tamilnadu

img

ஆதார் இல்லாவிட்டால் ரூ. 6 ஆயிரம் கிடையாதாம்.. வழக்கம்போல ஏமாற்றப்பட்ட விவசாயிகள்

புதுதில்லி:
டிசம்பர் மாதத்திலிருந்து வங்கிக் கணக்கில் ஆதாரை இணைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே பிரதமரின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் பணம் கிடைக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் விவசாயிகளின் வாக்குகளைக் குறிவைத்து, ‘பிரதான் மந்திரி கிசான் சம்மான் யோஜனா’ என்ற திட்டத்தை அறிவித்தார்.2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு 3 தவணைகளாக, தவணை ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரம் விகிதம் அவர்களின் வங்கிக் கணக்கில் மொத்தம் ரூ. 6 ஆயிரம் நேரடியாகப் பணம் வழங்குவதுதான் ‘பிரதான் மந்திரி கிசான் சம்மான் யோஜனா’ ஆகும்.

ஆனால், இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டதோடு சரி, 30 சதவிகித விவசாயிகளுக்குகூட பணப் பட்டுவாடா செய்யப்படவில்லை. 2019-20 நிதியாண்டில் இத்திட்டத்துக்கு மொத்தம் ரூ. 75 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், அக்டோபர் மாத இறுதிவரையில் ரூ. 27 ஆயிரத்து 937 கோடியே 26 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. 2018 டிசம்பர் முதல் 2019 மார்ச் வரையிலான காலத்தில் முதல் தவணை நிதியைப் பெறுவதற்கு ஆதார் இணைப்பு குறித்த கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. 
பின்னர், ஆதார் இணைப்புக்குக் காலதாமதம் ஆனதால் நவம்பர் 30 வரையில் அதற்கு அவகாசம் வழங்கப்பட்டது. அப்படியிருந்தும் விவசாயிகளுக்கு சொன்னபடி பணப்பட்டுவாடா நடக்கவில்லை. சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய், மோடி அரசிடம் அப்படியே இருக்கிறது.  இந்நிலையில், டிசம்பர் மாதம் முதல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆதார் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே நிதியுதவி வழங்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிவித்துள்ளார். 
விவசாயிகள் மத்தியில், இதற்கு கடும் அதிருப்தி எழுந்துள்ளது.  ஆதார் எண்ணைச் சாக்காக வைத்து, ரூ. 50 ஆயிரம் கோடி பணத்தையும் அரசு கஜானாவுக்கே திருப்பும் திட்டமாக, அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாகவும், இது தங்களை ஏமாற்றும் நடவடிக்கை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

;