tamilnadu

img

தங்க கடத்தல் வழக்கு... குஞ்ஞாலிக்குட்டியின் உறவினர் கைது

மலப்புறம்:
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் வழியாக அரசுமுறை பார்சலில் தங்கம் கடத்த முயன்ற வழக்கில் முஸ்லீம்லீகின் தலைவர் பி.கே.குஞ்ஞாலிக்குட்டி யின் நெருங்கிய உறவினரான மலப்புறம் மாவட்டம் பெருந்தல்மன்னா அருகில் உள்ள வெட்டத்தூர் கவலயைச் சேர்ந்த பூக்காட்டில் ரமீஸ் (32) என்பவரை சுங்கத்துறையினர் கைது செய்தனர். தங்க கடத்தல் வழக்கில் இதுவரை நடந்தவற்றில் முக்கிய நகர்வாக இந்த கைதை சுங்கத்துறையினர் மதிப்பீடு செய்துள்ளனர். 

இதற்கு முன்பும் இவர் தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அரசியல் செயல்வாக்கை பயன்படுத்தி தப்பித்துக்கொள்வது இவரது வழக்கம். இவர்முஸ்லீம் லீக் தலைவரான குஞ்ஞாலிக்குட்டி, கேரள முன்னாள் சபாநாயகர் சக்கீரி அகமது குட்டி ஆகியோரின் நெருங்கிய உறவினராவார். குழந்தைப்பருவம் முதல் வளைகுடாவில் வாழ்ந்த இவருக்கு அங்கு வியாபாரம் உண்டு. 2015இல் கோழிக்கோடு விமானநிலையத்தில் கடத்தல் தங்கத்துடன் கைது செய்யப்பட்டார். இவர் மீது மான் வேட்டையாடிய வழக்கும் நிலுவையில் உள்ளது. 

மலப்புறத்திலிருந்து சுங்கத்துறையினர் கைது செய்த இவரை தனி வாகனத்தில் கொச்சியில் உள்ள ஆணையர் அலுவலகத்துக்கு கொண்டு வந்து கைது செய்யப்பட்டதை உறுதி செய்தனர். தங்க கடத்தல் வழக்கில்ஏற்கனவே கைது செய்யப்பட்ட சரித்தும் இதே அலுவலகத்தில்தான் உள்ளார். இருவரிடமும் விசாணை நடத்தப்பட்டது. ஏற்கனவே, சரித்திடமும் அவரது மனைவி அபர்ணா, நான்காம் குற்றவாளியான சந்தீபின் மனைவி சவுமியா ஆகியோரது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

சிசிடிவி காட்சிகள்
திருவனந்தபுரம் விமான நிலைய சரக்கு முனையத்தில் உள்ள 23 சிசிடிவி பதிவுகளைசனியன்று சுங்கத்துறையினர் பெற்றுக்கொண்டனர். ஜுலை 9 ஆம் தேதி இந்த காட்சிகளை சுங்கத்துறையினர் கேட்டனர். அன்றைய தினமே அவற்றை வழங்க சரக்கு முனைய நிர்வாகம் (எஸ்ஐஇ) தயாராக இருந்தது. ஆனால், சனியன்று சுங்கத்துறை உதவி ஆணையர் நேரில் சென்று ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை பெற்றுக்கொண்டார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பல்வேறுதேவைகளுக்காக இரண்டு முறை சுங்கத்துறையினர் தங்களுக்கு தேவையான பதிவுகளை பெற்றுக்கொண்டதாக சரக்கு முனையபொது மேலாளர் தெரிவித்தார். தங்கம் கள்ளக்கடத்தல் நடந்த பார்சலின் ஏர்வே பில்லில் ‘டிப்ளோமேட்டிக் பேக்கேஜ்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  இந்த பார்சல் ஜுலை 1 முதல் 5 வரை சரக்கு முனையத்தில் தனியாக பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தது. தங்க கடத்தல் வழக்குடன் தொடர்புள்ள முக்கியமான காட்சிகள் சிசிடிவி பதிவுகளில் இருக்கலாம் என கருதப்படுகிறது. 

;