tamilnadu

img

பசியாலேயே அதிகமானோர் இறக்கப் போகிறார்கள்...

புதுதில்லி:
இந்தியாவில் கொரோனாவைக் காட்டிலும் பசியாலேயே அதிகம் பேர் இறக்கப் போகிறார்கள் என்று ஐபிஇ குளோபல் மேலாண்மை இயக்குநர் அஸ்வஜித் சிங் கூறியுள்ளார்.ஒருபுறம் கொரோனா வைரஸ் தொற்றின் பிடியிலும், மறுபுறம் தொழில்கள்- வர்த்தகங்கள் முடங்கி, வேலைவாய்ப்புகள் பறிபோனதால் வறுமையின் பிடியிலும் சிக்கி உலக மக்கள் திண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக, இந்தியாவில் கொரோனா தாக்கம், தீராத துயரமாக மாறி வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் கடந்த2 மாதமாக தங்களின் சொந்த ஊருக்குநடந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள்அன்றாட உணவுக்குக் கூட வழி இல்லாமல், செல்லும் வழியிலே இறப்பது, ரயிலில் செல்லும்போது இறப்பது என்று செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடியே 20 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்து இருப்பதாக ‘புளூம்பெர்க்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் புள்ளி விவரங்கள் அடிப்படையில் இந்த தகவலை வெளியிட்டுள்ள புளூம்பெர்க், இந்த 12 கோடி பேரில், தினக் கூலித் தொழிலாளர்கள், சிறு,குறு தொழிலில் ஈடுபட்டு இருந்த வர்கள், சாலைகளில் சிறு தொழில் நடத்தி யவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், ரிக்சா ஓட்டுநர்கள் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளது.இந்தியாவில் 80 சதவிகிதம் பேர் தங்களது வருமானத்தை இழந்துவிட்ட னர்; இனியும் வருமானம் இல்லாவிட்டால் இவர்கள் வாழ முடியாது என்று பொருளாதாரக் கண்காணிப்பு மையம் எச்சரித்தே பல வாரங்கள் ஆகிவிட்டன.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மட்டுமின்றி, வருமானம் இல்லாத ஏழை மக்களும், உணவின்றி கெட்டுப் போனபழங்கள், காய்கறிகள், இறந்த எலிகள், இலை தழைகளை சாப்பிடும் கட்டத்திற்கு தற்போது வந்துள்ளனர்.இந்நிலையில்தான், இந்தியாவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் உயிரிழப்பைக் காட்டிலும், பசியால் அதிகமானோர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக ஐபிஇ குளோபல் (IPE Global Limited) பொருளாதார ஆலோசனை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், ஆடிட்டருமான அஸ்வஜித் சிங் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:

‘’கொரோனா காரணமாக, இந்தாண்டு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்று நான் கருதவில்லை. வைரஸால் அதிகம் பேர் இறப்பதைவிட பசிக்குத்தான் அதிகம் இறப்பார்கள்.குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் உள்ள நாடுகளில் ஒரு நபரின் குறைந்தபட்ச ஒரு நாள் வருமானம் ரூ. 247 என்று உலக வங்கி நிர்ணயித்துள்ளது. இவர்கள் எல்லாம் வறுமை கோட்டில் இருப்பவர்கள். இதற்கும் கீழே வருமானம் பெறும் வகையில் இந்தியாவில் 104 மில்லியன் பேர் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி கணித்துள்ளது.அதாவது கொரோனாவுக்கு முன்பு 60 சதவிகிதம் பேர் அல்லது 812 மில்லியன் பேர் வறுமைக் கோட்டில் இருந்தனர். இது தற்போது 68 சதவிகிதம் அல்லது 920 மில்லியன் பேர் என்று அதிகரிக்கும். அதாவது வறுமைக் கோட்டில் இருந்து கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைக்கு மீண்டும் இந்தியா திரும்புகிறது என்ற துர்பாக்கிய நிலை ஏற்பட உள்ளது.மிகவும் ஏழைகள் வாழும் நாடு என்ற கட்டத்தில் இருந்து இந்தியா மீண்டு வரும் நிலையில், மீண்டும் பேரிடர் போல் கொரோனா தாக்கம் ஏற்பட்டு வேலை வாய்ப்பை ஏழைகள் இழந்துள்ளனர்’’.இவ்வாறு அஸ்வஜித் சிங் கூறியுள்ளார்.

;