tamilnadu

img

கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு சுந்தரய்யாவை ஈர்த்த எச்.டி.ராஜா - என்.ராமகிருஷ்ணன்

முதல் திருச்சி சதி வழக்கு என்று குறிப்பிடப்பட்ட தென்னிந்திய ரயில்வே போராட்ட வழக்கில் சிங்காரவேலர் திருச்சி சிறையிலிருந்த நேரத்தில் 1929ஆம் ஆண்டில் பம்பாய் வாலிபர் கழகத்தைச் (யூத்லீக்) சேர்ந்த எச்.டி.ராஜா சென்னைக்கு வந்தார். ஹரிஹர தர்மராஜா என்ற முழுப் பெயரைக் கொண்ட எச்.டி.ராஜா பம்பாயில் வசிக்கும் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர். மார்க்சிய கருத்துக்களினால் கவரப்பட்ட எச்.டி.ராஜா, பம்பாய் வாலிபர் கழகத்தில் தீவிரப் பங்கெடுத்து வந்தார். சென்னையில் வாலிபர் கழகத்தை உருவாக்கவும், வாலிபர்களையும், மாணவர்களையும் அதில் ஈர்த்து மார்க்சிய கருத்துக்களை பிரச்சாரம் செய்வதற்காகவும் அவர் சென்னைக்கு வந்தார். இத்தகைய தொடர்புக்காக அவர் முதலில் லயோலா கல்லூரியைத் தேர்ந்தெடுத்தார். சில மாணவர்களுடன் தொடர்பு கொண்டு ஒரு கூட்டத்தை கூட்டச் செய்து மார்க்சியத்தைக் குறித்து விளக்கினார். அதில் பி.ஏ., எம்.ஏ. வகுப்பில் படிக்கும் பல மாணவர்கள் கலந்து கொண்டனர். கம்மம்பாடி சத்யநாராயணா, பி.சுந்தரராமரெட்டி. வி.கே.நரசிம்மன் போன்றோர் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த பி.சுந்தரராமரெட்டிதான் பின்னாட்களில் பி.சுந்தரய்யா என்று மிகப் பிரபலமாக விளங்கிய கம்யூனிஸ்ட் தலைவராவார். அவர் அச்சமயத்தில் இண்டர்மீடியட் வகுப்பில் படித்து வந்தார். எச்.டி. ராஜாவுடனான சந்திப்பு குறித்து சுந்தரய்யா நினைவுப்படுத்திக் கூறுகிறார்:

‘... அந்நாட்களில் தான் எச்.டி.ராஜா எங்கள் மாணவர் விடுதிக்கு கம்யூனிஸ்ட் அறிக்கையையும்’ மற்ற சோசலிஸ்ட் நூல்களையும் கொண்டு வந்தார். அவர் வருகையையொட்டி நாங்கள் எங்கள் மாணவர் விடுதியில் ஒரு சிறிய கூட்டத்தை ஏற்பாடு செய்தோம். கம்யூனிசம் என்றால் என்ன என்பதை அவர் விவரித்தார். தன்னுடன் ஏதோ பத்திரிகையும் கொண்டு வந்திருந்தார். அதற்கு எங்களை சந்தா கட்டக் கோரினார். ‘எல்லாவற்றையும் விட ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ என்னுள் ஆழமான முத்திரையைப் பதித்தது. ஏற்கெனவே விலை, மதிப்பு மூலதனம் ஆகியவை அறிக்கை சிறுசிறு பிரசுரங்கள் படித்திருந்தாலும் ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ என்னிலே ஒரு மாபெரும் மாற்றம் ஏற்படுத்துவதிலே பிரதான பங்கு வகித்தது. விவேகானந்தர், காந்திஜி போன்றவர்களின் சங்கதி எப்படியிருந்தாலும் கம்யூனிஸ்ட் அறிக்கை சிறந்த பாதை காட்டுகிறதென்றே எண்ணினேன். எங்கள் நண்பர் குழாமை கம்யூனிஸ்ட் இயக்கத்திலே இணைக்க வேண்டுமென முடிவு செய்தோம். மற்ற மாணவர்களை வாலிபர் கழகத்தில் (யூத் லீக்) சேர்த்துக்கொள்ள வேண்டுமென கருதினோம். அதாவது அப்போதே நாங்கள் கம்யூனிஸ்ட் அனுதாபிகளாக மாறிவிட்டோம். கம்யூனிசம் குறித்து மேலும் தெரிந்து கொள்ள வேண்டுமென்பது எங்கள் நோக்கம்.

