய ரயில்வே லேபர் யூனியனைப்பற்றி நாம் தெரிந்து கொள்வது மிகுந்த அவசியமல்லவா? தென் பிராந்திய ரயில்வேயில் நீண்ட நெடுங்கால பாரம்பரியத்தையும், சரித்திரத்தையும் உடையது பலமிக்க (டிஆர்இயு) தென் பிராந்திய ரயில்வே லேபர் யூனியன்தான். இது 1936ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 1938-ல் இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. 1949-ல் இந்த அங்கீகாரம் ரத்துச் செய்யப்பட்டது. ரயில்வே தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை மேம்படச் செய்வதற்காகப் போராட்டங்களையும், வேலை நிறுத்தங்களையும் நடத்திய ‘குற்றம்தான்’ இதற்குக் காரணம் ஆகும். தென்பிராந்திய ரயில்வே யூனியனை அங்கீகரிக்க இன்றும் அரசாங்கம் மறுத்து வருகிறது. சமீபத்தில் தென்பிராந்திய ரயில்வே லேபர் யூனியனின் 18வது வருடாந்திர மகாநாடு நடைபெற்றது. இன்று இந்த யூனியனில் 20ஆயிரம் தொழிலாளர்கள் அங்கத்தினராக உள்ளனர். அரசாங்கத்திலிருந்தும், ரயில்வே நிர்வாகத்திலிருந்தும் வருகின்ற பல இன்னல்களையும், எதிர்ப்பையும் சமாளித்த தென் பிராந்திய லேபர் யூனியன், ரயில்வே ஊழியர்கள் நலனுக்காக வீரமிக்க முறையில் போராடிவருகிறது.

தென் பிராந்திய ரயில்வே லேபர் யூனியனுக்கு அங்கீகாரம் அளிக்க மறுப்பதற்கு ஒரே காரணம் அரசியல் காரணமேயாகும். இதன் மூலம் தென்பிராந்தியத்தில் ரயில் போக்குவரத்து அபிவிருத்தி அடைவதற்கு அரசாங்கம் மறைமுகமாக ஊறுசெய்து வருகிறது. திட்டத்தின் வெற்றிக்காக தென் பிராந்திய ரயில்வே ஊழியர்கள் தாமாகவே ஒத்துழைக்க முன் வருவதை அரசாங்கம் தடுத்து நிறுத்துகிறது. லேபர் யூனியனுக்கு அங்கீகாரம் வழங்க அரசாங்கம் மறுப்பதன் மூலம், இப்பிராந்தியத்திலுள்ள ஒன்றரை லட்சம் தொழிலாளர்களுடைய ஜீவாதார உரிமையான கூட்டுபேர உரிமையை மறுக்கிறது. தென்பிராந்திய ரயில்வேயில் இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ள யூனியன் ரயில்வே நிர்வாகத்துக்கு ஒத்து ஊதும் அதிகாரிகள் கூற்றுக்கு அப்படியே செவிசாய்க்கும் ஒரு யூனியனே ஆகும். இந்த யூனியனுக்குத்தான் நிர்வாகத்துடன் பேரம் பேசும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதன் பொருள் என்ன? பெரும்பாலான ரயில்வே ஊழியர்களுக்கு நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை கூட நடத்துவதற்கு உரிமைஇல்லை என்பது தான் அல்லவா? அது மட்டுமல்ல தென்பிராந்திய லேபர் யூனியனுக்கு ஊழியர்கள் ஆதரவு உண்டா; அது ஒரு பிரதிநிதித்துவ ஸ்தாபனந்தானா என்பதைக் கண்டறிய ரகசிய வாக்கெடுப்பு நடத்தலாம் என்ற யூனியனின் யோசனையையும் நிர்வாகம் நிராகரித்துவிட்டது.

...தொடரும்
 

;