tamilnadu

img

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சிஏஏ எதிர்ப்புத் தீர்மானம் ஒத்திவைப்பு.... அதிகாரிகள் மூலம் மன்றாடித் தப்பியது மோடி அரசு

புதுதில்லி:
இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, 28 நாடுகளை பிரதிநிதித்துவம் செய்யும் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டுத் தீர்மானம் ஒன்றை, சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்தனர்.“இந்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டத்திற்கும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் ஐரோப் பிய யூனியன் நாடாளுமன்றம் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறது; சிஏஏ சட்டம் இயற்கையாகவே பாரபட்சமானது மற்றும் ஆபத்தான முறையில் மக்களை பிளவுபடுத்தக் கூடியது; மத சகிப்பின்மைமற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாட்டை தூண்டுகிறது; இதுதொடர்பாக இந்தியாவின் பல்வேறு பிரிவுகளுடன் அமைதியான உரையாடலில் ஈடுபடுவதற்கும், சர்வதேசக் கடமைகளை மீறும்பாரபட்சமான திருத்தங்களை ரத்து செய்வதற்கும் இந்திய அரசுக்கு அழைப்பு விடுக்கிறது” என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

560-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள்,தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திட்டு இருந்ததால், இந்திய நேரப்படி புதனன்று நள்ளிரவு இந்த தீர்மானத்தின் மீது விவாதமும், அதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பும் நடைபெறும் என்று ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் அறிவித்திருந்தது.இது சர்வதேச அளவில் இந்தியாவுக்கு எதிர்பாராத திடீர் நெருக்கடியாக மாறியது. அதிர்ச்சியடைந்த இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஐரோப் பிய யூனியனின் நாடாளுமன்றத் தலைவர் டேவிட் பசாலிக்கு, உடனடியாக கடிதம் ஒன்றை எழுதினார். “ஒரு நாடாளுமன்றம் இன்னொரு நாடாளுமன்றத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்குவது பொருத்தமற்றது; இது தவறான முன்னுதாரணமாகி விடும்” என்று ஓம் பிர்லா அந்த கடிதத்தில் வாதிட்டிருந்தார்.

மேலும், ஐரோப்பிய யூனியனில் ஒன்றான பெல்ஜியத்துக்கான இந்தியத் தூதர் கைத்ரி இசார் குமார் தலைமையிலான இந்தியக் குழுவினர், இந்தியாவுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்திருந்த ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றக் குழுவினருடன் தீவிரமான பேச்சுவார்த்தையிலும் இறங்கினர்.“வரும் மார்ச் 13-ஆம் தேதி இந்திய - ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாடு நடக்க இருக்கிறது. அதில் பிரதமர் மோடிகலந்துகொள்ள உள்ளார். இந்த நிலையில் இப்படிப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால் இரு தரப்புக்குமான அரசியல் உறவுகள் பாதிக்கப்படும். எனவே, குறைந்தபட்சம் இந்த உச்சி மாநாடு நடக்கும் வரையிலாவது இந்தத் தீர்மானங்களை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாமல் தவிர்க்க வேண்டும்” என்று பலவாறாக கெஞ்சிக்கூத்தாடினர்.

குறிப்பாக, ஐரோப்பிய மக்கள் கட்சியைச் சேர்ந்த மைக்கேல் காலெர்மூலமாக, இந்தியாவும் இந்த தீர்மானத்தில் பங்கேற்கும் விதமாக வாக்கெடுப்பை தள்ளி வைக்க வேண்டும் என்றதிருத்தத்தை கொண்டுவரச் செய்தனர்.அவர், “குடியுரிமைச் சட்ட விவகாரம் இன்னும் முடிவடையவில்லை. இந்திய உச்ச நீதிமன்றம் நிறைய கேள்விகளை அரசுக்கு எழுப்பியுள்ளது. இதற்கு அரசுத் தரப்பு பதில்கள் என்னவென்று தெரியும் வரை நாம் காத்திருக்க வேண்டும். மேலும் இந்திய அமைச்சர்களிடம் குடியுரிமைச் சட்டம் குறித்து பிப்ரவரியில்நமக்கு விவாதிக்கும் வாய்ப்பும் உள்ளது” என்று கூறியதுடன், “தீர்மானத்தின்மீதான வாக்கெடுப்பை தள்ளி வைக்கவேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.இதையடுத்து, ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றமானது, இந்தியாவுக்கு எதிரான தீர்மானத்தை சுமார் 2 மாத காலம் ஒத்தி வைத்துள்ளது. மார்ச் 30 முதல் ஏப்ரல் 2 வரையிலான கூட்டத்தொடரில் சிஏஏ எதிர்ப்பு தீர்மானங்களைவிவாதத்திற்கு எடுத்துக் கொள்வதென் றும் முடிவு செய்துள்ளது.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் இந்த முடிவில், மோடி அரசு தற்காலிகமாக நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது.

;