tamilnadu

img

ஆயுதங்கள் கடத்தல் அதிகரிப்பு.... மாநிலங்களவையில் டி.கே. ரங்கராஜன் குற்றச்சாட்டு

சட்டவிரோதமான முறையில் ஆயுதங்கள் கடத்தி வரப்படுவதையும், உள்நாட்டிலேயே ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுவதையும் தடுக்கக்கூடிய விதத்தில் நம் காவல்துறை, எல்லைக் காவல்படை மற்றும் கடலோர எல்லைக் காவல் படை பலப்படுத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் கூறினார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் செவ்வாயன்று ஆயுதங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு 2019 மீதான விவாதத்தில் கலந்து கொண்டு டி.கே.ரங்கராஜன் பேசியதாவது:

சட்டவிரோதமாக ஆயுதங்கள் இந்தியாவிற்குள் கடத்தி வரப்பட்டு, அமோகமான முறையில் சந்தைப்படுத்தப்பட்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் அவ்வப்போது வருவது மிகப்பெரிய பிரச்சனையாகும். எவ்வாறு இவர்கள் இந்தியாவிற்குள் ஆயுதங்களைக் கடத்தி வருகிறார்கள்? எப்படி நீங்கள் அதைக் கட்டுப்படுத்தப் போகிறீர்கள்? நாட்டின் எல்லை மாநிலங்களின் வழியாக சிறிய அளவிலான அதிநவீன ஆயுதங்கள் கடத்தி வரப்படுவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சில மாநிலங்களிலும் சட்டவிரோதமான முறையில் ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இவ்வாறு எந்த எந்த மாநிலங்களில் சட்டவிரோதமான முறையில் ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்று அமைச்சர் இந்த அவைக்குத் தெரிவிக்க முடியுமா? சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்படும் துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களைவிட உரிமங்கள் பெற்று துப்பாக்கிகள் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை சதவீதம் குறைவாகும். சில சட்டவிரோத தொழிற்சாலைகள் சிறிய ரக 10-12 துளை துப்பாக்கிகளையும் (10-12 bore short guns) மற்றும் கைத்துப்பாக்கிகளையும் (rifles) தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.

இத்தகைய சட்டவிரோத ஆயுதங்கள் கொள்ளைச் சம்பவங்கள், கடத்தல் சம்பவங்கள் மற்றும் வழிப்பறி சம்பவங்களில் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. 4 கோடி பேர் சொந்தமாகவே துப்பாக்கிகள் வைத்திருப்பதாகவும், இவர்களில் 85 சதவீதத்தினர் உரிமங்கள் பெறாமல் சட்டவிரோதமான முறையிலேயே ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இவை அனைத்தும் செய்தித்தாள்களில் வெளியானவைகளாகும். நாட்டில் நடைபெறும் கொலை சம்பவங்களில் 90 சதவீத சம்பவங்களில் இத்தகைய சட்டவிரோத ஆயுதங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. அரசாங்கம் இப்போது கொண்டுவந்திருக்கும் திருத்தத்தின்மூலமாக இந்த சட்டவிரோத நடவடிக்கைகளையெல்லாம் எப்படி கட்டுப்படுத்தப்போகிறது?
மேலும் துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் கலந்துகொள்பவர்கள், துப்பாக்கிகள் வைத்திருப்பதாகவும், இவர்களைப் போல் பலர் போலி சான்றாவணங்களைக் கொண்டு, விளையாட்டுப் போட்டிகளில் பயன்படுத்தும் துப்பாக்கிகள் மட்டும் அல்லாது, சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பயன்படுத்தப்படாத துப்பாக்கிகளையும் இறக்குமதி செய்வதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய சட்டவிரோத இறக்குமதிகளைத் தடை செய்திடவும் நாட்டில் சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்களையும் தடுத்திட இயலாத விதத்தில்தான் இந்த அரசு இருக்கிறதா என்று அமைச்சர் தெரிவிக்க வேண்டும். இவற்றைத் தடுத்திட எவ்விதமான நடைமுறையை அரசு பின்பற்ற இருக்கிறது? எந்த மார்க்கங்களில் இந்த மாதிரியான சட்டவிரோத ஆயுதங்கள் இந்தியாவிற்குள் கடத்தி வரப்படுகின்றன? இவற்றிற்கு விடை தேவை. இவ்வாறு சட்டவிரோதமான முறையில் ஆயுதங்கள் கடத்தி வரப்படுவதையும், உள்நாட்டிலேயே ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுவதையும் தடுக்கக்கூடிய விதத்தில் நம் காவல்துறை பலப்படுத்தப்பட வேண்டும். எல்லைக் காவல்படையும், கடலோர எல்லைக் காவல் படையும் பலப்படுத்தப்பட வேண்டும்.இவ்வாறு டி.கே.ரங்கராஜன் கூறினார்.

;