tamilnadu

img

தமிழக காவல் அடைப்பு முகாமில் அவதிப்படும் வெளிநாட்டு முஸ்லிம்கள்.. மோசமாக நடத்தும் தமிழக அரசு

புதுதில்லி:
நாட்டில் வேறெங்கும் இல்லாத நிலையில் முஸ்லிம்களை தமிழ்நாடு அரசு, காவல்அடைப்பு முகாமில் அடைத்து வைத்திருக்கிறது என்றும் தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவு மோசமான முறையில் நடந்துகொண்டிருக்கின்றனர் என்றும் வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இதுகுறித்து ‘தி ஒயர்’ இதழில் சுகன்யா சாந்தா எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கம் வருமாறு:

இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழ்நாடு மட்டும் முஸ்லிம்களை காவல் அடைப்பு முகாம் ஏற்படுத்தி அடைத்து வைத்திருக்கிறது. வெளிநாட்டைச் சேர்ந்த தப்லிகி ஜமாத் உறுப்பினர்களை இவ்வாறு அடைத்து வைத்திருக்கிறது. ஏப்ரல் 11 ஆம் தேதியிலிருந்து இவ்வாறு அடைத்து வைத்திருப்பவர்களுடன் பேசுவதற்குக்கூட அனுமதிக்கப்படுவதில்லை என்று அவர்களின் குடும்பத்தினர் கூறுகிறார்கள். இவ்வாறு கடைப்புக் காவல் முகாம் ஏற்படுத்தி இருப்பது அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமான செயல் என்று சமூக உரிமைக்காகப் போராடும் வழக்குரைஞர்கள் கூறுகிறார்கள்.

மார்ச் 25இன் முதல் வாரத்தில், எத்தியோப்பியாவைச் சேர்ந்த முக்தார் (வயது 25) என்பவரும், அவருடைய மனைவிஃபெத்யா என்பவரும் அவர்களின் தலைநகரான அட்டிஸ் அபாபாவிலிருந்து புதுதில்லி வந்திருந்தனர். அவர்கள் புதுதில்லியில் நடைபெற்ற தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு,  தமிழ்நாட்டிற்கு வந்து சில ஊர்களைச் சுற்றிப்பார்த்துவிட்டு, மீண்டும் தங்கள் நாட்டிற்கு அதே மாதத்தின் கடைசியில் திரும்பிடத் திட்டமிட்டிருந்தனர்.இவர்களின் நான்கு வார பயணம் என்பது, பிரதமர் திடீரென்று சமூக முடக்கத்தை அறிவித்தபின்னர் துயரார்ந்தவிதத்தில் மாறிவிட்டது. இதனைத் தொடர்ந்து, நாட்டில் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கே தப்லிகி ஜமாத் மாநாடுதான் காரணம் என்பதுபோல் மதவெறித்தீ விசிறிவிடப்பட்டது. மேற்படி தம்பதிகள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து அடைக்கப்பட்டிருக்கும் 129 பேர்களில் முக்தாரும், ஃபெய்தாவும் இருவர். இவர்கள் அனைவருமே வலுக்கட்டாயமாக சிறையில் அடைக்கப்பட்டார்கள்.  இவர்களுக்காகவே பார்ஸ்டல் பள்ளி அவசர அவசரமாக அடைப்புக் காவல் முகாமாக மாற்றப்பட்டது. இவர்களில் 31 ஆண்களும் பெண்களும் புழல் சிறை எண் 2-க்கு விசாரணைக் கைதிகளாகவும், பெண்களுக்கான சிறப்பு சிறைக்கூடத்திற்கும் அனுப்பப்பட்டனர்.எத்தியோப்பியாவின் அட்டிஸ் அபாபாவிலிருந்து, முக்தாரின் குடும்பத்தினர் இவர்களின் நிலையைத் தெரிந்துகொள்ள பல வழிகளிலும் முயற்சித்தனர். முக்தாரின் சகோதரிஃபோசியா, ‘முக்தார் தம்பதிகளின் குரலைக் கேட்பதற்குத் தங்களுக்கு மூன்று மாதங்களுக்கும் மேலானது’ என்று கூறுகிறார்.

மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களிலிருந்து 35 நாடுகளிலிருந்து 3,500க்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவிற்கு வந்து இவ்வாறு சிக்கித் தவித்துக்கொண்டிருக்கின்றனர். இவர்களில் உடனடியாக அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பல வயது முதிர்ந்தவர்களும்அடங்குவர். ஆனாலும், தமிழ்நாட்டில் அடைக்கப்பட்டிருக்கும் 129 வெளிநாட்டினரின் நிலைமைகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும், இவர்களில் குறைந்தபட்சம் 12 பேர் இளம் தாய்மார்கள் என்றும் கூறப்படுகிறது.மலேசியாவைச் சேர்ந்த 10 பேர், அவர்களின் அரசாங்கம் அனுப்பி வைத்த சிறப்பு விமானத்தில் ஏற இருந்த ஒரு சிலநிமிடங்களுக்கு முன், அவர்களை ஏறவிடாமல் தடுத்து, கைது செய்யப்பட்டு, அடைக்கப்பட்டார்கள். 
அதிலிருந்து இவ்வாறு கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர் அனைவருமே எப்படியாவது தங்கள் நாட்டுக்குச் சென்றிடவேண்டும் என்று சட்டபூர்வமாக முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்கள். ஆனாலும் ஆட்சியாளர்களோ அவர்களின் வேண்டுகோளைக் கேட்கக்கூடிய நிலையில் இல்லை.

