tamilnadu

img

பொருளாதார வீழ்ச்சி பாடம் கற்குமா மோடி அரசு? -கே.பாலகிருஷ்ணன்

“அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் இந்தியப் பொருளாதாரத்தை ஐந்து லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாக மாற்றுவதற்கான பயணத்தை துவங்கப்போவதாக “பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மேலும் தனது சுதந்திர தின உரையில் நாட்டின் விரைவான வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ள தொழில் அதிபர்களை பாராட்ட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார். 

பாதாளம் நோக்கி பயணம்...

ஆனால், மத்திய அரசின் நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜீவ்குமார் இதற்கு நேர் எதிரான கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அதாவது, கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார பின்னடைவை நாடு சந்தித்துக் கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். இவரது கூற்றை உறுதி செய்யும் வகையில் இந்திய பொருளாதாரம் தலைகுப்புற கவிழ்ந்து பாதாளத்தை நோக்கி வேகமாக பயணித்துக் கொண்டுள்ளது என்பதையே புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.  கடந்த 2018 – 2019ம் ஆண்டு வளர்ச்சி விகிதம் 6.8 சதவிகிதம் என மத்திய ஆட்சியாளர்கள் மார்தட்டி கொண்டனர். ஆனால் பிரதமரின் தலைமைப் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியம் இந்த புள்ளி விபரம் மிகைப்படுத்தப்பட்டது எனவும், உண்மையான வளர்ச்சி விகிதம் 4.3 சதவிகிதத்திற்கு மேல் இல்லை என குறிப்பிட்டுள்ளார். அதாவது, கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு பொருளாதார வளர்ச்சி பின்தங்கியுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். 

தொழில்வளர்ச்சி, மோட்டார் வாகன உற்பத்தி, நிலக்கரி, இன்ஜினியரிங், நூற்பாலை மற்றும் துணி ஆலைகள், ஆயத்த ஆடை உற்பத்தி, நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி அனைத்திலும் கடந்த ஐந்தாண்டு மோடி ஆட்சியில் அடித்துநொறுக்கப்பட்டுள்ளன. விவசாயம், முறைசாரா தொழில், சிறு வணிகம், சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மீளமுடியாத நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் விவசாயம் முடங்கிக் கிடக்கிறது. விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் இருக்கும் வாழ்வை இழந்துகொண்டுள்ளார்கள். 

வரலாறு காணா சரிவு

இந்திய தொழில்துறைக்கான முதலீடுகள் தொடர்ந்து சரிந்து வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இது 34 சதவிகிதத்திலிருந்து 27 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகமும் வரலாறு காணாத சரிவைச் சந்தித்து கொண்டுள்ளது எனவும், குறிப்பாக, 2012ல் 43.4 சதவிகிதமாக இருந்த ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் 2016ல் 27.57 சதவிகிதமாக குறைந்துள்ளது எனவும் பேராசிரியர் ஜோதி சிவஞானம் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பெரும்பகுதியினரான கிராமப்புற மக்களது வாழ்வதாரம் சுருங்கி அவர்கள் தற்கொலைக்கு தள்ளப்பட்டு, கிராமப்புறங்களை விட்டு வெளியேறி நகர்ப்புறங்களுக்கு அத்தக்கூலிகளாக மாறிவருகின்றனர். வேலையில்லாத இளைஞர்கள், உதிரி தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோரது வாங்கும் சக்தி வேகமாக குறைந்துள்ளதால், உற்பத்தி பொருட்கள் சந்தையில் தேங்கி கிடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. வீட்டு உபயோக சாமான்கள், துணிகள் மற்றும் அதியாவசியப் பொருட்கள் தேங்கி தொழில் முடக்கம் தீவிரமடைந்துள்ளது. 

