tamilnadu

img

ஜே.என்.யூ முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் கைது 

தில்லி வன்முறை வழக்கில் ஜே.என்.யூ முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பல்கலைக்கழக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
மோடி அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆங்காங்கே மக்கள் தன்னெழுச்சியாக குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தலைநகர் தில்லியில் உள்ள ஷாகீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக போராட்டம் நடந்த போது போராடுபவர்களை சுட்டுத்தள்ளுங்கள என்று மத்திய இணை அமைச்சர்  அனுராக் தாகூர் சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசினார். இதேபோல் மத்திய அமைச்சர் கபில் மிஸ்ராவும் வன்முறையை தூண்டும் வகையில் பேசினார். இதைத்தொடர்ந்து வடகிழக்கு தில்லியில் கலவரம் மூண்டது. இந்த வன்முறைகளில் 54 பேர் கொல்லப்பட்டனர். 600 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 97 பேருக்கு துப்பாக்கிச் சூட்டு காயங்கள் இருந்தன. இது தொடர்பாக தில்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் மாணவர் அமைப்புகளின் தலைவர்களான மீரான் ஹைதர், சஃபூரா ஜார்கர் உள்ளிட்டோர் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தில்லி வன்முறை வழக்கில் மொத்தம் 751 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1575 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
இதைத்தொர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பெயரும் துணை குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜே.என்.யூ முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித்திடம் காவல்துறையினர் 11 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் உபா சட்டத்தின் கீழ் கடந்த ஞாயிறன்று இரவு கைது செய்யப்பட்டார். 
இந்நிலையில்  'ஸ்டேண்ட் வித் உமர் காலித் ' என்ற ஹேஸ்டேக் இன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.