tamilnadu

img

குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்

இந்திய அரசமைப்புச்சட்டத்தின் பாதுகாப்பாளர் என்ற முறையில், நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்கள் மீறப்பட்டிருப்பதிலிருந்து அதனைப் பாதுகாத்திட முன்வர வேண்டும் என்றும், உடனடியாகத் தாங்கள் தலையிட்டு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை விலக்கிக் கொள்ளுமாறு அரசாங்கத்திற்கு அறிவுரை அளித்திட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள், குடியரசுத் தலைவரைக் கோரி இது தொடர்பாக கடிதமும் கொடுத்திருக்கிறார்கள். செவ்வாய் அன்று சோனியா காந்தி, சீத்தாராம் யெச்சூரி, து. ராஜா, டி.ஆர். பாலு உட்பட 19 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் குடியரசுத் தலைவரைச் சந்தித்து இவ்வாறு கோரியுள்ளனர். அப்போது அவர்கள் குடியரசுத்தலைவரிடம் அளித்திட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது:

2019 டிசம்பர் 12 அன்று குடியுரிமைத்திருத்தச் சட்டமுன்வடிவு, மிகவும் அவசரகதியில் சட்டமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மக்களவையில், அரசாங்கம் தனக்கிருக்கும் பெரும்பான்மை என்னும் கொடுங்கோன்மை மூலமாக இந்தச் சட்டமுன்வடிவை நிறைவேற்றி, அதன்பின்னர் மாநிலங்களவை யிலும் கடும் எதிர்ப்பையும் மீறி, நிறைவேற்றி யிருக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் மக்களை பிளவுபடுத்துகிறது. இது நிறைவேற்றப்பட்டிருப்பது, இந்தியாவில் ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கான நல்ல அறிகுறிகிடையாது. இது தொடர்பாக 2016க்கும் 2019க்கும் இடையே வல்லுநர்களிடம் கலந்தாலோசனை செய்த போது அவர்கள் அளித்திட்ட ஆலோசனைகள் எதையும் இந்த அரசு கேட்கத்தயாரில்லை என்பதே, நம் குடியரசின் உள்ளீடான குணத்தைச் சுக்குநூறாக்க் கிழித்தெறிய வேண்டும் என்கிற தன்னுடைய பிளவுவாத நிகழ்ச்சிநிரலை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கான அதன் நோக்கத்திற்குச் சான்றாக விளங்குகிறது.

இதற்கு எதிராக நாடு முழுதும் மிகவும் விரிவடைந்தவகையில் கிளர்ச்சிகள் நடந்து கொண்டிருப்பதே, சாமானிய மக்களின் மனதில் இதற்கு எதிராக எந்த அளவிற்கு அச்சஉணர்வு மேலோங்கியிருக்கிறது என்பதற்கு சாட்சிய மாகும். குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களில், அதிலும் குறிப்பாக அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா, மேற்கு வங்கம், தமிழ் நாடு, கேரளம், மகாராஷ்டிரா, குஜராத்தின் சில பகுதிகள், உத்தரப்பிரதேசம் மற்றும் தில்லி ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சிகள் நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகின்றன.  இச்சட்டத்தின் விளைவுகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை  வெளிப்படுத்தியுள்ளன. இந்த அரசாங்கத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிக் கொள்கையும், அதன் அப்பட்டமான பிளவுவாத நிகழ்ச்சிநிரலும் நாடுமுழுதும் இருந்துவந்த அமைதி மற்றும் நல்லிணக்க சூழலுக்கு சங்கடத்தை ஏற்படுத்திஇருக்கிறது.