கடன்வாங்கி சுவாசம்

பொருளாதார பின்னடைவின் காரணமாக அரசின் வருவாய் குறைந்து பற்றாக்குறை பலமடங்கு அதிகரித்துள்ளது. 2018 – 19ம் ஆண்டில் அரசின் மொத்த செலவு 24.6 லட்சம் கோடி ரூபாய். ஆனால் அரசின் வருமானம் ரூ. 17.7 லட்சம் கோடி மட்டுமே. இதுபோதாமல் சுமார் ரூ. 12 லட்சம் கோடி கடன் வாங்கி தான் மோடி அரசு சுவாசித்துக் கொண்டுள்ளது. இதுவரை வாங்கியுள்ள கடன் சுமை இந்திய மக்களின் முதுகெலும்பை முறிப்பதாக உள்ளது. இக்கடன் தொகைக்கு மட்டும் ஆண்டுக்கு வட்டியாக ரூ. 6 லட்சம் கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது.  மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, பணமதிப்பு நீக்க நடவடிக்கை, புதிய வரி விதிப்புகள் நாட்டின் தொழிற்துறையை நிர்மூலமாக்கிவிட்டன. இதன் காரணமாக பங்குசந்தையில் ரூ. 12 லட்சம் கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது. மிகுந்த ஆரவாரத்தோடு வரவேற்கப்பட்ட அந்நிய மூலதனம் 2 லட்சம் மில்லியன் அமெரிக்க டாலர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டது. இது தான் மோடி அரசின் மேக் இன் இந்தியாவின் சாதனையாகும். 

வெடித்துக் கிளம்பிய  மோட்டார் வாகனத்துறை நெருக்கடி

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார தொழில்நெருக்கடியின் கூர்முனையாக மோட்டார் வாகனத்துறை நெருக்கடி வெடித்து வெளிக்கிளம்பியுள்ளது. இந்திய ஆட்டோ மொபைல் துறையானது இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பான துறை என்பது மட்டுமல்ல; உலகிலேயே நான்காவது பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தி மற்றும் விற்பனைத் துறையும் ஆகும். இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆட்டோமொபைல் துறை மட்டும் 7.5 சதவீதம் அளவிற்கு பங்களிப்பு செய்கிறது. நாடு முழுவதும் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 4 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துக் கொண்டிருக்கிறது. நேரடி ஆட்டோமொபைல் துறை மட்டுமின்றி இத்துறைக்கான துணை பொருட்களை உற்பத்தி செய்து கொடுக்கும் உதிரி பாகங்கள் துறை மட்டும் இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவீதம் அளவிற்கு பங்களிப்பு செய்கிறது. இத்தகைய பிரம்மாண்டமான துறைதான் கடந்த ஒரு மாதத்தில் வரலாறு காணாத சரிவை எட்டியுள்ளது. 

பன்னாட்டு கார்ப்பரேட் வாகன உற்பத்தி நிறுவனங்களான போர்டு, ஹூண்டாய், மாருதி சுசுகி ஆகியவற்றில் துவங்கி உள்நாட்டு நிறுவனங்களான மகிந்திரா அண்ட் மகிந்திரா, டிவிஎஸ் குழுமம் உள்பட பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களும் அவை சார்ந்து எண்ணற்ற துணை நிறுவனங்களும், உதிரி பாகங்கள் உற்பத்தியில் பல நூறு சிறிய, நடுத்தர நிறுவனங்களும் செயல்படுகின்றன.

வாகன உற்பத்தி கடும் பாதிப்பு

இந்நிறுவனங்களின் வாகன உற்பத்தியில் வரலாறு காணாத பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புற பொருளாதாரம் சீரழிவதால் டிராக்டர் விற்பனை கடந்த ஏப்ரல் – ஜூன் மாதங்களில் மட்டும் 30.98 சதமானம் சரிந்துள்ளது. இருசக்கர வாகனங்கள் ஏப்ரல் – ஜூன் மாதங்களில் 11.7 சதவிகிதம் குறைந்துள்ளது. அதேபோல் கார்கள் விற்பனை கடந்த மாதங்களில் 35.95 சதவிகிதம் குறைந்துள்ளது. வணிக வாகனங்களுடைய விற்பனையும் 9.5 சதவிகிதம் குறைந்துள்ளது. வேன்கள் விற்பனை மிக மோசமாக 45.58 சதமானம் குறைந்துள்ளது. சென்னை, பெங்களூரூ உட்பட நாடு முழுவதும் ஆட்டோமொபைல் துறையில் இயங்கும் பெரும்பாலான தொழிற்சாலைகள் வாரம் சில நாட்கள் உற்பத்தியை நிறுத்தி விட்டன என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் ஒவ்வொரு நாளும் வெளியாகி வருகின்றன. பல லட்சம் தொழிலாளர்கள் வீதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதில் 90 சதவிகிதம் தொழிலாளர்கள் இளம் பட்டதாரிகள் மற்றும் பொறியாளர்கள்.