புதிய காவல் அடைப்பு முகாம்
அவர்கள் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் கழிந்த பின்னர், சென்னை உயர்நீதிமன்றம் முதலில் அவர்களில் தாய்லாந்தைச் சேர்ந்த ஆறு பேருக்கு மே 6 அன்று ஜாமீன் வழங்கியது. ஆயினும் தமிழ்நாடு அரசாங்கம் அவர்களை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்குப் பதிலாக, புதிதாக ஓர் அரசாணை வெளியிட்டு, அவர்களைத் தொடர்ந்து காவல் அடைப்பில் வைத்திருக்கிறது. மே 8 அன்று மாநில ஆளுநரால் வெளியிடப்பட்டுள்ள அந்த அரசாணையில் இவர்களை காவல் அடைப்பில் வைத்திருப்பதற்கு, எவ்விதமான காரணத்தையும் தெரிவிக்கவில்லை.“சுமார் 3,500 பேர், வெளிநாட்டினர் சட்டத்தின்கீழ் விசாநெறிமுறைகளை மீறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தபோதிலும் வேறெந்த மாநிலமும் இவ்வளவு மோசமாக நடவடிக்கைகளை எடுத்திடவில்லை. ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டபோதிலும், பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவு மோசமானமுறையில் நடந்துகொண்டிருக்கிறது,” என்று வழக்கறிஞர் ஷேசாத் கூறுகிறார்.

புழல் சிறையுடன் இருக்கின்ற பார்ஸ்டல் பள்ளியில் 38 பேர்களைத்தான் அடைத்து வைக்க முடியும்.  ஆனால் 129 பேர் அங்கே அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அங்கே அவர்களின் வாழ்நிலைமைகள் மிகவும் அசிங்கமாக இருப்பதாக அவர்களைப் பார்த்துவிட்டுத் திரும்பும் வழக்குரை ஞர்கள் கூறுகிறார்கள்.ஜூன் 29 திங்களன்று, இந்தியாவிற்கு பத்தாண்டு காலத்திற்கு வரத் தடை விதிக்கப்பட்டுள்ள பல வெளிநாட்டினர் சார்பாக மனு விசாரணைக்கு வந்த சமயத்தில், நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கார், தினேஷ் மகேஷ்வரி மற்றும் சஞ்சய் கன்னா ஆகியோரடங்கிய அமர்வாயம், “இந்த வெளிநாட்டினரின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டால், இந்தியாவில் அவர்களை ஏன் இன்னமும் வைத்திருக்க வேண்டும்? அவர்களை நாடு கடத்துங்கள். மேலும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் அளித்துள்ள கட்டளைகளின் வாசகங்களையும், விசா ரத்து செய்த விவரத்தையும் எங்களுக்குத் தெரிவிக்கவும்,” என்று கேட்டிருக்கிறது. ஜூன் 12 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வாயத்தில் உள்ள நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், “அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் ஏற்கனவே போதுமான அளவிற்கு அவதிப்பட்டுவிட்டார்கள். அவர்கள் வெளிநாட்டினராக இருந்தாலும்கூட, அவர்களுக்கும் அரசமைப்புச்சட்டத்தின் 21ஆவது பிரிவின்படி உயிர்வாழும் உரிமை யை அளித்திட வேண்டும்” என்றும் மனிதாபிமான அணுகு முறையுடன் கூறியிருக்கிறார்.     

“காவல் அடைப்பு முகாமில் அடைத்து வைக்கப் பட்டிருப்பவர்களுக்கு குடும்பத்தினருடன் முறையாகத் தொடர்பு கொள்ள வசதிகள் செய்து தரப்பட வேண்டும். சமையல் இடம் தனியாக ஏற்படுத்தித் தர வேண்டும். தண்ணீர்வசதி செய்துதரப்பட வேண்டும். ஆனால் இதில் எதையுமே அவர்களுக்கு செய்துதரவில்லை. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், இதர சிறைவாசிகளைவிட இவர்கள் மிகவும் மோசமாக நடத்தப்பட்டு வருகிறார்கள்” என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறுகிறார்.சென்னையில் உள்ள ஜமியா  காஸ்மியா அராபிக் கல்லூரி, இவ்வாறு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டினருக்கு தங்குவதற்கு இடம் அளித்திட முன்வந்தது. எனினும் மாநில அரசாங்கம் அதனைக் கண்டுகொள்ளவில்லை.உலகம் முழுதும் பல நாடுகளிலும் உள்ள இவர்களின் உறவினர்கள், இந்திய அரசாங்கம் “வகுப்புவாத அரசியல்” அடிப்படையில்  இவர்களுக்கு எதிராக விளையாடுவதைக் கைவிட்டுவிட்டு, இவர்களை அவரவர் நாடுகளுக்கு அனுப்பி வைத்திட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.  “நாங்கள் எப்போதும் இந்தியாவை நேசித்து வந்திருக்கிறோம். உங்கள் நாட்டை, அதன் அழகு மற்றும் விருந்தோம்பும் பண்புள்ள மக்களுக்காக என்றென்றும் நினைவுகூர எங்களை அனுமதியுங்கள். எங்கள் குழந்தைகளின் மீது இத்தகைய மனிதாபிமானமற்ற துன்பறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுங்கள்,” என்று ஹாசன் என்பவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

==தொகுப்பு : ச. வீரமணி====

;