‘இந்தக் காலக்கட்டத்திலேயே ‘மீரட் சதி வழக்கு’ ஆரம்பமாயிற்று. சென்னையிலிருக்கும் எங்களுக்கு அதுபற்றிய விவரங்கள் தெரிவது சிரமம்தான்! ஆனால் பத்திரிகைகளில் வரும் சிறு குறிப்புகளையும் நாங்கள் சிரத்தையுடன் படித்து வந்தோம். பம்பாயிலிருந்தும் நாங்கள் கம்யூனிஸ்ட் புத்தகங்களை வரவழைப்போம். அக்காலத்தில் புத்தகங்களை வரவழைப்பது அவ்வளவு சுலபமல்ல! ரகசியமாகவும், திருட்டுத்தனமாகவும் வரவழைத்துக் கொள்ள வேண்டியதுதான்! அல்லது யாராவது புத்தகக் கடைக்காரருடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவர் மூலமாக பெரும் கஷ்டத்தோடு புத்தகங்களை வரவழைத்துக் கொள்ள வேண்டும்...’ இந்தச் சந்திப்பிற்குப் பின் சுந்தரய்யாவும், அவரது சக நண்பர்களும் மீரட் சதி வழக்கு விசாரணை, பகத்சிங் வெடிகுண்டு வழக்கு, பகத்சிங்கின் நெருங்கிய தோழர் ஜதீன்சக்கரவர்த்தி உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தது போன்றவை குறித்து பத்திரிகைகளில் வரும் விபரங்களை மிகுந்த ஆர்வத்துடன் படிக்கலாயினர். சுதந்திரப் போராட்ட இயக்கத்திலும் தீவிர நாட்டம் செலுத்த ஆரம்பித்தனர். சுந்தரய்யாவின் படிப்பு அதிக காலம் நீடிக்கவில்லை. 1930ஆம் ஆண்டில் சுதந்திரப் போராட்ட இயக்கம் வீறு கொண்டு எழலாயிற்று. உப்புச் சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம் போன்றவை தோன்றின. சுந்தரய்யா அதில் குதிக்க விரும்பினார். கல்லூரிப் படிப்பு உதவாக் கரையானது என்ற முடிவுக்கு வந்தார். ஆண்டுத்தேர்வு எழுதக்கூட அவருக்கு விருப்பமில்லை. ஆனால் குடும்பத்தினர் விருப்பத்திற்கிணங்க தேர்வு எழுதியதோடு படிப்பைக் கைவிட்டார். சுதந்திரப் போராட்டத்தில் இறங்கினார். ஜூன் மாதத்தில் கைது செய்யப்பட்டு இரண்டாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு 18 வயது நிரம்பாததால் தஞ்சாவூரிலுள்ள சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் (பார்ஸ்டல் பள்ளி) அடைக்கப்பட்டார். அங்கிருந்து திருச்சி சிறைக்கும். அதன் பின் ராஜமகேந்திரபுரம் சிறைச்சாலைக்கும் கொண்டு செல்லப்பட்டார்.

இவ்விரு சிறைச்சாலைகளில் இருக்கும்பொழுது சுந்தரய்யா, தன் சக தொண்டர்களுக்கு அரசியல் வகுப்புகள் நடத்தினார். அவற்றின் பிரதான கருத்து இதுதான். ‘காந்திஜி காட்டும் வழியிலே சுதந்திர இயக்கம் நாட்டின் விடுதலையைப் பெற முடியாது. ரஷ்யப் புரட்சியைப் போன்றதொரு புரட்சி இந்தியாவிலும் ஏற்பட்டால்தான் நமது லட்சியம் நிறைவேறும். எனவே நாம் விடுதலையான பிறகு ரஷ்யப்புரட்சி குறித்து நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியிலே சேர்ந்து சோவியத் சமூக அமைப்பைப் போன்றதொரு சமூக அமைப்பை நம் நாட்டிலும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்’.

சுந்தரய்யா, ராஜ மகேந்திரபுரம் சிறையில் இருக்கும்பொழுது பகத்சிங்கின் சமூக தோழர்களும், பயங்கரவாதப் புரட்சியாளர்களாகவுமிருந்த சிவவர்மாவையும், விஜயகுமார் சின்ஹாவையும் அங்கே சந்தித்துப்பேசும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. சிவவர்மா, அப்பொழுது பயங்கரவாதத்திலிருந்து மார்க்சியத்தை நோக்கி வரத் தொடங்கியிருந்த காலம். அவருடனான சந்திப்பும், சுந்தரய்யாவுக்கு உதவியாக இருந்தது. 1931ஆம் ஆண்டில் காந்திஜி- வைஸ்ராய் இர்வின் உடன்பாடு ஏற்பட்டதையொட்டி போராட்டம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து சுந்தரய்யாவும் அவரது அணியினரும் மார்ச் மாதத்தில் விடுதலை செய்யப்பட்டனர். காந்திஜி இயக்கத்தை பாதியில் நிறுத்தியது சுந்தரய்யாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. சுந்தரய்யா தன்னுடைய படிப்பைத் தொடர வேண்டுமென்று அவரது தாயார் விரும்பினார். காங்கிரஸ் இயக்கத்தை நிறுத்திவிட்டதால் நீ ஏன் மீண்டும் கல்லூரியில் சேர்ந்து படிக்கக்கூடாது? காங்கிரஸ் மீண்டும் இயக்கத்தைத் தொடங்கினால் நீ அதில் சேர்ந்து கொள்ளலாம் இல்லையா என்று அவர் கேட்டது சுந்தரய்யாவுக்கு நியாயமானதாகத் தோன்றியது. பெங்களூரில் உள்ள மூத்த சகோதரி வீட்டில் தங்கிப் படிக்க சம்மதம் தெரிவித்தார். ஆனால் அதற்கும் ஒரு நிபந்தனை விதித்தார். கதராடை உடுத்தவும், ராட்னத்தில் நூல் நூற்கவும் அனுமதி தந்தால்தான் படிக்க முடியுமென்று கண்டிப்பாகக் கூறினார் சகோதரியின் கணவர் அதற்குச் சம்மதித்து வீட்டில் தனியாரிடம் ஒதுக்கிக் கொடுத்தார். அவர் அச்சமயத்தில் மாவட்ட நீதிபதியாக இருந்தார். சுந்தரய்யாவின் படிப்பு அதிக காலம் நீடிக்கவில்லை. விரைவிலேயே முற்றுப்பெற்றது. கம்யூனிஸ்ட் இயக்கம் மீண்டும் அவரை ஈர்த்தது.

;