tamilnadu

img

20% ஐஆர்சிடிசி பங்குகளை தனியாருக்கு விற்கும் மோடி அரசு... வங்கிகள் மூலம் விற்பனைக்கான நடவடிக்கைகளைத் துவங்கியது

புதுதில்லி:
பொதுத்துறை நிறுவனமான ஐஆர்சிடிசி-யின் (IRCTC) 15 முதல் 20 சதவிகித பங்குகளை ‘ஆபர் பார் சேல்’ என்ற சலுகையுடன் தனியாருக்கு விற்க மத்திய பாஜகஅரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை பிரிவு வர்த்தக வங்கிகளின் விண்ணப்பங்களை செப்டம்பர் 10 முதல் பெறத் துவங்கியுள்ளது.ஐஆர்சிடிசி நிறுவனத்தின் எவ்வளவு பங்குகள் விற்பனை செய்யப்படும்? எனஇதுவரை வெளிப்படையாக அறிவிக்கப் படாத நிலையில், விற்பனை பொறுப்புகளை ஏற்று நடத்தும் வங்கியைத் தேர்வு செய்த பின்பு முழு விபரத்தையும் அரசு வெளியிடும் எனத் தெரிகிறது.

பட்ஜெட் பற்றாக்குறையைச் சமாளிக்கரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கோடி தேவை என்று மதிப்பிட்ட மத்திய பாஜக அரசு, அதில், பொதுத்துறை நிறுவனங்களில் மத்திய அரசுக்கு இருக்கும் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ. 1 லட்சத்து20 ஆயிரம் கோடியையும், கடன் பத்திரங்கள் போன்றவை வாயிலாக 90 ஆயிரம் கோடி ரூபாயையும் திரட்டுவதென முடிவு செய்தது. இதனடிப்படையில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் போன்ற பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், சுரங்கங்கள், எல்ஐசி, ரயில்வே, விமான நிலையங்கள் போன்றவற்றை தனியாருக்கு விற்கும் பணிகளில் கடந்த ஓராண்டாக தீவிரமாக இறங்கியுள்ளது.அதனொரு பகுதியாக ஐஆர்சிடிசி நிறுவனப் பங்குகளையும் தனியாருக்கு விற்கமுடிவு செய்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து சேவையான ரயில்வே துறையின்- முதன்மையான மற்றும் ஒரே கேட்டரிங், ஆன்லைன் டிக்கெட் விற்பனை மற்றும் குடிநீர் விற்பனை செய்யும் மிகப்பெரிய நிறுவனம்தான் ‘இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம்’ (Indian Railway Catering and Tourism Corporation- IRCTC) ஆகும். இந்நிறுவனத்தின் சுமார் 87.40 சதவிகிதப் பங்குகளை மத்திய அரசு வைத்திருக்கும் நிலையில், அவற்றைத்தான் தற் போது தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான ‘செபி’ விதிமுறைகளின்படி 75 சதவிகிதப் பங்குகளுக்கு அதிகமாக ஒரே தரப்பு வைத்திருக்கக் கூடாது என்ற விதியை மத்திய அரசு ஒரு காரணமாக கூறியுள்ளது.

மேலும் இந்தப் பங்கு விற்பனையை ஒன்றுக்கும் அதிகமான கட்டங்களாக நடத்தவும் மத்திய அரசு விற்பனை வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஐஆர்சிடிசி நிறுவனம் முதன்முதலாக இந்திய பங்குச் சந்தையில் 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பட்டியலிடப்பட்டது. அப்போது, ஐஆர்சிடிசி நிறுவனத்தின் பங்குகளுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.ஐஆர்சிடிசி நிறுவனம் ஐபிஓ மூலம் பங்குச்சந்தையில் இறங்கும் போது ஒருபங்கு விலை 645 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த 11 மாத காலத்தில் அதிகப்படியாக ஒரு பங்கின் விலை 1994.00 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

;