தமிழகத்தில்...
 

மோட்டார் வாகனத்துறை நெருக்கடியால் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளது தமிழகம் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் வாகன உற்பத்தி கம்பெனிகள் மூடுவிழாவை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளன. இந்நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை உற்பத்தி செய்து தரும் 500க்கும் அதிகமான சிறு-குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. மேலும் இன்ஜினியரிங், நூற்பாலைகள், துணி ஆலைகள், ஆயத்த ஆடை உற்பத்தி, சர்க்கரை ஆலைகள் போன்ற தொழிற்சாலைகளும் நெருக்கடியில் சிக்கி திணறிக் கொண்டுள்ளன. இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பு. ஏராளமான சிறு-குறு நடுத்தர தொழிற்சாலைகள் திவால் அடைந்து வருகின்றன. பல்லாயிரம் குடும்பங்கள் நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் விழிபிதுங்கி தவிக்கின்றனர். இத்தகைய நிலைமை குறித்து தமிழக அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை. இருக்கும் தொழிற்சாலைகள் மூடப்படும் ஆபத்தான நிலையில் புதிய தொழிற்சாலைகள் துவங்க அந்நிய முதலாளிகளுக்கு நேரில் அழைப்பு விடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் புறப்படவுள்ளாராம். 

நாசப்படுத்திய ஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கம்

ஏன் இந்த அவல நிலை என்ற கேள்வி எட்டுத்திக்கிலும் எழும்பியுள்ளது. 

  • இதுகாறும் கடைப்பிடித்து வந்த உலக, தாராளமய மற்றும் கார்ப்பரேட்மயக் கொள்கைகள் நாட்டை திவால் நிலைக்கு தள்ளியுள்ளன.
  • மோடி அரசின் பண மதிப்பு நீக்க பயங்கர நடவடிக்கையும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பும் ஒட்டுமொத்த சிறு-குறு தொழில்கள் மற்றும் வணிகத்துறையை நாசப்படுத்திவிட்டது.  
  • சேவைத்துறை உள்பட அனைத்துத் துறைகளிலும் அதானி, அம்பானி உள்ளிட்ட மோடியின் கூட்டுக்களவாணி கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒட்டுமொத்த தொழில்களும் நிலங்களும் லாபமும் குவியும் விதத்தில் திட்டங்கள் அரங்கேற்றப்பட்டன.
  • பொதுத்துறை வங்கிகள், பொது நிதி நிறுவனங்கள் மோடியின் கார்ப்பரேட் நண்பர்களால் சூறையாடப்பட்டன. பல லட்சம் கோடி ரூபாய் கடன்பெற்ற பெரும் கார்ப்பரேட்டுகள் அதை திருப்பிச் செலுத்தாமல் நாட்டைவிட்டே ஓடினார்கள். இதன் விளைவாக வங்கிகள் நிலைகுலைந்தன. 

- இவற்றின் ஒட்டுமொத்த விளைவே முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலைபறிப்பு, அதன் தொடர்விளைவு பெருவாரியான மக்களின் கைகளில் பணப்புழக்கம் வீழ்ச்சி.

நெருக்கடியை தீவிரமாக்கும் அரசின் அறிவிப்புகள்

அன்றாடம் வயிற்றுப்பாட்டை நிரப்புவதற்கே பொருட்களை வாங்க திராணியற்றவர்களாக பெருவாரியான இந்திய மக்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. இந்த நிலையில் சிறு உற்பத்திப் பொருட்களின் விற்பனை வீழ்ச்சியில் துவங்கி படிப்படியாக மோட்டார் வாகன பொருட்கள் விற்பனை வீழ்ச்சியில் வந்து நிற்கிறது. நிலைமை மோசமாகி மோட்டார் வாகனத்துறை தள்ளாடிக் கொண்டுள்ள நிலையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் மேலும் இத்துறையை நிலைகுலையச் செய்துவிட்டன. மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் மூலம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள பதிவு கட்டணம், இன்சூரன்ஸ் கட்டணம் மேலும், 2030க்குள் முற்றிலும் மின்சார வாகனங்களாக மாற்றுவது, புகை மாசு அதிகம் கொண்டுள்ள பிஎஸ்4 எனப்படும் தற்போதைய வாகனங்களை புகைமாசு குறைக்கப்பட்டுள்ள பிஎஸ்6 ரக வாகனங்களாக ஏப்ரல் 2020க்குள் மாற்றப்பட வேண்டும் போன்ற அறிவிப்புகள் இத்துறையின் நெருக்கடிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

