tamilnadu

பொதுத்துறை பங்கு விற்பனையில் வாஜ்பாயை மிஞ்சிய மோடி

பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்கும் நடவடிக்கை உலகமயத்தின் ஒரு பகுதியாக 1990ல் தொடங்கப்பட்டது. 2019-20 வரை மொத்தம் ரூ.4,32,438 கோடிக்கு பங்கு விற்பனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பங்கு விற்பனை துறையின் இணையதளத்தில் இந்த கணக்கு உள்ளது. இதில் 1998-2004ல் வாஜ்பாய் ஆட்சியில் ரூ.33655 கோடி அதாவது 7.78 விழுக்காடு விற்கப்பட்டது. அவர்கள் தான் மைனாரிட்டி பங்கு விற்பனை, ஒட்டுமொத்த பங்கு விற்பனை (ளவசயவநபiஉ ளயடந) என்று கொண்டு வந்தார்கள். திட்டமிட்டபடி 25 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை திட்டமிட்டபடி ஒட்டுமொத்தமாக விற்றுவிட்டார்கள். இதில் மோடி வாஜ்பாயையும் மிஞ்சி விட்டார். மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சியில் மைனாரிட்டி பங்குகளும் ஒட்டுமொத்தமாக விற்பனையுமாக சேர்த்து விற்ற பங்குகளின் மதிப்பு ரூ.2,79,648 கோடியாகும். இது 28 ஆண்டுகளின் மொத்த விற்பனையில் 65 விழுக்காடாகும். இதில் 1996-98ல் ஐக்கிய முன்னணி ஆட்சிக்காலத்தில் 0.30 விழுக்காடும் முதலாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2004-2009 காலத்தில் 1.97 விழுக்காடும்தான் குறைவான பங்கு விற்பனை நடைபெற்ற காலமாகும். காரணம் முதலாவது ஐக்கிய முன்னணி ஆட்சி இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவோடு இருந்தது. அந்த ஆட்சியில் அதற்கு முந்தைய வாஜ்பாய் அரசு திட்டமிட்ட 13 பொதுத்துறை நிறுவனங்களின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பங்கு விற்பனை தடுக்கப்பட்டது. ஆனால் இப்போது மோடி அரசு தொடர்ந்து பொதுத்துறை பங்குகளை சூறையாடி வருகிறது. ஒட்டுமொத்தமாக தனியாருக்கு விற்றுக்கொண்டிருக்கிறது.


பாஜகவின் தொழிற்சங்கமான பிஎம்எஸ் தவிர மற்ற அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் சேர்ந்து 2015 செப்டம்பர் 2ஆம் தேதி அகில இந்திய வேலை நிறுத்தத்தை நடத்தின. அதில் நாடு முழுவதும் சுமார் 15 கோடி தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். அந்த போராட்டத்தின் 12 கோரிக்கைகளில் ஒன்று பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்யக்கூடாது என்பதுதான். ஆனால் மோடி அரசு இந்த போராட்டத்திற்கும் மசியவில்லை. 2016 ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம் 2 ஆம்தேதி 18 கோடி தொழிலாளர்கள் இதே கோரிக்கைக்காக வேலை நிறுத்தம் செய்தனர். அதையும் கண்டுகொள்ளாமல் மோடி அரசு தீவிரமாக பங்கு விற்பனையை மேற்கொண்டது.2017ஆம் ஆண்டு நவம்பர் 9,10,11தேதிகளில் தில்லியில் தொழிற்சங்கங்கள் மகா தர்ணா நடத்தின. இதன் பிறகாவது மோடி அரசு பங்கு விற்பனையை நிறுத்திக்கொண்டதா என்றால் இல்லை. மேலும் அதிகமாக விற்றது. 2018 செப்டம்பர் 5ஆம் தேதி சிஐடியு, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் கூட்டு தர்ணா நடைபெற்றது.மோடி அரசு பின்வாங்க வில்லை. 2019 ஜனவரி 8,9 தேதிகளில் 20 கோடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இருந்தும் மோடி அரசு வாஜ்பாயை மிஞ்சி 65 சதவீதம் பங்குகளை விற்றுள்ளது. பொதுத்துறைகள் சமூக நீதியுடன் கூடிய வேலையை வழங்கும் காமதேனு, பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டின் கோவில்கள் என்று முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு கூறுவார். அந்தகோவில்களை தான் மோடி அரசுவிற்றுக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமா? 


மார்க்சிஸ்ட் கட்சி வாக்குறுதி

பொதுத்துறை பங்கு விற்பனையை தடுத்துநிறுத்துவோம், பொதுத்துறையை பலப்படுத்துவோம், விரிவுபடுத்துவோம், புதிய முதலீடும் தொழில்நுட்பமும் சுயாட்சியும் அளித்து திறமையானதாக்குவோம்.ரயில்வே, பாதுகாப்பு, துறைமுகம், விமான நிலையம், வங்கி, காப்பீடு, நிலக்கரி, நீராதாரங்களை தனியார் மயமாக்கவும் அந்நியருக்கு திறந்துவிடுவதையும் மாற்றுவோம். இவற்றில் பொதுத்துறை முதலீடுகளை அதிகரிப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.எனவே பொதுத்துறை பங்குகளை பாதுகாக்க நாடாளுமன்றத்தில் இடதுசாரிக்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது அவசியம். 


-ஆர்.இளங்கோவன்

;