tamilnadu

img

20,000 பேரை வெளியேற்றும் ஐடி நிறுவனங்கள்.... செலவினக் குறைப்பு என்ற பெயரில் நிர்க்கதியாக்கப்படும் இளைஞர்கள்

புதுதில்லி:
இந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அள்ளித் தந்து கொண்டிருக்கும் ஒருதுறையாக, தகவல் தொழில்நுட்பதுறை விளங்கிக் கொண்டிருக்கிறது.ரயில், விமான, சினிமா டிக்கெட்புக் செய்வது, ரத்து செய்வது, உணவுக்கு ஆர்டர் செய்வது, ஆன்லைன் ஷாப்பிங், நெட்ஃப்ளிக்ஸில் படம் பார்ப்பது, வங்கிக் கணக்கில் பணம்போடுவது- எடுப்பது, அரசுத் துறைசான்றிதழ்கள், அரசுப் பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது, ஆதார் கார்டு, ரேசன் கார்டு, பான் கார்டு பெறுவது என அனைத்தும் தற் போது ஆன்லைன் வழிக்கு மாற்றப்பட்டு விட்ட நிலையில், தகவல் தொழில்நுட்பத் துறை தவிர்க்க முடியாததாகி விட்டது.

இந்தியாவின் ஐடி துறையில் சுமாராக 50 லட்சம் பேர் வேலைபார்த்துக் கொண்டு இருக்கின்றனர். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், விப்ரோ, இன்போசிஸ், எச்சிஎல்டெக்னாலஜீஸ், டெக் மஹிந்திரா, காக்னிசண்ட் போன்ற பெருநிறுவனங்கள் மட்டும் சுமார் 13 லட்சம்பேருக்கு வேலை வாய்ப்புகளைக் கொடுத்துக் கொண்டு இருக்கின் றன. இந்நிலையில், கொரோனா நெருக்கடி, இளைஞர்களுக்கான ஐடி துறை வேலைவாய்ப்பிலும் நெருப்பை வைத்துள்ளது.இந்திய ஐடி துறையின் பெரு நிறுவனங்களாக இருக்கும் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, காக்னிசண்ட், எச்சிஎல் டெக் போன்ற கம்பெனிகள் மட்டும் சுமார் 20 ஆயிரம் ஊழியர்களை (Head Count) பணியிலிருந்து வெளியேற்ற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 4 ஆயிரத்து 788 பேரையும், இன்போசிஸ் 3 ஆயிரத்து 138 பேரையும், டெக்மஹிந்திரா 2 ஆயிரம் பேரையும், விப்ரோ ஆயிரத்து 82 பேரையும், காக்னிசண்ட் 10 ஆயிரம் பேரையும்குறைக்க முடிவு செய்துள்ளதாகஒரு கணக்கும் வெளியாகியுள்ளது. இது ஐடி ஊழியர்களுக்கு எதிர் காலம் மீதான மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி புதிய வேலைவாய்ப்புகளை எதிர்நோக்கிக் காத்திருப்போரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.ஊழியர்களை வெளியேற்றுவது மட்டுமன்றி, புதிதாக யாரையும் வேலைக்கு எடுப்பது இல்லை என்றும், ஏற்கெனவே வேலைக்கு எடுத்தவர்களுக்கும் தற்போதைக்கு நியமன உத்தரவு வழங்குவது இல்லை என்றும் ஐடி நிறுவனங்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஐடி துறையின் போக்கை, ஆட்டோமேஷன் (Automation), மெஷின் லியர்னிங் (Machine Learning), ஆர்டிபீஷியல் இண்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) போன்ற முன்னணி டெக்னாலஜிகள் அசுரத்தனமாக மாற்றத் தொடங்கியுள்ள நிலையில், ஆட்டோமேஷன் மூலம் பணியிடங்களையே குறைத்து விடும் நடவடிக்கையை ஏற்கெனவே ஐடி நிறுவனங்கள் துவங்கிவிட்டன. தற்போது அதனை தீவிரப்படுத்த முடிவு செய்திருப்பதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.இவையெல்லாம் இருந்தாலும் செலவினக் குறைப்புதான் ஐடி நிறுவனங்கள் எடுத்துள்ள உடனடி ஆயுதம் என்றும், செலவு குறைப்பு என்றாலே ஆட்குறைப்புதான் அவர்களின் முதல் தேர்வாக இருப்பதாகவும் ஊழியர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.உதாரணமாக காக்னிசண்ட் நிறுவனம், தனது லாபத்தையும், வியாபாரத்தையும் சரிசெய்யும் திட்டத்தின் கீழ் சுமாராக 17 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியதை சுட்டிக்காட்டுகின்றனர்.

;