பெருமுதலாளிகளின் கூப்பாடு

ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார, தொழில் நெருக்கடி  மேலும் தீவிரமடைந்து நாட்டின் ஒட்டுமொத்த இருப்பை உலுக்கிக் கொண்டுள்ள நிலையிலிருந்து நாட்டையும், ஏழை, எளிய மக்களையும் காப்பாற்றுவதற்கான உருப்படியான நடவடிக்கைகளை மத்திய மோடி அரசு எடுக்க குரெலெழுப்ப வேண்டிய அவசர அவசியம் ஏற்பட்டுள்ளது. இதே நேரத்தில் இந்திய நாட்டு பெருமுதலாளிகள், இந்த நெருக்கடிகளை காரணம் காட்டி தங்களுக்கு மேலும் சலுகைகளையும், மானியங்களையும் அதிகரிக்க வேண்டுமென குரலெழுப்பி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக ஊடகங்களும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். பிரதமரின் சுதந்திர தின உரையில் உற்பத்தியாளர்களை பாதுகாக்க வேண்டுமென கூறியது இதன் வெளிப்பாடே. தற்போது தமிழ்நாட்டில் பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் இவர்களுக்கு ரூ. 1 லட்சம் கோடி சலுகைகள் வழங்க வேண்டுமென அறிக்கை விடுத்துள்ளார். 

மாற்றுக் கோரிக்கைகள்

இந்த இக்கட்டான நிலையிலிருந்து இந்திய நாட்டையையும், மக்களையும் பாதுகாப்பதற்கான மாற்றுக் கோரிக்கைகளை நீண்ட காலமாகவே இடதுசாரி கட்சிகள் முன்வைத்து வற்புறுத்தி வருகின்றன. மரணப் படுக்கையில் கிடக்கும் விவசாயத்துறையை மீட்டு அதற்கு கூடுதலான மூலதனத்தை ஒதுக்குவது, பாசன மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவேற்றுவது, இயற்கை இடர்பாடுகளிலிருந்து விவசாயத்தைக் காப்பாற்ற பாதுகாப்பான பயனுள்ள பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை நிறைவேற்றுவது, விவசாய விளைப் பொருட்களுக்கு லாபத்துடன் கூடிய விலை தீர்மானித்து அதை உறுதி செய்வது, விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை உறுதித் திட்டத்தை திறம்பட நிறைவேற்றுவது, நில விநியோகம், வீட்டுமனைப்பட்டா, குடியிருப்பு வசதிகள் போன்றவைகளை நிறைவேற்றி கிராமப்புற மக்களின் வாழ்வில் ஒளியேற்றுவதின் மூலம் அவர்களது வாங்கும் சக்தியை அதிகப்படுத்திட வேண்டும்.  நாடு முழுவதும் உள்ள தினக்கூலி உழைப்பாளிகளுக்கு குறைந்தபட்ச சம்பளமாக ரூ. 18000 உறுதி செய்வது, வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். 

கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆக்டோபஸ் கரங்களால் அழிந்து கொண்டுள்ள சிறு-குறு நடுத்தர தொழில்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள தொழில் நெருக்கடியைப் போக்க வங்கி கடன் தள்ளுபடி மற்றும் குறைந்த வட்டியில் கடன், இந்நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உறுதியான சந்தை ஏற்பாடு, ஜி.எஸ்.டி வரிவிலக்கு உள்ளிட்டவைகளை வழங்குவது அவசர, அவசியமானதாகும்.  இந்திய நாடு சந்திக்கும் இன்றைய நெருக்கடிகளுக்கு மேற்கண்ட நடவடிக்கைகளே விடிவை ஏற்படுத்தும்.






 

;