tamilnadu

img

விமானங்களிலேயே வைஃபை வசதி செய்து தர மத்திய அரசு அனுமதி

இந்தியாவில்  விமானத்திலேயே வைஃபை வசதிகளைச் செய்து தர விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. 
செல்போன்  பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில் ரயில் நிலையங்களில் மட்டுமின்றி ரயில்களிலும் வைஃபை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அதேபோல் சில ஆம்னி பேருந்துகளிலும்கூட வைஃபை வசதி செய்து தரப்பட்டுள்ளது.
இந்நிலையில் பயணிகளுக்காக விமானங்களிலும் வைஃபை வசதி செய்து தர, விமான நிறுவனங்களுக்கு தற்போது மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியுள்ளதாவது:
"பயணிகள் விமானத்தில் பயணிப்பவர்கள் இணைய சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். விமானத்தின் பைலட்கள் இதனை அனுமதிக்கலாம்.
விமானத் தளத்தில் பயணிகளுக்குப் பயன்படும் வகையில் நிறுவனங்கள் வைஃபை சாதன வசதியைச் செய்து தரலாம்.
மேலும், விமானத்தில் பயணிகள் பயணம் செய்யும்போது, மடிக்கணினி, ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட் வாட்ச், ஈ-ரீடர் அல்லது கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கான மின்னனு சாதனங்களின் பயன்பாடு ஆகியவற்றை ப்ளைட் மோட் அல்லது ஏரோபிளேன் மோடில் வைத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்''. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.