tamilnadu

img

அஞ்சல் துறை தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் தமிழிலும் தேவை

புதுதில்லி:
அஞ்சல் துறைத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் தமிழிலும் அளிக்கப்பட வேண்டும் என்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஏ.நவநீதிகிருஷ்ணன், திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் வலியுறுத்தினர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் திங்கள்கிழமை அவசரப்பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் பூஜ்யம் நேரத்தில் அதிமுக உறுப்பினர் ஏ. நவநீதகிருஷ்ணன் பேசியதாவது:
மத்திய அரசு, நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடத்திய அஞ்சல் துறைக்கான தேர்வுகளை ரத்து செய்திட வேண்டும். இதற்கான காரணங்கள் மிகவும் எளிமையானவை மற்றும் மிகவும் கட்டாயமானதும் கூட. அரசாங்கம் இந்தத் தேர்வினை ரத்துசெய்யத் தவறுமேயானால், பின், இத் தேர்வு எழுதிய இளைஞர்களின் வாழ்க்கைக்கான உரிமையை பறிக்கப்படும். மத்திய அரசாங்கம் கிராமப்புற மாணவர்கள் பலர் தற்கொலை செய்துகொள்வதற்கு இது தூண்டியதாக அமைந்திடும். மத்திய அரசின் அஞ்சல் துறை இத் தேர்வினை கிராமப்புற ங்களில் பணிசெய்வதற்கான  அஞ்சலர்கள் (Postman), மெயில் கார்டு (Mail guard) மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்காக நடத்தியது. இப்போது வினாத்தாள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கின்றது. வினாத்தாள் தமிழில் இல்லை.  

டி.கே.ரங்கராஜன் முயற்சி மறுதலிப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு, இதனைக் கணக்கில் எடுத்துக்கொண்டு சற்றே நிவாரணம் அளித்திருப்பது உண்மைதான். இதற்கு முன்பும் ஒருதடவை, நம் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், மதுரை உயர்நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றார். ஆனால் உச்சநீதிமன்றம் அதனை மறுதலித்துவிட்டது.வேலைவாய்ப்பு உரிமைக்காக நீதிமன்றத்தைச் சார்ந்திருக்க எங்களால் முடியாது. எனவே, மத்திய அரசாங்கம் உடனடியாக இதில் தலையிட்டு, அஞ்சல் துறை நடத்திய தேர்வினை உடனடியாக ரத்து செய்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். தமிழில் வினாத்தாள் தயார் செய்து மீண்டும் புதிதாகத் தேர்வினை நடத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு ஏ.நவநீதகிருஷ்ணன் பேசினார்.

திருச்சி சிவா
ஏ.நவநீதகிருஷ்ணன் கோரிக்கையுடன் தன்னை இணைத்துக் கொண்டு திமுக உறுப்பினர் திருச்சி சிவா பேசியதாவது:ஏற்கனவே அஞ்சல் துறை இத் தேர்வுகளை இந்தி, ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநில மொழிகளில் நடத்தி வந்தது. இப்போது திடீரென்று இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் நடத்தியுள்ளது. இது தமிழ்நாட்டு இளைஞர் மனதில் ஒருவிதமான கிளர்ச்சித் தீப்பொறியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே, எங்கள் மாணவர்களுக்கு மத்திய அரசின் துறைகளிலும், குறிப்பாக ரயில்வேக்களிலும் இதர துறைகளிலும்,  வேலைகள் கிடைப்பதில்லை என்கிற ஆதங்கம் இருந்து வருகிறது. எனவே இதை முற்றிலுமாக ஏற்க முடியாது. மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியத் தேவையாகும். இது கிராமப்புற மாணவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவினை ஏற்படுத்திடும்.  

எனவே, மத்திய அரசாங்கம், அஞ்சல்துறையில் வெளியிட்டுள்ள ஆணையை உடனடியாக ரத்து செய்திட வேண்டும் என்றும் முன்பிருந்தது போலவே மாநில மொழிகளிலும் தேர்வினை நடத்திட வேண்டும் என்றும்  வலியுறுத்துகிறேன்.இவ்வாறு திருச்சி சிவா கூறினார்.ஏ.நவநீதகிருஷ்ணன், திருச்சி சிவாஎழுப்பிய பிரச்சனையுடன் எஸ்.முத்துக்கருப்பன் (அதிமுக), து.ராஜா (சிபிஐ), கே.ஆர்.அர்ஜுணன், ஏ.கே.செல்வராஜ், விஜிலாசத்யானந்த் ஆகிய அதிமுக உறுப்பினர்களும் மற்றும் பல மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களை இணைத்துக் கொண்டார்கள். (ந.நி.)

;