இத்தகைய கிளர்ச்சிகளின்போது நாட்டின்பல பகுதிகளில் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட இளை ஞர்கள், இளைஞிகளில் பலர் உயிரிழந்துள்ளனர் என்று நம்பகமான செய்திகள் வந்துள்ளன. பல நூறு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அமைதியானமுறையில் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை வெறியாட்டங்கள் மேற் கொள்ளப்பட்டிருப்பதாக ஊடகங்களில் பல கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன. இவை அனைத்தும் பொது வெளியில் காணக்கிடைக்கின்றன. உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம், திரிபுரா மாநிலங்களில் செய்திகளை மறைத்திட அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக வதந்திகள் மிக வேகமாகப் பரவுவதற்கும் அதன்மூலம் நிலைமைகள் மேலும் மோசமாவதற்கும் இட்டுச்சென்றுள்ளன.புதுதில்லியில், 2019 டிசம்பர் 15 அன்று, காவல்துறையினர் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தின் வளாகத்திற்குள் உரிய அனுமதியின்றி அத்துமீறி நுழைந்து, எவ்விதமான கிளர்ச்சிகளிலும் ஈடுபடாத அப்பாவி மாணவர்களைக்கூட காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி இருக்கிறார்கள். பல்கலைக் கழகத்தின் வளாகத்திலிருந்த நூலகம் மற்றும் விடுதிகள் போன்றவற்றிற்கும் துணைவேந்தரின் அனுமதியின்றி காவல்துறையினர் சென்றிருப்பது மிகவும்கவலைதரத்தக்க விஷயமாகும். அதனைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் வெளி வந்துள்ளது போன்று நடந்துள்ள காட்டு மிராண்டித்தனமான நடவடிக்கைகளும், காவல்துறையினர் இந்த நிலைமையை எந்த அளவிற்கு கூருணர்வின்றி, தானடித்த மூப்பாக கையாண்டிருக்கிறார்கள் என்பதற்கு மேலும் சாட்சியமாகும்.

சட்டப்படியானமுறையில் கருத்துவேறுபாடு கொள்வது என்பது ஜனநாயகத்தின் இதயமாகும். அதே போன்றே அமைதிவழியில் கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடும் சமயத்தில், வன்முறைக் கிளர்ச்சிகளில் ஒருசிலர் எங்காவது ஈடுபட்டால், அதனைச் சாக்காக வைத்து, அவற்றிற்கு ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தையேப் பொறுப்பாக்கி, குறிவைத்துத் தாக்குவது கூடாது. அமைதிக்கு அறைகூவல் விடுவதற்குப் பதிலாக நமது பிரதமர் இது தொடர்பாக அளித்திருக்கும் கருத்துக்கள், அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்புடைய ஒன்று அல்ல. “கிளர்ச்சி செய்பவர்களை அவர்கள் அணிந்திருக்கும் உடைகளிலிருந்து அடையாளம் தெரிந்து கொள்ள முடியும்,” என்று அவர் கூறியிருக்கிறார். அரசியலில் இதை எந்தவிதத்திலும் தரநிர்ணயம் செய்ய முடியவில்லை. நாட்டில் உயர் பொறுப்புகளில் உள்ள நபர்கள், தங்கள் குறுகிய பிளவுவாத நலன்களுக்குச் சேவகம் செய்யக்கூடிய விதத்தில் அறிக்கைகளை வெளியிடுவார்களானால், அவை சுதந்திரத்திற்குப் பின்மிகவும் கவனத்துடன் உருவாக்கப்பட்ட நம் அரசமைப்புச்சட்டத்தின் கம்பீரமான கட்டமைப்பையே தகர்த்துவிடும்.

ந்துள்ள வன்முறைகள் அவை எந்த வடிவத்திலிருந்தாலும் அதில் ஈடுபட்ட கயவர்களைக் கண்டறிந்து தண்டிக்கக்கூடிய விதத்தில் நீதி விசாரணைக்கு உத்தரவிட இந்த அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம். குடிமக்கள் அரசுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பினை அமைதியான கிளர்ச்சி நடவடிக்கைகள் மூலமாகத்தான் வெளிப்படுத்த முடியும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். இந்த விதத்தில் நம் அரசமைப்புச்சட்டம் அளித்துள்ள சட்டப்படியான கிளர்ச்சி செய்திடும் உரிமை அடக்கப்படுமானால், ஜனநாயகம் அழிந்துவிடும்.இந்திய அரசமைப்புச்சட்டத்தின் பாதுகாவலர் என்ற முறையில், நம் அரசமைப்புச் சட்டத்தின்அடிப்படை அம்சங்கள் மீறப்பட்டிருப்பதிலிருந்து அதனைப் பாதுகாத்திட நீங்கள் முன்வரவேண்டும். இப்பிரச்சனைகளில் உடனடியாக நீங்கள் தலையிட்டு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை விலக்கிக் கொள்ளுமாறும் அரசாங்கத்திற்கு அறிவுரை அளித்திட வேண்டும். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவரைக் கேட்டுக்கொண்டுள்ளனர். (ந.நி.)

;